பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

நீதி

நீதி


இதயம் இல்லா ஊரிலே நீதி உள்ள மனிதரா.
தேசம் விடிகின்றது நாசம் தொடங்குகின்றது.
பாசம், வார்த்தையிலே மட்டுமே பொழிகின்றது.
கொடியவன் கைகளில் தானே நீதி செத்து மடிகின்றது.
பாசாங்கு செய்பவன் வாழ்வு தானே உலகையே ஆள்கின்றது.
கேடுகெட்ட மனித இனம் பாவத்தை செய்கின்றதே போட்டிபோட்டு.
எவனிடம் நீதி கேட்ப்போம் எல்லாமே அநீதி தானே.
பணம் படைத்தவனிடம் வாய் பிளந்துதானே நிக்கின்றார்கள் நீதிமான்கள்.
கடவுள் பெயரைச்சொல்லியே கயவத்தனம் செய்யும் மனிதா,
சிந்தித்து பார் சிதை ஏறிய பின்பும் உன் நாமம் வாழுமா?
பிறந்த பயனாக ஒரு நன்மையாவது செய்யடா ??

கவிஞர் இராஜேந்திரகுமார்

காலம்

காலம்



கரைந்து போக துடிக்கும் உண்மைகள்.
வீனடிக்கின்றதே மனித இனம் ஏன் தானோ?
பொண்ணான நேரங்கள் மீண்டிடுமா எமக்காக,
காலடி வைப்பதை நேர்த்தியாக வைத்துப்பார்,
உன்னால் முடியாதது உண்டோ இந்த பூமியிலே,
ஓடிக்கொண்டு தான் இருக்கும் ஓய்வின்றி,
உனக்காக மாற்றிவிட்டாலே போதுமே உன்னடி சாயுமே,
வேர்வை சிந்தியும் வீணாய் போகிறதே என்று யோசிக்கின்றாயா?
உண்மை உன்னைவிட்டு போகவில்லை அதனை மட்டும் யோசி,
கரைந்து போகும் அதனை நிறுத்த முடியாது அது இயற்கை தானே,
காலம் உனக்காய் மாறும் போது உண்மையை மட்டும் மறக்காதே.

கவிஞர் இராஜேந்திரகுமார்

கண்ணீர்

கண்ணீர்

இயற்கை படைத்ததா இதயம் இல்லாதவர் தந்ததா.
காரணம் இல்லா கயவர்களின் காணிக்கையா.
யாருக்காக இந்த நீரோட்டம் மனிதவாழ்வில் மட்டும் ஏன் நிலை மாற்றம்.
பெண்கள் வாழ்வில் கூடப்பிறந்ததென்பது சரிதானா.
காலங்கள் மாறியும் செந்நீர் மட்டும் மாறவில்லையே.
திருந்தாத மனிதன் புரியாத போதனையா.
புரிந்துணர்வு இல்லாமல் புழுவாய் மாறுவது ஏன் தானோ.
காதல் கொண்டும் நீராய் வடிக்கின்றாய்.
கழுத்தை நீட்டியும் கண்ணீராய் மாறுகின்றாய்.
பாவத்தின் வேதனை மாறும் பொழுது பந்தாக்களும் மாறட்டுமே


கவிஞர் இராஜேந்திரகுமார்

ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்!

ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்!



வாழ்க்கையில் ஒரு முறையாவது சிலரை சந்தித்து விட வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படி சந்திக்க விரும்பும் நபர்கள் அவரவர் தன்மையைப் பொருத்து இருக்கும். சிலர் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகையரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் விளையாட்டு வீரர்களை சந்திக்க ஆசைப்படுவார்கள். சிலர் மகான்களையும், சிலர் பிரபலங்களையும் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நபரை மட்டும் சந்திக்க யாரிடமும் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் எல்லோராலும் எப்போதும் தவிர்க்கவே படுகிறார். ஒருவேளை அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வருமானால் அச்சமயங்களில் உடனே வேகமாக விலகி ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு நபரே இல்லை என்பது போல வேறு யாரையாவது பார்க்க விரைகிறார்கள். அந்த ஒருவரை சந்திப்பதைப் போல மிகக் கசப்பான அனுபவம் இல்லை என்கிற அளவு தப்பியோட பல வழிகளைத் தேடுகிறார்கள். வெகு சொற்பமான விதிவிலக்குகளைத் தவிர இது நம் எல்லோராலும் செய்யப்படுவது தான். அந்த நபரை நாமும் பார்ப்பதில்லை. அவரை மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை.

யாரந்த நபர்? நீங்கள் சந்தித்தே ஆக வேண்டியிருந்தாலும் எப்போதும் உங்களால் தவிர்க்கப்படும் அந்த நபர் யார்? அது வேறு யாருமல்ல நீங்கள் தான்! வெளிப்புறத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் அல்ல அது. யாராலும் முழுவதுமாகக் காண முடியாத உள்ளே இருக்கும் உண்மையான நீங்கள்!

வெளியே இப்படித் தெரிய வேண்டும், அப்படித் தெரிந்தால் தான் அழகு, மதிப்பு எல்லாம் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் மனிதன் தன் சுயரூபத்தை கூடுமான அளவு அடுத்தவரிடமிருந்து மறைத்துக் கொள்ளப் பார்க்கிறான். நாளடைவில் அந்தத் தோற்றமே அவனுக்கு மிக முக்கியமானதாக மாறி விடுகிறது. உலகமும் அந்தத் தோற்றத்தையே பார்க்கிறது, விமர்சிக்கிறது, மதிப்பிடுகிறது. உள்ளே உள்ள நிஜம் கற்பனையால் கூட ஊகிக்க முடியாத அளவு ஆழமாக அமுக்கப்படுகிறது.

காலப்போக்கில் மனிதன் அந்தத் தோற்றத்தையே பிரதானப்படுத்துகிறான். அதையே வளர்த்துகிறான். அதையே மெருகூட்டுகிறான். அடுத்தவர்களை அதையே நிஜம் என்று நம்ப வைக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். கடைசியில் தானும் அதையே நிஜம் என்று நம்ப முயற்சிக்கிறான். ஓரளவு வெற்றியும் பெறுகிறான். ஆனால் உள்ளே உள்ள நிஜத்திற்கும் வெளியே உள்ள தோற்றத்திற்கும் இடையே உள்ள தூரம் நீண்டு கொண்டே போகின்றது.
பல நேரங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை என்னுமளவு வித்தியாசப்படுகிறது.

வெளியே புனித நூல்களை உதாரணம் காட்டி ஆன்மீகக் கடலில் ஆழ்த்தும் சில நபர்கள் உள்ளே சாக்கடையில் ஊறிக் கிடக்கிறார்கள். வெளியே அன்பையும், கருணையையும் போதிக்கும் சிலர் உள்ளே கொடூரமாக இருக்கிறார்கள். நாகரிகத்தின் அடையாளமாக காணப்படும் எத்தனையோ பேர் உள்ளே அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லா விட்டாலும் ஒருசில அபூர்வ விதிவிலக்குகள் தவிர எல்லாருமே ஓரளவாவது வெளித்தோற்றத்திற்கு எதிர்மறையான சிலவற்றையாவது உள்ளே மறைத்து வாழ்கிறார்கள்.

எல்லா அந்தரங்கங்களையும் அனைவருக்குமே அறிவித்து விட வேண்டியதில்லை தான். அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள அவசியமில்லை தான். மற்றவரை பாதிக்காத தனது அந்தரங்கங்களைப் பிறரிடமிருந்து மறைப்பது அவரவர் உரிமை என்றே சொல்லலாம். ஆனால் உள்ளே உள்ள நிஜமான உங்களை நீங்களே அறியாமல் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

வெளித் தோற்றங்களால் இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் பிறரை நம்ப வைப்பது மிக சுலபம். ஆரம்பத்தில் பிறரை நம்ப வைக்க முயற்சிக்கும் ஒரு மனிதன் பின் தானே அதை நம்ப ஆரம்பிக்கும் போது உண்மையான மகிழ்ச்சியையும், மன நிறைவையும் இழக்க ஆரம்பிக்கிறான். ஏனென்றால் உண்மையான மகிழ்ச்சியும், மனநிறைவும் தன்னைத் தானே காண மறுக்கும் ஒரு மனிதனுக்கு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்கு ஒரு போதும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு வெற்றிடத்தை அவனுக்குள் அவன் உணர ஆரம்பிப்பது அப்போது தான்.

பலர் அந்த வெற்றிடத்தைப் பணத்தால் நிரப்பப் பார்க்கிறார்கள், புகழால் நிரப்பப் பார்க்கிறார்கள், போதையால் நிரப்பப் பார்க்கிறார்கள், அடுத்துவர்களை முந்துவதால் நிரப்பப்பார்க்கிறார்கள். ஆனால் அவ்வப்போது நிரம்புவது போல் தோன்றும் அந்த வெற்றிடம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றிடமாகவே மாறி நிற்கும்.


எனவே உங்களுக்குள் இருக்கும் அந்த நிஜமான ‘உங்களை’ அடிக்கடி சந்திக்க மறுக்காதீர்கள். அந்த சந்திப்பு எவ்வளவு கசப்பான அனுபவமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். உள்ளதை உள்ளபடி காண்பதில் உறுதியாய் இருங்கள். அங்கே ஏராளமான பலவீனங்கள் இருக்கலாம். பெருமைப்பட முடியாத பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் தயங்காமல் கவனியுங்கள். இருப்பதை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனிருக்கிறது, எப்படி உருவாயிற்று, அதை எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் ஆழமாகச் சிந்தியுங்கள். உள்ளதென்று உணர்வதை நம்மால் எப்போதுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆழமான, நேர்மையான சுய பரிசோதனையால் எதையும் அறியவும் முடியும். அறிய முடியுமானால் அந்த அறிவு மாறுவது எப்படி என்ற வழியும் தெரியும். ஆனால் இல்லை என்று நினைத்து விட்டால் மாறுதல் என்றுமே சாத்தியமில்லை.

வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான். உண்மையான மன நிறைவை உணர ஆரம்பிக்கின்றான். நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும் போது அவன் உணரும் அமைதியே அலாதியானது. ஆனால் இதற்கெல்லாம் உள்ளே உள்ள நிஜம் அடிக்கடி சந்திக்கப்பட வேண்டும், சிந்திக்கப்பட வேண்டும். அதை மறுப்பதும், தவிர்ப்பதும், மறப்பதும் வாழ்க்கையை என்றும் அதிருப்தியாகவும், துக்ககரமாகவுமே வைத்திருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!

ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!



சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-2

ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார்.

அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே அவரைச் சந்தித்தவுடன் ஏதோ ஒரு விசேஷ சக்தி அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பால் ப்ரண்டன் அவரிடம் வலிய சென்று பேசினார். ஆரம்பத்தில் ப்ரம்மா அவர் வந்து பேசியதை அவ்வளவாக விரும்பவில்லை. ஹத யோகியான ப்ரம்மா அவரை ஒரு இடைஞ்சலாகவே நினைத்தார். ஆனால் பால் ப்ரண்டனுடைய உண்மையான ஆர்வத்தையும், அவர் இந்தியா வந்த காரணத்தையும் அறிந்த பின் ப்ரம்மா அவரிடம் யோகாவைப் பற்றிப் பேசினார்.

பால் ப்ரண்டன் அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்பினார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதில் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."

பால் ப்ரண்டனுக்கு ப்ரம்மா சொன்னது வித்தியாசமாக தெரிந்தாலும் உண்மை என்றே தோன்றியது. (இன்று தகுதியில்லாதவர்கள் பெற்ற விஞ்ஞான ஞானம் எத்தனை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைப் பார்க்கும் போது நம் முன்னோர்களின் சிந்தனை சரியென்றே நமக்கும் தோன்றுகின்றன அல்லவா). தன்னுடைய ஆர்வம் வெறும் பொழுது போகாதவனின் தற்காலிக ஆர்வம் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார் பால் ப்ரண்டன். ப்ரம்மா அவருடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்குப் பல யோக நுணுக்கங்களை விவரித்தார். முக்கியமாக ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி இந்தியர்களின் யோகா முறையில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அது ஏன் என்பதையும் விளக்கினார். ".... இயற்கை மனிதனுக்கு ஒரு நாளுக்கு 21600 மூச்சுகளை அளந்து தந்திருக்கிறது. அதை அவசரமாகவும், தவறான முறையுடனும் பயன்படுத்துகிறவன் அந்த அளவையும் கடந்து மூச்சுக்களை உபயோகித்து தன் ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான். ஆனால் நிதானமாக, ஆழமாக, தாளலயத்துடன் மூச்சு விடும் மனிதன் அந்த மூச்சால் ஆரோக்கியத்தை வளப்படுத்திக் கொள்வதோடு வாழ்நாளையும் அதிகப்படுத்திக் கொள்கிறான்"

பின் ஒரு நாள் ப்ரம்மா பால் ப்ரண்டனுக்குத் தான் கற்றிருந்த வித்தைகளைக் காண்பிக்க ஒப்புக் கொண்டார். ப்ரம்மா பால் ப்ரண்டனிடம் தன் நெஞ்சில் கை வைத்து இதயத் துடிப்பைக் கண்காணிக்கச் சொன்னார்.

பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். ப்ரம்மாவின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் ஏழு நிமிடங்கள் ப்ரம்மாவின் இதயத்துடிப்பே நின்று போனது. பால் ப்ரண்டன் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். அவர் அறிவின்படி இது மரணமே. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரம்மா சிறிது நேரம் மூச்சு விடுவதையே நிறுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் வியப்பு அதிகமாகிக் கொண்டே போனாலும் பால் ப்ரண்டனுக்கு இது நிஜம் தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. அங்கிருந்த கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து ப்ரம்மாவின் மூக்கருகே வைத்துப் பார்த்தார். ஒருவேளை லேசாகவாவது மூச்சு விட்டால் கண்ணாடியில் ஆவி படியும் அல்லவா? ஆனால் என்ன ஆச்சரியம். கண்ணாடியிலும் மூச்சுக் காற்று படியும் தடயம் இல்லை. சிறிது நேரம் கழித்து ப்ரம்மாவின் இதயம் மறுபடி துடிக்க ஆரம்பித்தது. ப்ரம்மா இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தார்.

பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியம் என்று ப்ரம்மாவிடம் கேட்டார். இது இயற்கைக்கு எதிர்மாறாக இருக்கிறதே என்ற சந்தேகம் அந்த ஆங்கிலேயர் மனதில் பிரதானமாக இருந்தது.

ப்ரம்மா சொன்னார். "இமயமலையில் சில வௌவால்கள் இருக்கின்றன. அவை பனிக்காலத்தில் இமயமலையில் உள்ள குகைகளில் தொடர்ந்து சில காலம் அடைந்து கிடக்க நேரிடும். அப்போது பனித்தூக்கம் என்றழைக்கப்படும் உறக்கத்தில் ஆழ்ந்து விடும் அந்த வௌவால்கள் அந்த உறக்க காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்தி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை விழிப்பது வெளியே போகக் கூடிய அளவு சீதோஷ்ணம் மாறுகையில் தான். அவை மூச்சு விட ஆரம்பிப்பதும் அப்போது தான்.

அதே போல் இமயமலையின் பனிக்கரடிகள் அதிக பனிக்காலத்தில் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று விடுகின்றன. அப்போது அந்தப் பனிக்கரடிகள் உயிரற்ற சடலங்களாகவே காட்சியளிப்பனவாக இருக்கும். அதே போல் சில வகைப் பனிநாய்கள் உறைபனிக்காலங்களில் உணவு கிடைக்காத நிலை ஏற்படும் போது பதுங்குகுழிகளில் மாதக்கணக்கில் உறங்குவனவாக இருக்கின்றன. அப்போது அவை மூச்சு விடுவதில்லை அல்லது நீண்ட இடைவேளைக்கு ஒரு முறை மூச்சு என்று விடுகின்றன். அப்படி அந்த விலங்குகள் கூட மூச்சு விடுவதைச் சில காலம் நிறுத்தி வைக்க முடியும் போது மனிதனால் ஏன் முடியக் கூடாது?"

இமயமலையில் வாழும் விலங்குகளுக்கு அந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இயற்கை அளித்த அந்த வரப்பிரசாதம் அந்த மூச்சு விடாமல் இருக்கும் காலம். ஆனால் மனிதன் விஷயம் அப்படியில்லையல்லவா? ஆனால் உண்மையில் முன்பொரு காலத்தில் லாகூரில் பக்கிரி ஒருவர் மகாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒரு சமாதிக்குள் இருந்து பின் உயிர்த்து வந்தது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றும் ப்ரம்மா தெரிவித்தார்.

பால் ப்ரண்டன் விசாரித்ததில் அந்தச் செய்தி உண்மை என்று தெரிந்தது. 1837 ஆம் ஆண்டு அந்தப் பக்கிரி உயிரோடு சமாதி ஆக ஒப்புக் கொண்டார். லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங், சர் க்ளாட் வேட், டாக்டர் ஹோனிக்பெர்ஜர் போன்ற முக்கியமான சாட்சிகள் மற்றும் பலர் முன்னிலையில் உயிரோடு சமாதி செய்யப்பட்டார். மஹாராஜா ரஞ்சித் சிங் ஏமாற்று வேலை எதுவும் இதில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சீக்கிய சிப்பாய்கள்கள் மாறி மாறி ஒருவராவது அந்த சமாதியில் இரவும் பகலும் காவல் காக்குமாறு பார்த்துக் கொண்டார். நாற்பது நாட்கள் கழிந்து சமாதியைத் தோண்டிய போது அந்தப் பக்கிரி உயிரோடு வெளிவந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது சில ஆதாரபூர்வ களஞ்சியங்களில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. முழு விவரங்கள் கல்கத்தாவில் உள்ள வரலாற்றுக் களஞ்சியத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.

பால் ப்ரண்டனின் தேடல் காட்டிய மற்ற மனிதர்கள் இன்னும் வித்தியாசமான சக்திகள் பெற்றிருந்தார்கள். அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?

(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்