பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 11 June 2011

நட்பு

நட்பு



காலங்களின் கனவுகளை நிஜமாக்கும் சக்திகள் தானே.
இரத்த சொந்தங்களை விட உரிமை எடுத்து உறவாடும் உணர்வுகளே
நண்பர்கள் தாங்கி செல்லும் வசந்தங்கள்
வாழ்க்கையில் ஆறுதல் தூண்கள் தானே.
பள்ளி வாழ்க்கை தொடக்கம் பரலோகம் போகும் வரைக்கும்
நண்பர்கள் தானே துணை நிட்பார்கள் .என்றும் தாங்கிச்செல்வார்கள் .
வாழ்வில் எதனை சேர்த்தோம் கொண்டுபோக
நண்பர்களை மட்டும் சேர்த்தால் வாழ்ந்திடலாமே நிம்மதியாய்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணப்பொழுதில் அனைத்திடுவார்களே .
அந்த நண்பர்கள் தினம் தானே இன்று நினைத்து பாக்கிறேன்
நினைவலைகளில் அந்த கனவலைகளை.


கவிஞர் இராஜேந்திரகுமார்

கனவு

கனவு





மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.


கவிஞர் இராஜேந்திரகுமார்

அவளின் நினைவுகள்

அவளின் நினைவுகள்


காதல் வந்தும் சொல்லாமல் என்னை
கட்டி போட்டு சென்றாயே நியாயமா .
வாய் திறந்து பேசமால் கண்ணால் என்னை
வெட்டி சாய்த்த்தையே இது உனக்கு தகுமா.
உன் மௌனம் களையும் நேரம் என் வாழ்வில்
வசந்த காலம். உன்”உம்”எனும் ஒற்றை
வார்த்தைக்காய் காலத்தை நான் கடத்தி
செல்கிறேன்.என் சஹியே.
என் உணர்வுக்கு உணர்ச்சியை தந்தவள் நீயே….
என் வயதுக்கு …சாட்சியாய் இருப்பவளும் நீயே….
நீ இல்லை என்றால் நான் இங்கு நான் இல்லை.
நீயே என் வாழ்வின் எல்லை.


by karthikraghavendran

இரவின் அவஸ்தைகள்

இரவின் அவஸ்தைகள்


மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடி பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய் என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம் திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாககிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
புரியவில்லை அது தெரியவில்லை..என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளி சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை விட்டு
சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதை எல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னை காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை..
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….

என் இதயம் தேடும் இதயம் நீ தானே…

என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..

சில நேர பிரவுகளில் நான் செத்து பிழைக்கிறேன்

வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பையோ.?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.


by karthikraghavendran

சிரிப்பு

சிரிப்பு



பிறப்புக்க்ம் இறப்புக்குமான இடைவெளியை

சிறப்பிக்கும் ஒரே செயல் – சிரிப்பு ,

அகத்தில் தோன்றும் நினைவுகளின்

புற வெளிப்பாடு – சிரிப்பு

முகத்தை அழகாக்கும் ஒரு

அழகு சாதனம் – சிரிப்பு ,

சிரித்து பார்,

சிறகுகள் முளைக்கும் ,

இறகுகள் விரியும்,

சிறகுகளை விரித்து சந்தோஷ

வானில் பறக்க எத்தனிப்பாய்,

கார்மேகுத்துள் ஒளிந்து கண்ணாமூச்சி

ஆடும் கதிரவனை நீ ரசிப்பாய் ,

என்றும் ஒன்றாய் கூடி களிக்கும்

பறவை கூட்டத்தின் ஒற்றுமையை கண்டு வியப்பாய் ,

நீரோடையின் சலசலப்பில்

புதுராகங்கள் கேட்டுணர்வாய் ,

கருநீலசாலையில் நட்சத்திர

பூக்களை எண்ணி நகைப்பாய் ,

படபடக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கையிலே

பரபரக்கும் இந்த உலகை நீ மறந்திடுவாய் ,

பச்சை கம்பளம் விரித்த வயல் வெளிபோல

உன் எண்ணங்கள் பசுமையாகும்,

வாஞ்சையுடன் தலை கோதும் தாயின்

அரவணைப்பை சிரிக்கையிலே நீ உணர்வாய் ,

மழலையின் அழகு சிரிப்பு

மகுடத்தில் உன்னை ஏற்றும் ,

அரும்பு மீசை சிரிப்பு

உன் பருவத்தை எடுத்துக்காட்டும் ,

தனிமையில் சிரிப்பு

உன் காதலை உலகுக்கு எடுத்துரைக்கும்,

பொக்கை வாய் சிரிப்பு

அன்பின் அடையாளமாய் விளங்கும்,

வெற்றியில் மௌன சிரிப்பு

உன் புகழை பாடும்,

தோல்வியின் கோப சிரிப்பு

உன்னை செதுக்கி சிலையாக்கும் ,

ஏளன சிரிப்பை மட்டும் நீ விட்டொழி

அது உன்னை மனிதனாக்கும்,

பூக்களின் சிரிப்பு கணிகளின் பிரசவத்தில் ,

ஏழையின் சிரிப்பு

புரட்சியின் வெற்றி திலகம்,

அடிமையின் சிரிப்பு

சுதந்திரத்தின் வெளிப்பாடு ,

காலத்தின் சிரிப்பு மரணத்தின் அத்தியாயம்……:):):):):):):):):)


by karthikraghavendran

கேள்விகள்

கேள்விகள்



நதியோடு மழை கொண்ட நட்பை

யார் அறிவர்,

மழை மண்ணோடு பேசும் பாஷையை

யார் அறிவர்,

பூவோடு வண்டு கொண்ட உறவை

யார் அறிவர்,

அவரே என்னுள் நீ யார் என்று

உனக்குரைப்பார் ,

புரியாத பல கேள்வியை என்னுள் நீ எழுப்பிவிட்டாய்,

கேள்வியே புரியாமல் பதிலை நான் தேடுகிறேன்

தூது

தூது

மூன்றாம் திங்களில் முறைத்தவளே,
காதலை நெஞ்சில் விதைத்தவளே,
காற்றையும் கண்ணால் கிழித்தவளே,
கவிதையாய் நெஞ்சில் நுழைந்தவளே,
மாலையில் மலராய் மலர்ந்தவளே,
என் மனதை சிரிப்பால் சிதைத்தவளே,
காவியத்தமிழாய் பிறந்தவளே,
கவின் மிகு அழகில் எனை …கவர்ந்தவளே,
மறந்தேன் எனை நானே,
மறைத்தாய் உன்னுள் எனையே,
பறந்தேன் என் நிலை மறந்தே,
உயிரை தொலைத்தேன் நொடியில்
நானே….அதுதானா…அதுதானா….
மனதை பிழியும் மகுடிச்சத்தம் கேட்டு
விழுந்தேன் அடி இதுதனா இதுதானா…..
மரணத்தை மரணித்தே உன்னோட வாழ துணிந்தேன்
அடி அதுதானா… அதுதானா…
மகரந்த சேர்கையில் விளைந்தவளே,
மணக்க துடிதேனடி உன்னை நினைக்கையிலே…!!!
அடி இது அதுதானா…??
முகிலே முகிலே…… தூது போ
என் மனதைச் சொல்ல தூது போ
கவியே கவியே தூது போ
என் காதலைச் சொல்ல தூது போ

KARTHIK V RAGHAV

காற்றில் கலந்திடவே

காற்றில் கலந்திடவே



அளவோடு உரையாட
ஆற்றலோடு கதைபேசு
அறிவோடு கைகோர்த்து
நீதியோடு நடை பழகு
திறம்பட செயல்பட
நெறிகளை கையிலெடு
பயிற்சியினை ஆயுதமாக்கு
முயற்சியினை கேடயமாக்கு
தடைகற்கள் தடுத்தால்
தயக்கமின்று எட்டியுதை
எதிரிகள் ஏராளம்
தாமதிக்காமல் சிதைத்திடு
சிந்தித்து பேசிட
சிறிதளவும் மறவாதே
போதனைகளும் வேதனைகளும்விட
சோதனைகளே சாதனைகள்தரும்
அச்சத்தை கண்டு என்றும்
அச்சம் கொள்ளாதே
சந்திக்கும் தோல்விகள்தான்
பயிற்சி முகாம்கள்
படுத்துறங்கு தோல்விகளோடு
நாளை வெற்றிக்காக போராட
காற்றிடம் கற்றுகொள்
அகப்படாமல் போரிட
ஆசானை தேடாதே
உனக்குள் ஒருவன்
ஒளிந்து கிடக்கின்றான்
உள்ளுக்குள் உறுதியோடு
சத்தமின்றி அவனைஎழுப்பு
சுத்தமான வீரனவன்
வெற்றிக்காக ஓடாதே
நீ பைதியக்கரனாவாய்
தோல்விகளுக்கு அஞ்சிடாதே
நீ முடங்கிவிடுவாய்
ஏன் இத்தனை போராட்டம்
எல்லாமே ஒரு கணம்தான்
மூச்சு நின்றால்
மொத்தமும் போச்சு
பின் ஏன் இத்தனை
பயிற்சியும் முயற்சியும்
போராட்டமும் ஏக்கமும்
தோல்வியும் வெற்றியும்
நெறிகளும் நீதிகளும்
எல்லாம் ஓர் நாள்
காற்றில் கலந்திடவே !!!


KARTHIK V RAGHAV

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.


புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா?

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது.

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

இதுவும் ஒரு சேவை தான்

இதுவும் ஒரு சேவை தான்..!


அது முடவர்களுக்குப் புகலிடம் தந்த மருத்துவமனையின் ஒரு பகுதி. பெரிய ஹாலில் கிட்டத்தட்ட இருபது முடவர்கள் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் எழுந்து நடமாட முடியாது. அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கட்டிலிலேயே கழிந்து விடும். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் அந்தக் கட்டிலில் இருந்து விடுபடுவது மரணத்தின் பிறகு மட்டுமே.

அந்த ஹாலில் ஒரே ஒரு ஜன்னல். அந்த ஜன்னல் அருகே உள்ள மேடான தளத்தில் இருக்கும் கட்டிலில் படுத்திருந்த மனிதர் மட்டுமே ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடியும். அவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியே நடப்பதை சத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்கும் போது மற்றவர்கள் வெளி உலகத்தைக் கற்பனையில் காண்பார்கள்.

தெருவில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள், தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களின் அழகு, சூரியோதயம், சூர்யாஸ்தமனத்தின் காட்சி, தெருவில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் என்று வெளியுலக வாழ்க்கையை ஜன்னல் அருகே உள்ள மனிதர் அழகாக வர்ணிப்பதை மற்றவர்கள் ரசித்துக் கேட்பார்கள். இப்படி அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அவர்களில் ஜன்னல் அருகே இருப்பவருக்கு அடுத்து தாழ் தளத்தில் இருப்பவருக்கு ஜன்னலோரத்தில் இருப்பவரைப் பார்த்து பொறாமை. 'இவருக்கு மட்டும் கற்பனையில் அல்லாமல் நேராகவே வெளி உலகைப் பார்க்க முடிகிறதே! இந்த ஆள் செத்தால் நாம் அந்த கட்டிலுக்குப் போய் விடலாம். நமக்கும் வெளி உலகை நம் கண்ணால் பார்த்து மகிழ முடியும்' என்று மனதில் புழுங்குவார்.

அவர் ஆசைப்பட்டது போலவே ஒரு நாள் அந்த ஜன்னலருகே இருப்பவர் இறந்து போனார். அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டு அந்தக் கட்டிலுக்குப் பொறாமைக்காரர் மாற்றப்பட்டார். பொறாமைக்காரருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இனிமேல் வெளியே நடப்பதைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குத் தான். மிகவும் ஆர்வத்துடன் அவர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். பெரிய சுவர் ஒன்று மட்டுமே வெளியே தெரிந்தது......

சுவர் மறைப்பதால் அங்கிருந்து வெளியே நடப்பது தெரிய வாய்ப்பேயில்லை என்ற போதும் முன்பு அந்த ஜன்னல் அருகே இருந்தவர் தன் கற்பனை வளத்தால் அங்கிருந்த மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தார்.... மற்றவர் வாழ்க்கைக்கு சுவை ஊட்டி இருந்தார்....

பலருடைய வாழ்க்கையும் அப்படி முடங்கிப் போவதுண்டு. வாழ்க்கை தேக்கமடைந்து நின்று விடுவதுண்டு. புதிதாக எதுவும் நடக்கவோ, எதிர்பார்க்கவோ முடியாத ஒரு பள்ளத்தில் வாழ்க்கை சிக்கிக் கொள்வதுண்டு. அந்த நேரங்களில் சிறிதாவது ஒரு ஆசுவாசத்தையோ, ஒரு சுவாரசியத்தையோ யாராவது தருவார்களேயானால் அதுவும் பெரிய சேவையே.

சிலர் என்றுமே பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களுடைய பிரச்சினை, மற்றவர்களுடைய பிரச்சினை, நாட்டின் பிரச்னை என்று அவர்கள் ஒரு இடத்தை விட்டுச் செல்லும் போது அங்கு ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள். சிலர் நகைச்சுவையாகவும், நல்ல விஷயங்களைப் பற்றியும், சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் கலகலப்பாகப் பேசி ஒரு லேசான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள்.

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையையும் நாம் நினைத்தால் ஓரளவாவது அழகுபடுத்த முடியும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் நம்பிக்கையூட்ட முடியும். அவர்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் சுலபமாக்கவோ, சுவாரசியமாக்கவோ முடியும். அதற்கு நாம் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. மற்றவர்களுடைய மோசமான நிலைமையை மாற்ற நமக்கு சக்தியில்லாமல் இருக்கலாம். மற்றவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால் நாம் மனம் வைத்தால் அவர்களை சிறிது நேரமாவது அவற்றை மறக்க வைக்க முடியும். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். கலகலப்பான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிலிருந்து மீண்டு மேன்மையான நிலைக்கு வந்திருக்கிற கதைகளை எடுத்துச் சொல்லலாம். நல்ல மனம் இருந்தால் இன்னும் எத்தனையோ வழிகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும். அப்படி செய்ய முடிவது ஒரு மகத்தான சேவை தான்.

- என்.கணேசன்