
தள்ளி தள்ளி ஒன்றொன்றாய் மரங்கள்
பூக்கள் நிறைய பூத்து குலுங்கியது ..
யாரும் பறிப்பார் இல்லை ..
என் வீட்டு தோட்டத்து பூக்களை
பறிக்க யாரும் வருவதில்லை ...
நான் ஒதுக்கபட்டவள்....
அவரவர்க்கு தேவை ஏற்படின்
என்னை தேடுவார்கள் ...
இல்லையேல் அனாதையாய்
இருக்கும் நிலை தான் ...
ஊருக்கு ஒதுக்கு புறமாய்
இருந்த என் வீட்டை எட்டிப் பார்க்க கூட
யாரும் விரும்புவதில்லை ....
என் பிறப்பை எண்ணி
கடவுளை நொந்துக் கொள்வேன் ..
எனக்கு ஏன் இந்த
ஈனப் பிறப்பை கொடுத்தான் ?
யோசிக்கையில் அவனின் இருமல் சத்தம் ....
இருள் சூழ்ந்து இருந்தது ....
தொலைவில் அவன் வருவது தெரிந்தது ...
போர்த்தி இருந்த போர்வையை
மீண்டும் உதறி போர்த்திக் கொண்டு
வந்துக் கொண்டிருந்தான் ...
அவன் மேல் எனக்கு கொள்ளை பிரியம் ...
நல்லவன் ... ... நாதியற்றவன் ...
அவனுக்கு எல்லாமே நான் தான் ..
என்னை விட்டால் அவனுக்கு என்று
துணை யாருமே இல்லை ...
அதனாலோ என்னவோ
அவன் தனக்குள்ளே பேசிக்கொள்வதை
எல்லாமே நான் கேட்டுக் கொண்டிருப்பேன் ...
என் வீட்டில் அவனும் அப்பப்போது
சற்று நேரம் கண்ணயர்வான்...
பாவம் அவன் என எண்ணிக் கொண்டேன் ...
ஆனால் என்னால் தான் அவனுக்கு
ஒரு நேர சோறு கூட போட முடியவில்லை ...
எதோ சாப்பிடுகிறான் ...வாழ்கிறான் ...
எனக்கு துணையாய் இருப்பவனும்
இவன் மட்டுமே ....
அவனை நான் நேசிக்கிறேன் ....
எப்பவும் என்னோடு இருக்கும் ஒரே ஜீவன் அவன் ...
பணக்காரன் ஏழை என்று பிரித்து பார்த்திடுவார் ...
அவனுக்கும் எனக்கும் அந்த கஷ்டமில்லை ...
நாங்கள் பணக்காரரும் இல்லை
ஏழையும் இல்லை ...
பரந்த மனசு அவனுக்கு ...
அவன் மூட்டிய நெருப்பில் இருந்து
கனன்ற நெருப்புகள் வானத்திலே மிதந்து
கும்மிருட்டில் நட்சத்திரங்களாய் கண் சிமிட்டியது ...
அவன் கண்ணிலே தெரிந்த சோகம் வலி
என்னை ஏதோ செய்தது ...
குப்பையாய் வளர்ந்து கிடந்த
தாடிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்...
அந்த நிலவு யாரோ ....?
நினைக்கையில் மனசு வலித்தது ....
ஆனால் ஏதோ ஒரு பந்தம்
அவனுக்கும் எனக்கும்
அதனால் தானோ என்னவோ
அவன் எப்பவும் என்னை விட்டு பிரியாமல்
என்னோடு தங்கி விட்டான் ....
அவன் சொந்த கதையை
என்னால் கேட்க முடியாதே ...
ஊருக்குள் பலருக்கு அவனை கண்டாலே பயம் ...
அவன் முகத்தில் சிரிப்பை காண்பதே அரிது ..
யாரிடமும் முகம் கொடுத்து பேசாத அவன் கூட
சில நேரம் சத்தமாய் பாடுவான் ...
அவனது குரல் அவ்வளவு இனிமையாய் இருக்கும் ...
அவனின் பாட்டு கேட்டால் என் வீட்டில் உள்ளவர்கள்
கண்ணுறங்கி விடுவார்கள் ...
சுகமான சில நினைவுகளால்
கனவுகளில் மிதப்பவர்கள்
நிஜமாகவே மிதப்பார்கள்
காற்றிலே நடப்பார்கள் ...
உறங்கி விட்டால்
நடப்பவைகள் தெரியவா போகின்றது
பாவம் அவர்கள் ....
இன்று புதிதாய் ஒரு பழைய லுங்கி அணிந்திருந்தான்
யாரோ கொடுத்திருக்கிறார்கள் ....
சிக்கு பிடித்த தலை முடி முனிவராய் தோற்றமளிக்க
அவன் செயல்களினால் கை கூப்ப தோணும் ...
செய்த பாவங்களை எல்லாம் போக்குவதற்க்கு
புண்ணியங்கள் செய்பவர்கள் மத்தியில்
இவன் செய்யும் புண்ணியத்தில்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்
இவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் ....
கிடைக்க வேண்டும் .. இல்லையேல்
கடவுள் என்றொருவன் எதற்க்கு ...?
மௌனமாய் நானும் கடவுளை மன்றாடுகிறேன்
அவனுக்காக ...
இல்லாத இடங்களில் அன்பை தேடி ..
இருக்கும் இடங்களை தொலைப்பவரும்
இங்கு உண்டு ....
மித மிஞ்சிய கோபத்தினால்
கண்ணை மறைத்து
தப்புகள் செய்தவரும் இங்கு உண்டு ...
தப்பென தெரிந்தே தப்பு செய்தவனும் இங்கு உண்டு ...
மேளங்கள் தாளங்களோடு வருபவரும்
எதுவுமே இன்றி வருபவனும்
அவனிடத்தில் ஒரே தராதரத்தில்
மதிப்பிட படுகின்றன ...
ஊருக்காக உழைப்பவர்களில்
இவன் தான் உசத்தி ...
தேவதைகள் வானிருந்து வருவதில்லை
தெய்வங்களே இவன் ரூபத்தில் வருகின்றன ...
இதற்க்கு மேல் அவனை புகழ
வார்த்தைகள் வருகுதில்லை நினைவுக்கு ...
அவனுக்கும் எனக்குமான நெருக்கம்
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ....
காதலோ .. பாசமோ.. நட்போ ... தெரியவில்லை
அதற்க்கெல்லாம் அப்பாற்பட்ட
பெயரே இல்லாத ஒரு வித உணர்வு ....
ஏதோ சத்தத்தில் திடுக்கிடுகிறேன் ...
நினைக்க முடியாத தருணத்திலே
அவன் கடுமையாய் இருமுகிறான் ..
அவன் கை கால்கள் அடித்துக் கொண்டன...
தூரத்தில் யாரோ போகிறார்கள் ..
அவனை கண்டும் காணாதது போல ....
என் குரல் அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை ...
ஆடி அடங்கி விட்டது அவன் உயிர் ....
ஸ்தம்பித்து போகிறேன் நான் ...
என் மடியில் அவனை ஏந்திக் கொண்டேன் ...
எப்பவுமே சிரிக்காத அவன் இதழ்களில்
மென்மையான புன்னகை ஒன்று
இழையோடி இருக்க கண்டு வியந்தேன் ...
பாவ பட்ட உலகை விட்டு சென்றதனால்
சிரித்தானோ ....?
மூளை கெட்ட மனிதர்களை நினைத்ததினால் சிரித்தானோ ?
அவன் பாடலை கேட்காத நிமிடங்களை நினைத்து கூட
பார்க்க முடியவில்லை ...
அணைத்து கொண்டேன் அவனை வாஞ்சையுடன் ...
கடவுளின் சித்தத்தில் அவனும் நானும்
புண்ணியம் தான் செய்தோம் ...
என் வீடும் ஓர் அநாதை ஆச்சிரமம் தான் ...
உயிரற்று போக ஒதுக்கி வைக்கும்
உடல்களை தகனம் செய்து
நிம்மதியான நிரந்தரமான
உறக்கத்தில் ஆழ்த்தி விட்டவன் அவன் ...
அதற்க்கு இடம் கொடுப்பவள் நான் ...ஆம்
அவன் வெட்டியான் ... நான் சுடுகாடு ....
அவனுக்குண்டு மரணம் ... என் மடியில் கண்ணுறங்க ...
எனக்குண்டா மரணம் ...?
இருந்தால் நான் யார் மடியில் கண்ணுறங்க ?????
அப்போ நான் ஆதரவற்றவளா...?
ஐயோ இனி எனக்கு யார் உண்டு ...?
இதோடு நானும் ஒழிந்தாலென்ன..
எனக்கொரு அழிவு கிட்டாதா ...?
நினைக்கும் போதே தூரத்தில்
ஓர் உருவம் என்னை நோக்கி
வந்து கொண்டிருந்ததை பார்த்தேன் ..,
அதே போர்வை .. அதே கனன்ற கண்கள்
எதையோ பறிகொடுத்தவன் போன்ற தோற்றம் ...
அதே போர்வை ..... ஆள் மட்டும் வேறு ....
கடவுள் என் அழுகுரலை கேட்டு இருப்பார் போலும்
எனக்காக அனுப்பி வைத்தான்
இன்னொரு துணையை
புது வெட்டியான் வந்து விட்டான் ....
நிம்மதியான நிரந்தர நித்திரையை
மனிதர்களுக்கு கடைசி மரியாதையுடன்
இனி அவன் கையால் ...
நான் நிம்மதியாய் பெரு மூச்சொன்று விடுகின்றேன் ....
தொலைந்து போன புன்னகையுடன்
அவனும் நானும் மட்டும் இன்னும் தொலையாமல்....!!!
No comments:
Post a Comment