பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 4 June 2011

கண்ணீர் இல்லை இதற்க்கு மேல் அழுவதற்கு

1.கண்ணீர் இல்லை இதற்க்கு மேல் அழுவதற்கு .




பேரனும் பூட்டனும் வாழ்ந்த நம் தேசம் ..
பெற்றோரும் சுற்றோரும் சூழ்ந்திருந்த தேசம் ...
அத்தனுக்கும் அம்மைக்கும் அழுக்கு வரா வண்ணம் .....
ஆற்றுவித்த நம் உயர்ந்த தேசம் ..........
இப்பொழுது எங்கே போயிற்று .............
நெருப்பிலெரிந்து சாம்பலாய்ப் போனதோ ........?

நம் உற்றார் சுற்றார் எங்கே...?
எங்கள் முகவரி விளங்க நின்ற
வீடுகள் எங்கே ..............?
அளவில்லா புகழ் வாய்ந்த ..
நம் ஊர்கள் எங்கே ...?
தெய்வங்கள் குடி இருந்த
கோவில்கள் எங்கே .....?
எல்லாம் நாசமாய்ப் போய்விட்டனவா .....?

காரூரும் வானம் எங்கே ....?
எரூரும் வயல்கள் எங்கே....?
தேரூரும் வீதகள் எங்கே ......?
நீரூறும் வாவிகள் எங்கே .......?
எல்லாமே அழிந்து விட்டனவா ...?

விழிகள் தூங்க மறுக்கின்றன ....
செவிகளில் மரண ஓலங்கள் கேட்கின்றன ...
உறவின் நினைவுகள் உயிரை உருக்குகின்றன .....
இறந்தவர் உறங்கிய கல்லறை சிதற ....
நம்மவர் மூச்சுகள் அதற்குள் அடங்குகின்றன ......
எம்மவர் விதியா காலத்தின் சதியா ...?

இரத்தமும் சதையும் நடைப் பாதைகளாய்ப் போனதேன் ....?
பாரத்தைக் கொடுத்தப் பாவம் பாடைகளை விரித்தேன் ....
விசித்திர வெடி குண்டே உன்னால் நம்மவர் வேருடன் சாய்ந்ததேன் ......?
அடுத்தொரு தலைமுறைக் காணாமல் போனதேன் ......?
நம்மவர் வாழ்க்கை கண்ணீரில் மிதந்ததேன் ........?

மழலைகள் சிதறினர் .......
பெரியவர் மடிந்தனர் .......
இளையவர் மறைந்தனர் .....
முற்றும் முழுதாய் .....
அழிக்கப் பட்டனர் ......
மாண்டவர் போக மிஞ்சியவர் யார் ....?
வெறும் நடைப் பிணங்கள் தானே ......

அழகான நம் தேசம் புதைக் குழி ஆனதா....?
விலையில்லா உயிர்களை கூண்டோடு அழித்ததா ....?
இறந்தோரை நினைத்து தினம் தினம் அழுவதா ...?
இருப்போரை நினைத்து நெஞ்சுருக்க துடிப்பதா .....?
சதியும் விதியும் எமனாய் வந்த காரணம் புரிவதற்கு .....
இல்லவே இல்லை கண்ணீர் இதற்க்கு மேல் அழுவதற்கு .....

தொகுப்பு :
சிந்து சிவசங்கர் .

இது நல்லதல்ல. நியாயமுமல்ல!

இது நல்லதல்ல. நியாயமுமல்ல!


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."

"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

"அதில்லை..."

"இதைத் தெரிந்து கொள்ளா விட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"

"இல்லை"

"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"

"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?

மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"

"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?

இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்து விடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்
நன்றி அபூர்வமாகிறது
ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி "மகராசனாயிரு, மகராசியாயிரு" என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும். இன்று பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்து பாருங்கள். ஏதோ கொடுத்த காசைத் திரும்ப வாங்குவது போல் சலனமே இல்லாமல் அவர்கள் நகர்வதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்கலாம். காசு தருவதற்கு முன்பாவது சில உருக்கமான வசனங்கள் வரலாம். காசு தந்த பின் நன்றி தெரிவிக்கும் பார்வையோ, வார்த்தைகளோ பெற்றால் அது அதிசயமே.

பிச்சைக்காரர்கள் வட்டத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்போது நன்றி என்கிற உணர்வு மிக அபூர்வமாகி வருகிறது எனலாம். குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடத்தில் என எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் அது மனிதனிடம் காணச் சிரமமான அபூர்வமான உணர்வாகி வருகிறது. பல சமயங்களில் நன்றி தெரிவிக்கப்படுவது கூட சம்பிரதாயமாகவும், வாயளவிலும் இருக்கிறதே ஒழிய அது ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.

தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவாக எடுத்துக் கொள்ளச் சொன்ன திருவள்ளுவர் வாக்கு ஏதோ வேற்றுக் கிரக சமாச்சாரம் போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு செல்வந்தரிடம் பெரிய பெரிய உதவிகள் வாங்கி வந்தார். அதைப் பற்றிப் பேச்சு வந்த போது அலட்டாமல் சொன்னார். "வேணும்கிற அளவு இருக்கிறது. தருகிறார்".

"அதற்கும் மனம் வேண்டுமே சார். இருக்கிறவர்கள் எல்லாம் தருகிறார்களா?" என்றேன்.

"அதுவும் வாஸ்தவம் தான். என்னோட சொந்தத் தம்பி வேணும்கிற அளவு வச்சிருக்கிறான். ஆனா எனக்கு நயாபைசா உபகாரம் கிடையாது"

இருப்பவர்கள் எல்லாம் நமக்குத் தந்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர நம்மை விடக் கீழே இருப்பவர்களுக்கு நாம் என்ன உதவி எந்த அளவு செய்கிறோம் என்கிற சிந்தனை சுத்தமாகப் பலரிடமும் வற்றி வருகிறது.

மேலும், தருபவன் எப்போதும் தந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

"அவன் முன்னை மாதிரி இல்லை" என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்" என்ற குறளுக்கெல்லாம் இப்போது ஆதரவு சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் பெற்றோரிடம் "நீங்கள் பெரிதாக என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதை நாம் சர்வ சகஜமாகப் பார்க்கிறோம். கடவுள் எத்தனையோ கொடுத்திருந்தாலும் கொடுக்காத ஒன்றைக் காரணம் காட்டியே 'கடவுள் எங்கே இருக்கார்? இருந்தால் எனக்கு இப்படி செய்வாரா?' என்று புலம்புவதைக் கேட்கிறோம்.

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் பிறரிடம் பெற்ற உதவிகளை உடனுக்குடன் மறக்கும் மனிதனுக்கு, தான் அடுத்தவருக்குச் செய்யும் கடுகளவு உதவிகளும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பது தான்.

இது ஒரு பெரிய மனப்பற்றாக்குறையே. நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே உருவாகக் கூடியது. பெருகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது இல்லாமல் இருப்பது உள்ளம் இன்னும் உயரவில்லை அல்லது உள்ளம் மரத்து விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அந்த விதத்தில் நம் மன வளர்ச்சியை அளக்கும் அளவுகோல் தான் நன்றியுணர்வு.

மேலும் நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெறத் தகுதியில்லாதவனாகிறான். எனவே இயற்கையின் விதி அவனுக்குத் தானாகக் கொடுப்பதைக் குறைத்து விடுகிறது. (அப்படி குறைக்கா விட்டாலும் அவன் பெற்றதை யாருக்காக சேர்த்து வைக்கிறானோ அவர்கள் அவனிடம் நன்றி காட்டாதபடி பார்த்துக் கொள்கிறது.) எனவே பெறும் எதற்கும் மனதார நன்றி தெரிவியுங்கள். நன்றியுடனிருங்கள். பெறுவது பெருகும். நல்ல விதத்தில் பலனும் தரும்.

- என்.கணேசன்

இனியொரு சுதந்திரம்!

இனியொரு சுதந்திரம்!
ஆங்கிலேயரின் அடிமைச் சங்கிலியிலிருந்து நாம் விடுபட்டு 62 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதை வருடாவருடம் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோமா?

ஒரு அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்ட நாம் இன்று எத்தனை அடிமைச் சங்கிலிகளில் கட்டுண்டிருக்கிறோம்? ஜாதி, மதம், மொழி, அறியாமை, பயம் என்று எத்தனை அடிமைச் சங்கிலிகள் நம்மைக் கட்டிப் போட்டிருக்கின்றன! அந்த அடிமைச் சங்கிலிகளை நாம் ஆபரணங்களாக அல்லவா அணிந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அன்று மகாகவி பாடிய பாடல் இன்றும் நம் நிலைக்குப் பொருத்தமாக அல்லவா இருக்கிறது?

கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி!

இன்றும் கூடி வாய் கிழியப் பேசுவதில் நம்மை மிஞ்ச ஆளுண்டோ? எத்தனை தான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்தாலும் எத்தனை தான் அவர்களிடம் அடிபட்டாலும் நாம் கோபித்துக் கொண்டதுண்டோ? அரசியலில் மாற்றம் கொண்டு வர முயன்றதுண்டோ? அந்தப் பாடலில் பாரதி ஊமைச்சனங்களடி, வாய்ச்சொல்லில் வீரரடி என்றெல்லாம் சூட்டிய பட்டங்களுக்கு நாம் இன்றும் பொருத்தமானவர்களே அல்லவா? எத்தனை தான் கல்வியிலும் விஞ்ஞானத்திலும் முன்னேறினாலும் அத்தனையும் நம் இரத்தத்தில் ஊறிய அடிமைத்தனத்தை அகற்றி விடவில்லையே.

நாம் கொஞ்சம் விழித்துக் கொள்வது போல் தெரிந்தால் அரசியல்வாதிகள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற சங்கிலிகளை வலையாக வீச, நாம் அவர்கள் எதிர்பார்ப்பது போல் சிக்கி நம்மை நாமே கட்டி சிறைபட்டுக் கொள்கிறோமே இதுவா சுதந்திரம்? நள்ளிரவில் (இருட்டில்) பெற்றதால் சுதந்திரம் என்னதென்று நமக்குத் தெளிவாகத் தெரியவில்லையோ?

ஒருவனிடம் விடுபட்டு இன்னொருவனிடம் மாட்டிக் கொள்வதற்குப் பெயர் சுதந்திரமா? வெள்ளையரிடம் விடுபட்டு இன்று கொள்ளையரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறோமே இது சுதந்திரமா? இன்றைய ஏழைப்பங்காளர்களிடம் கோடி கோடிகள் கொடுத்து விட்டு நாம் நித்திய தரித்திரர்களாக நிற்கிறோமே இது என்ன சுதந்திரம்? உரிமையோடு பெற வேண்டிய எத்தனையோ பெரிய விஷயங்கள் இங்கிருக்க ஆட்சியாளர்கள் பிச்சையாகப் போடும் சில்லறை இலவசங்களில் புளங்காகிதம் அடைகிற சுதந்திரம் அல்லவா இன்று நமக்கு இருக்கிறது?

கடைநிலையில் உள்ள ஒரு வார்டு கவுன்சிலரே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் மேலேயுள்ள மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று செவ்வாய் கிரகத் தகவலைச் சொல்வது போல சிறிதும் பாதிக்கப்படாமல் சொல்கிறோமே நமக்கு இருப்பதாகச் சொல்லும் சுதந்திரம் கை கொட்டிச் சிரிக்கிற சத்தம் கேட்கவில்லையா? எவன் எத்தனை கொள்ளையடித்துக் கொண்டிருந்தாலும் கொள்ளை போவது நம் பணம், நம் நலனுக்காக செலவாக வேண்டிய பணம், என்ற பிரக்ஞை இல்லாத ஜடங்களாக வேடிக்கை பார்க்கிறோமே, யார் சம்பாதிக்கவில்லை என்று வேதாந்தம் பேசுகிறோமே, இதை எங்கு போய் சொல்லி அழ?

அடிமையாக இருக்கிறோம் என்று அறிந்தவன் தான் சுதந்திரத்திற்காகப் போராட முடியும். ஆனால் அதையே அறியாதவன் அடிமையாகவே இருந்து விடுவதில் வியப்பென்ன இருக்கிறது? இந்தியர்களான நாம் உறக்கத்தில் கூட இல்லை. உறங்குபவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விழிப்பது உறுதி. நாம் கோமாவில் அல்லவா இருக்கிறோம். ஜனநாயகத்தினை ஓட்டும் டிரைவர் சீட்டில் நாம் இல்லை. பணநாயகம் ஜனநாயகத்தை ஓட்ட பின் சீட்டில் கோமாவில் பரிதாபமாய்ப் படுத்திருக்கிறோம். ஜனநாயகமோ பள்ளத்தில் ப்ரேக் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

கீதாஞ்சலியில் தாகூர் எப்படிப்பட்ட சுதந்திர சூழ்நிலையில் இந்த தேசம் விழித்தெழ வேண்டும் என்று பிரார்த்தித்தாரோ அந்தப் பிரார்த்தனை நம்முடையதாகவும் இருக்கட்டும்.

எங்கே இதயம் அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு பூரண சுதந்திரமாய் உள்ளதோ,
எங்கே உலகம் உள்ளக குறுகிய சுவர்களால் துண்டாடப்படவில்லையோ,
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே தெளிந்த அறிவோட்டம் உயிரற்ற பழக்கம் என்ற பாலை மணலில் வழிதவறிச் செல்லவில்லையோ,
எங்கே உன்னால் இதயம் பரந்த நோக்கத்துடனும், செயலுடனும் வழிநடத்தப் படுகிறதோ,
அங்கே அந்த சுதந்திர சொர்க்கத்தில் எந்தையே என் நாடு விழிப்புறுக!

எத்தனையோ தியாகிகள் வியர்வையாலும், கண்ணீராலும், இரத்தத்தாலும், ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் வாங்கித் தந்த சுதந்திரம் இது. இதை நாம் வியர்த்தமாக்கி விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. நம் அடிமைச் சங்கிலிகளின் பூட்டிற்கான சாவியை ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு மாற்றித் மாற்றித் தருவது சுதந்திரம் அல்ல. அடிமைச் சங்கிலிகளையே உடைத்தெறிந்து விடுபடுவது தான் சுதந்திரம். எனவே இனியும் தாமதியாது விழித்தெழுவோம். பெறுவோம் இனியொரு சுதந்திரம்!

-என்.கணேசன்
நன்றி:விகடன்

இதுவல்லவோ பெருந்தன்மை!

இதுவல்லவோ பெருந்தன்மை!



அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.

அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது). தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான். காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.

வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை. முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.

ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை. எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான். உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை. அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.

இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால் அத்தனை காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார். ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.

தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!

தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

(ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:-

* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.

* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி. கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்: 1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )

* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.

* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.)

- என்.கணேசன்
நன்றி: விகடன்
நூறாவது குரங்கு



1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன. பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன. அதில் பதினெட்டு மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது. அது சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும் வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது. அதைப் பார்த்த மற்ற சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. ஆனால் வயதான குரங்குகள் மட்டும் பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.

கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும் குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது. அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப் புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.

அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர். அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு "நூறு" என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.

இந்த தத்துவத்தை "நூறாவது குரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையை எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும் உதாரணங்களுடன் கூறுகிறார். இப்போது இந்தக் கருத்து பரவலாகப் பலம் பெற்று வருகிறது.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள். ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம். அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப் படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள் பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள். அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா, யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம். அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே இருப்பனவல்ல. காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை தான். மேம்படுத்தப்பட்டவை தான்.

அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு வலுவூட்டுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம் பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி விட்டுச் செல்வதல்லவா நியாயம்?

இந்த சிந்தனையோடு புத்தாண்டை பொறுப்புடன் ஆரம்பிப்போமே. புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
தவறு செய்யத் தூண்டாதீர்கள்!


அல் ·பாஹித் என்ற அரபு ஞானி ஒரு நாள் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார். "நாம் கடவுளுடைய கருவியாக இருந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் சில சமயங்களில் சைத்தானுடைய கருவியாக இருந்து விடுகிறோம். இன்று கூட நான் சைத்தானுடைய கருவியாக மாற நேரிட்டது"

அவர் நண்பருக்கோ வியப்பு. இவரைப் போன்ற அப்பழுக்கில்லாத ஞானி எப்படி சைத்தானுடைய கருவியாக மாற முடியும்? "நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது சாத்தியம்?" என்று கேட்டார்.

"நான் இன்று மசூதிக்குத் தொழச் சென்ற போது என் செருப்பை வெளியே விட்டுச் சென்றேன். திரும்பி வந்து பார்த்த போது செருப்பைக் காணவில்லை. இன்று ஒரு திருடனை உருவாக்கி விட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது"

"அதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லையே" என்றார் அந்த நண்பர்.

"என் தவறு தான் அது. ஒருவரை ஆசைப்பட வைப்பதும், கோபப்படுத்துவதும், சந்தேகத்தைக் கிளம்புவதும், வெறுப்பை விதைப்பதும், மனிதர்களைப் பிரிப்பதும் மிகவும் எளிது. சைத்தான் தன்னுடைய இந்த செயல்களைச் செய்ய மனிதர்களையே உபயோகப்படுத்துகிறது. அந்த வகையில் இந்தத் தவறு நிகழ நான் பயன்படுத்தப்பட அனுமதித்து விட்டேன்"

அல் ·பாஹிதின் சிந்தனையின் உயர்வைப் பாருங்கள்.

மற்றவர்களைத் தவறு செய்யத் தூண்டுவதில் இரண்டு வகை உண்டு. அறிந்து தூண்டுவது. அறியாமல் தூண்டுவது.

அறிந்தே மற்றவர்களைத் தவறு செய்ய மற்றவர்களைத் தூண்டுவது நேரடியாக அந்தத் தவறை விடக் கொடுமையானது. தங்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரை நான் கவனித்திருக்கிறேன். அவர்களாகத் தவறுகள் செய்து அடுத்தவர்களைத் துன்புறுத்தத் தயங்கும் எத்தனையோ பேர் அடுத்தவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதில் வருத்தம் கொள்வதில்லை. என்ன செய்கிறோம், இதன் விளைவு என்ன என்ற சிந்தனை கூட அவர்களிடம் இருப்பதில்லை.

எனக்குத் தெரிந்த ஒருவர் தானாக மற்றவர்களிடம் சண்டை போட மாட்டார். ஆனால் மற்றவர்களை சண்டைக்குத் தூண்டி விடுவதில் கெட்டிக்காரர். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை தொனியை மாற்றி, முகபாவனையை மாற்றிச் சொல்லி சண்டையை மூட்டி விடுவார். அவரைப் பொறுத்த வரை அவர் பொய் சொல்லவில்லை. வார்த்தைகளை மாற்றிச் சொல்லவில்லை. ஆனால் தொனியும், சொல்லும் முகபாவமும் மாறினால் வார்த்தைகளின் அர்த்தம் முற்றிலுமாக மாறி விடுகிறது, அது பொய்யிலே பெரிய பொய் என்பது அவர் அகராதியில் இல்லை.

இன்னொருவர் மேலதிகாரியைப் பற்றி ரோஷக்கார சக ஊழியர்களிடம் சொல்கையில் "அவருக்கு நாம் எல்லாம் அடிமைகள் என்று நினைப்பு. கிள்ளுக்கீரையாய் நம்மை நினைக்கிறதால் தான் மதிப்பதே இல்லை..." என்று சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று யாராவது ஊழியர் கிள்ளுக்கீரை இல்லை என்று நிரூபிப்பதற்காகவே அந்த மேலதிகாரியிடம் போய் சண்டை போடுவார். இப்படி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே தவறாக ஊகித்து மற்றவர்களுக்கிடையில் மனஸ்தாபத்தை வளர்த்துவதில் சிலர் கில்லாடிகள். கடைசியில் பெரும் பிரச்னைகள் அவர்களுக்குள் வெடிக்கையில் இவர்கள் மட்டும் இரண்டு பக்கமும் வேண்டப்பட்ட ஆட்களாய் நிற்பார்கள்.

உண்மையில் நேரடியாகச் சண்டை போடுபவர்களை விட அதிகமாக இவர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே கேடு விளைவிக்கிறார்கள். அல் ·பாஹித் கூறியது போல இது போன்ற மனிதர்களையே சைத்தான் தன் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் என்றே தோன்றுகிறது. வதந்திகளைப் பரப்புவது, வெறுப்பு விதைகளைத் தூவுவது, மற்றவர் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள் சமூகத்திற்கு அளப்பரிய கேடுகள் விளைவிக்கிறார்கள்.

பல நேரங்களில் அவர்கள் அப்படியெல்லாம் செய்ய உண்மையான காரணம் நேரம் போகாமையே. உப்புசப்பில்லாத வாழ்க்கையில் சில நிமிட பரபரப்பிற்காக இப்படி அறிந்தே தவறுகள் செய்யத் தூண்டினாலும் விளைவுகள் அந்த சில நிமிடங்களையும் தாண்டி பல காலம் பலரைப் பாதிக்கிறது என்பதால் அது மிகப்பெரிய தவறு என்பதை அவர்கள் உணர மறந்து விடுகிறார்கள்.

அடுத்தது அறியாமல் தூண்டுவது. நம்முடைய செயல்கள் யார் யாரை எந்த அளவு பாதிக்கின்றன என்ற பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்வது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். நாகரிகம் என்ற பெயரில் ஆபாச ஆடைகள் அணிந்து வலம் வரும் பெண்கள் பலர் மனதில் பல வக்கிரங்களை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாகும் வக்கிரங்கள் யார் யாரிடம் எப்படி எல்லாம் நடக்கத் தூண்டும், யாரெல்லாம் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான எண்ணங்களை எழுதுகிற, ஊக்குவிக்கிற எழுத்தாளர்களையும், பதிவர்களையும் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல் பேச்சாளர்கள், அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் கூட அந்த நேரத்திற்குப் பிரபலமாக வேண்டும் என்றும் பலர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவும் கைத்தட்டலுக்காகவும் காரசாரமாகப் பேசி எத்தனையோ மனங்களில் விஷத்தைத் தடவி விடுகிறார்கள். அதன் விளைவுகளின் பிரம்மாண்டத்தை உணர அவர்கள் தவறி விடுகிறார்கள்.

அறிந்தும், அறியாமலும் செய்யும் இது போன்ற தூண்டுதல்களுக்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தவறுகள் செய்யாமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. மற்றவர்களைத் தவறுகள் செய்யத் தூண்டாமல் இருப்பதும் மிக முக்கியம். விஷ விதைகளை விதைப்பது சுலபம். ஆனால் உருவாகும் விருட்சங்களை அழிப்பது சுலபமல்ல. விருட்சங்களை அழிக்க சக்தி இல்லாதவர்கள் விதைகளையும் விதைக்காமல் இருப்பதே உத்தமம். தங்கள் பாவக்கணக்கை கூட்டாமல் இருப்பதே நல்லது.

-என்.கணேசன்

நன்றி:ஈழ நேசன்
சில நேரங்களில் சில மனிதர்கள்
நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்"

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?"

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

-என்.கணேசன்


உண்மையான தலைவன்




அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.

அப்படி ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசிய போது ஒரு மருத்துவர் ஒரு சிப்பாய் மரணத் தறுவாயில் இருப்பதாகச் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்த சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

அந்த சிப்பாயிற்கு ஜனாதிபதியை அடையாளம் தெரியவில்லை. ”என் தாயிற்கு ஒரு கடிதம் எழுத முடியுமா?” என்று கேட்டான்.

சம்மதித்த ஆப்ரகாம் அவன் சொல்லச் சொல்லக் கடிதம் எழுதினார். எழுதி முடித்த பின்னர் “தங்கள் மகனுக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன்” என்று கடைசியில் எழுதியதைப் பார்த்த பிறகு தான் அந்த சிப்பாயிற்குத் தனக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன் என்பது தெரிந்தது.

வியப்புடன் அந்த சிப்பாய் கேட்டான். “நீங்கள் ஜனாதிபதி தானே?”

“ஆம்” என்று அன்புடன் சொன்ன ஆப்ரகாம் லிங்கன் “தங்களுக்கு வேறெதாவது நான் செய்யக்கூடியது இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

அந்த சிப்பாயின் மனநிலையை சொல்ல வேண்டியதேயில்லை. உற்றார் உறவினர் என்று யாரும் அருகில் இல்லாத போது அன்பைக் காட்டி அருகில் அமர்ந்திருப்பது ஜனாதிபதி என்கிற போது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

கடைசி மூச்சின் நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட அந்த சிப்பாய் அவரிடம் வேண்டிக் கொண்டான். “தாங்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டால் அது என் வாழ்வின் முடிவைப் பெருமையுடன் சந்திக்க உதவியாக இருக்கும்”

ஆப்ரகாம் லிங்கன் அவன் கையைப் பிடித்துக் கொண்டதும் அல்லாமல் அவனிடம் அன்பான இதமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்க அந்த சிப்பாயின் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்த ஒரு போர் வீரனுக்கு அந்தத் தலைவர் காட்டிய அன்பையும் மரியாதையையும் பாருங்கள்.

உயர் பதவி கிடைத்து விட்டால் தங்களை ஏதோ தனிப் பெருமை வாய்ந்தவர்களாக நினைத்துக் கொள்ளும் தலைவர்கள் இருக்கும் காலக்கட்டத்தில் இது போன்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா?


அரசியலிற்கப்பாற்பட்ட இன்னொரு தலைவரைப் பார்ப்போம். இந்தியாவின் Commission தலைவராக இருந்த பேராசிரியர் சதீஷ் தவான் 1973ல் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு முதல் விண்கலம் அமைக்கும் பணியைத் தந்தார். அப்துல் கலாம் தலைமையில் ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுனர்கள், சுமார் பத்தாயிரம் ஊழியர்கள், வேலையாட்கள் அந்த விண்கலத்திற்காக கடுமையாக உழைத்தனர். ஆகஸ்ட் 17, 1979 அன்று விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. ஆயிரக்கணக்கான பாகங்கள், கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் கொண்ட அந்த விண்கலம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் பழுதடைந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது.

அன்று சதீஷ் தவான் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அந்தத் தோல்விக்கு Atomic Energy and Space Commission தலைவர் என்ற நிலையில் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மிக அருமையான திட்டம் அது என்றும் சில எதிர்பாராத சிறு குறைபாடுகளால் தோல்வியடைந்தது என்றும் அவை சரி செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் மீண்டும் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அப்துல் கலாம் அவர்கள் தான் அந்த விண்கலப்பணிக்கு இயக்குனர், எல்லா வேலைகளும் அவர் மேற்பார்வையில் தான் நடந்தது என்ற போதிலும் சதீஷ் தவான் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

மறுபடியும் விண்கலம் பழுதுகள் நீக்கப்பட்டு வெற்றிகரமாக ஜுலை 18, 1980ல் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றியை அறிவிக்க பேராசிரியர் சதீஷ் தவான் டாக்டர் அப்துல் கலாமையே சென்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் சொன்னார். தோல்விக்குத் தான் பொறுப்பேற்று வெற்றிக்கான பேரையும் புகழையும் அதற்கென உழைத்தவருக்கே விட்டுக் கொடுத்த பெருந்தன்ன்மையைப் பாருங்கள். இவரல்லவோ உண்மையான தலைவர். இந்தச் செய்தியை அப்துல் கலாம் அவர்களே பல மேடைகளில் சொல்லித் தன் தலைவருக்கு உரிய புகழைச் சேர்த்திருக்கிறார்.

உண்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருப்பார் என்ற அடையாளமே மறந்து போய் விட்ட காலக்கட்டத்தில் இருக்கிறோம் நாம். காமிராக்களுக்கு முன் மட்டுமே காட்டும் மனித நேயம், மேடைகளில் மட்டுமே காட்டும் வீரம், தன் புகழையும், சொத்தையும் வளர்க்க எதையும் யாரையும் செய்யும் தியாகம் என்ற பண்புகளுடன் இன்று புற்றீசலாகப் பெருகி வரும் தலைவர்கள் எல்லாம் உண்மையான தலைவர்கள் அல்ல. உண்மையான தலைவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு ஆப்ரகாம் லிங்கனும், சதீஷ் தவானும் மனதைத் தொடும் சிறந்த உதாரணங்கள்.

-என்.கணேசன்
மிளிரும் மனிதம்



அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “...... இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”

அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.

பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு ப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.
ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.



இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?


-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
ஆளுக்கொரு அளவுகோல்




உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.

குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.

நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.

நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், ஓய்வு எடுத்துக் கொண்டாலும், விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.

நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.

நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.

மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.

தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”

அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”

அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.


உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.

உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.



-என்.கணேசன்
நன்றி:விகடன்

தொலைக்காட்சியால் தொலைப்பவை

தொலைக்காட்சியால் தொலைப்பவை




இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் புதைந்து கொண்டு இருக்கின்றன. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அதன் முன்னால் தங்களுடைய பெரும்பாலான நேரங்களைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நடுவே யார் வந்தாலும் அவர்களைத் தொந்திரவாகவே நினைக்கும் மனோபாவம் பெருகி வருகிறது. முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிற சமயங்களில் உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பே வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். தொலைக்காட்சியை அணைத்து விடாமல், வருபவர்களை உட்காரச் சொல்லி விட்டு அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தொடர்வார்கள். விளம்பர இடைவேளையில் தான் வந்தவர்களிடம் உண்மையான விசாரிப்பு இருக்கும். மீண்டும் நிகழ்ச்சி தொடரும் போது கவனம் தொலைக்காட்சிக்குத் திரும்பும். வந்தவர்களும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள். அடுத்த விளம்பர இடைவேளையில் காபி அல்லது டீ கிடைக்கலாம்.

பெரும்பாலான தொடர் நிகழ்ச்சிகளை சில நாட்கள் பார்க்காமல் பின்னொரு நாள் பார்த்தாலும் பெரிதாக எதுவும் விட்டுப் போயிருக்காது என்றாலும் ஒரு நாள் நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகப் போய் விடுவது வேதனைக்குரிய விஷயமே.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. வீட்டிற்குள் ஆட்கள் நிறைய இருந்தார்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள நிறைய ஆட்களும், வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் இன்று தனிக்குடும்பங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் வீட்டில் நான்கைந்து நபர்களே இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் மனம் விட்டு பேசுதலும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதலும் இல்லாமல் போக தொலைக்காட்சி ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அன்னியராக இருக்கும் அவலம் இன்று அதிகமாகி வருகிறது. ஓய்வு நேரங்களில் இருப்பது தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் தான். சாப்பிடுவதும் கூட தொலைக்காட்சியின் முன்னால் தான். எனவே அடுத்தவரைப் பற்றிக் கேட்கவும் நமக்கு நேரமில்லை. நம்மைப் பற்றி சொல்லவும் நமக்கு நேரமில்லை. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது குடும்பங்களில் அபூர்வமாகி வருகிறது.

வீட்டுக்குள்ளேயே இந்த நிலை என்றால் அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருக்கும் உறவு பற்றிக் கேட்கவே வேண்டாம். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தீவிரவாதியே பக்கத்து வீட்டில் குடியிருந்தால் கூட தெரியாமல் போகிறதெல்லாம் இப்படித்தான்.

ஓடியாடி விளையாடும் குழந்தைகள் குறைந்து வரும் அவலம் இன்று சிறிது சிறிதாக அரங்கேறி வருகிறது. இன்றைய கல்விமுறையும், தொலைக்காட்சிப் பெட்டியும் கூட்டணி சேர்ந்து விளையாட்டே இல்லை என்கிற கொடுமைக்கு குழந்தைகளை ஆளாக்கி வருகின்றன. நல்ல திறமைகள் உள்ளவர்களுக்கு அந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு குறைவதற்கும் இந்த தொலைக்காட்சிப் பழக்கம் காரணமாகி விடுகிறது. புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் குறைந்து விடுகிறது. வீட்டில் ஆக வேண்டிய வேலைகள் பல ஆகாமல் தேக்கமடையவும் இதுவே காரணமாக இருக்கிறது. நன்றாக சமைக்கத் தெரிந்த திறமையுள்ள குடும்பத்தலைவிகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காணத் தயாராவதற்காக அவசர அவசரமாக எதையோ எப்படியோ சமைத்து விட்டு விரைவது இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.

மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால் தான் பலர் வீட்டை விட்டே வெளியே வருகிறார்கள். அக்கம் பக்கம் பார்க்கிறார்கள். சுத்தம் செய்வது போன்ற சில விருப்பமற்ற வேலைகள் சிறிதாவது ஆவது அந்த நேரங்களில் தான்.

’கண்களை மட்டும் திறந்து வைத்திரு. போதும்’ என்று தொலைக்காட்சி சொல்கிறது. மூளைக்கும் வேலையில்லை. உடலுக்கும் வேலையில்லை. நம் முயற்சியோ எதுவுமில்லை. இப்படி விளையாட்டில்லை, முக்கியமான வேலைகள் ஆவதில்லை, திறமைகள் வளர்த்தப்படுவதில்லை, மனம் விட்டுப் பேசும் நிலை இல்லை, மனிதர்கள் கூடி மகிழ்வதில்லை என்றெல்லாம் இருக்கிற நிலையை அமைத்து விடும் தொலைக்காட்சி அடிமைத்தனத்திற்கு உள்ளாவது அபாயமானது.

தொலைக்காட்சிகளிலேயே மூழ்கிக் கிடக்கும் குடும்பங்களில் இருப்போரின் மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் வாழ்க்கையை சந்திக்கப் போதுமான அளவில் இருப்பதில்லை. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிகமாக தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடப்பவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று கண்டிருக்கிறார்கள்.

எனவே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி உங்கள் வாழ்க்கையில் அருமையான விஷயங்களைத் தொலைக்க வைக்கும் எதிரியாக மாற அனுமதித்து விடாதீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக நல்ல நிகழ்ச்சி அல்லது பயனுள்ள நிகழ்ச்சி என்று நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து மீதி நேரங்களில் அதை அணைத்து வையுங்கள். உங்கள் பொழுதைப் போக்க அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் பொழுதைத் திருட அதை அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குடும்பத்தினருடன் பேசி மகிழவும், ஒருவரை ஒருவர் அறியவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே உள்ள திறமைகளைக் கூர்மையாக்கவும், வெளிப்படுத்தவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளை வெளியே சென்றோ, விட்டினுள்ளேயோ விளையாட நேரம் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை எல்லாம் மிக முக்கியம். இத்தனைக்கும் பிறகு நேரமிருந்தால் மட்டுமே தொலைக்காட்சிக்கு, அதுவும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே தொலைக்காட்சியால் பல நன்மைகளை நீங்கள் தொலைத்து விடாமல் இருக்க முடியும்.


-என்.கணேசன்
அன்பே தீர்வு



பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.

மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
சமூக சேவையும் பயனாளிகளும்



ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.

சில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.

சுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய்?, நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”

அவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.

ஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.

“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.

போன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான். ”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.

சுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது? அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது?

ஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

-என்.கணேசன்
வெறுப்பு என்பது விஷமாகும்!



சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர்.

திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் வீட்டு முழு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மனைவி நான்கு மகள்கள், ஒரு மகன், இரண்டு மருமகள்களை வளர்க்கும் பொறுப்பை அவர் தலையில் போட்டு விட்டு இறந்த போது இடி விழுந்ததைப் போல அவர் உணர்ந்தார். ஆனாலும் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருந்த டாக்டர் அப்யுலைஷ் அந்தப் பொறுப்பை நன்றாகவே நிறைவேற்றி வந்தார். ஆனால் நான்கே மாதங்களில், அதாவது ஜனவரி 2009ல் அவர்கள் வாழ்ந்த காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததில் அவருடைய மூன்று மகள்கள், ஒரு மருமகள் ஆகியோர் உயிரிழந்தனர். அவர் சிறிது நேரத்திற்கு முன் தான் அந்த மகள்களிடம் பேசி விட்டு அவர்களுடைய அறையை விட்டு வெளியே வந்திருந்தார். உயிர் தப்பிய ஒரு மகளும் தன் ஒரு கண்ணையும், இரு விரல்களையும் இழந்திருந்தாள்.

அவர் தன் உயிரில் பெரும்பகுதியையே இழந்தது போல உணர்ந்தார். அவருடைய சோகத்திற்கு எல்லை இருக்கவில்லை. அவருடைய 12 வயது மகன் ஒரு நாள் அவரை சமாதானப் படுத்தினான். தன் மூன்று சகோதரிகளும் தாயுடன் சொர்க்கத்தில் இணைந்து விட்டார்கள் என்றும் அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை தன்னால் காண முடிகிறது என்றும் சோகப் பெருங்கடலில் ஆழ்ந்திருந்த தந்தையிடம் சொன்னான்.

மகனின் வார்த்தைகள் அவரை ஓரளவு ஆறுதலடைய வைத்தது. இறந்தவர்கள் இறைவனை அடைந்தவர்கள். அவர்களைப் பற்றி வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பவர்களைப் பற்றி யோசிக்க அவர் முடிவெடுத்தார். ஒரு மகன், ஒரு மகள், ஒரு மருமகள் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள், அவர்களை மிக நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட மறுபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அவ்வப்போது அற்பாயுசில் இறந்து போன மகள்கள் நினைவு அவரை வருத்தாமல் இல்லை.

இறந்து போன மகள்கள் நினைவாக “Daughters for Life” என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் படிக்கும் ஏழைப் பெண்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி செய்வது தான் அதன் முக்கிய நோக்கம். அந்த மத்திய கிழக்கு நாடுகளில் அவர் மகள்கள் இறக்கக் காரணமான இஸ்ரேலையும் அவர் உதவி செய்யச் சேர்த்திருந்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பலரும் அவரிடம் “உங்கள் மகள்களையும் அவர்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான உங்கள் பகுதி மக்களையும் கொன்று குவித்த இஸ்ரேல் மீது தங்களுக்கு வெறுப்பும் கோபமும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

“தவறு நடக்கும் போது கோபப் படுதல் அவசியம். ஆனால் கோபம் வெறுப்பாக மாறி விட அனுமதிப்பது சரியல்ல. ஏனென்றால் வெறுப்பு என்பது விஷத்தைப் போன்றது. யார் வெறுக்கிறார்களோ அவர்களை எரித்து விடக் கூடிய நெருப்பு அது. அது யாருக்கும் நல்லது செய்து விடுவதில்லை. நான் வெறுப்பதால் என் மகள்களை உயிரோடு மீட்டு விட முடியாது....... பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் அருகருகே வசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்குவது எந்த நல்ல தீர்வையும் ஏற்படுத்த முடியாது.”

இப்போதும் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி வரும் எத்தனையோ பாலஸ்தீனர்களில் அப்யுலைஷும் ஒருவர். மகள்களின் மரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கம். அந்த விடுதலை பெறுவது தான் மகள்களின் நினைவுக்காக தான் செய்யும் ஒரு பெருஞ்செயலாக இருக்கும் என்று உறுதியாக அப்யுலைஷ் நம்புகிறார். தன் வாழ்வின் லட்சியமாகவும் அவர் அதையே தான் எண்ணுகிறார். ஆனாலும் ஒரு அரசாங்கமும், அதிகாரத்தில் இருக்கும் ஒருசிலரும் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மக்களையே குற்றம் சாட்டி வெறுக்காதிருக்கும் பக்குவம் அவருக்கு இருக்கிறது.

கடந்த ஜனவரி 23 அன்று ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அப்யுலைஷ் தன் ஒரு மகளின் மறைவுக்கு அவளுக்குப் பழக்கமான ஒரு இஸ்ரேலியர் அனுப்பியிருந்த அஞ்சலிக் கவிதை ஒன்றைப் படிக்கையில் அழுதே விட்டார்.

மனிதர்கள் நாடு, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்தும் மனிதர்களே. இந்த மகத்தான உண்மையை அவர் மகள்கள் இறந்து இரண்டாவது ஆண்டு நினைவாக அந்த நிகழ்ச்சியில் அந்த இஸ்ரேலியரின் கவிதையை அவர் படித்த போது அந்த விழாவில் கலந்து கொண்ட, அதைப் படித்து அறிந்து கொண்ட அனைவராலும் உணர முடிந்திருக்கும். அந்த நிகழ்ச்சியில் தன் இழப்புகளையும், தன் உணர்வுகளையும், தன் நம்பிக்கைகளையும் அவர் விவரித்தார். அதையெல்லாம் கேட்டு விட்டு பலரும் கண்கலங்கினர். நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ரிச்சர்ட் சில்வர்ஸ்டீன் கூறினார். “இன்றிரவு நான் ஒரு உயர்ந்த மனிதனின் பேச்சைக் கேட்டேன். நான் நேசத்தையும், பண்பட்ட சிந்தனைகளையும் கேட்டேன். அந்த நேசம் வெறுப்பை வெல்ல வல்லது. மனித குல குற்றங்களையும் போக்க வல்லதாக அந்த நேசம் இருக்கட்டுமாக!”

வெறுப்பு என்பது குற்றங்களை மட்டுமே பட்டியல் போடுவதால் ஏற்படுவது. அப்யுலைஷ் தன் மகள்களைக் கொன்றவர்களாக இஸ்ரேலியர்களை வெறுக்க முடியவில்லை. காரணம் அவர் மகளிற்காக அஞ்சலிக் கவிதை அனுப்பி அவருடைய சோகத்தில் பங்கு கொண்ட நபரும் ஒரு இஸ்ரேலியரே. பெரும்பாலான மனிதர்கள் அவர்கள் எந்த நாடானாலும், மதமானாலும், இனமானாலும், மொழியானாலும் அமைதியையே விரும்புகின்றனர். தீமைகளைக் காண நேரும் போது வருத்தமே அடைகின்றனர். அவர்கள் தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சக்தி அற்றவர்களாகவும் இருக்கலாம். சக்தி வாய்ந்த தலைவர்களின் செயல்களை எதிர்த்து நிற்க சக்தியற்றவர்களாக இருக்கலாம். ஒரு சிலரின் அராஜகங்களுக்கு அவர்களை சார்ந்த சமூகத்தையே வெறுக்கத் துணிவது அறிவுடைமை அல்ல.

அப்யுலைஷின் மனப்பக்குவம் அனைவருக்கும் ஒரு பாடம். தவறுகளை எதிர்ப்பது என்பது வேறு, தவறு செய்தவர்களின் இனத்தையே வெறுப்பது என்பது வேறு என்பதை அவர் அழகாக வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறார். வெறுப்பு என்பது விஷம் தான். அதை உட்கொண்டால் அது கண்டிப்பாக நம்மை அழித்து விடும். பின் நல்லது எதுவும் நம்மிடம் மிஞ்சி விடாது. மானுடம் அன்பால் மட்டுமே காக்கப்பட முடியும், பண்படவும் முடியும்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் அந்தக் குடும்பத்தினரையே வெறுப்பது, ஒரு மதத்தவரில் சிலர் தவறு செய்தால் ஒட்டு மொத்தமாய் அந்த மதத்தினரையே வெறுப்பது, ஒரு இனத்தனவரில் சிலர் தவறு செய்தால் அந்த இனத்தவர் முழுவதும் அப்படித்தான் என்று வெறுப்பது போன்ற நியாயமும், அறிவுமற்ற முட்டாள் தனத்தை நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வெறுப்பு விஷத்தை நம்மில் இருந்து அகற்றி நாம் நம்மையும், மானுடத்தையும் காப்பாற்றிக் கொள்வோமா?

- என்.கணேசன்
ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்



ஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான் உண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது கம்பன் சொல்வான் -

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ”.

மக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடையே காண முடிவதில்லை என்கிறான். இன்னொரு இடத்தில் கம்பன் சொல்வான் –

”வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்.”

அங்கு ஈகை என்பதே இல்லையாம், வறுமை என்பதே இல்லாததால். இந்த அளவு செல்வச் சிறப்புள்ள நாடு கவியின் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும் என்றாலும் ஒவ்வொரு நாடும் இந்த நிலையை அடையப் பாடுபட வேண்டிய இலக்காக இந்தக் கற்பனை ‘உடோபியா’வை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்காரர்கள் தங்கள் சாதனைகளை விளக்க ஆரம்பித்தால் கம்பன் கண்ட காட்சி மங்கிப் போகும் என்பதே நிச்சயம். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்கிற எண்ணம் கேட்பவர்க்கு ஏற்பட்டு விடும். அதுவும் தங்கள் இலவசத் திட்டங்களால் மக்களுக்கு அனைத்தையும் தந்து மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை வானளவு உயர்த்தி விட்டதாகச் சொல்லி நம்ப வைக்க அவர்கள் முயற்சிப்பார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ இந்த இலவசத்திட்டங்களால் மக்களுக்கு கடுகளவும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மக்கள் வாழ்க்கைத் தரம் பாதாளம் நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்று சத்தியம் செய்து சொல்வார்கள்.

இந்த இரண்டில் எது உண்மை? இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அவற்றில் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு விடைகளை ஆராய்வோம்.

இலவசத் திட்டங்களும் ஓட்டு வங்கி அரசியலும் முன்பெல்லாம் தேர்தல் அறிக்கைகள் ஒரு கட்சியின் கொள்கை விளக்கமாக இருந்தன. ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி செயல்படுத்த இருக்கும் புதிய தொலைநோக்குத் திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் பட்டியலிடுவதாகவும் இருந்தன. அப்படி இருப்பது தான் மக்கள் முன் வைக்கக்கூடிய அறிவார்ந்த அணுகுமுறையாகக் கருதப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம், இந்தந்த விஷயங்களில் இந்தந்த முடிவெடுப்போம் என்பது போன்ற கொள்கை ரீதியான அறிவிப்புகள் தான் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இப்படி இருந்த நிலை பின் பெருமளவு மாறி எதையெல்லாம் இலவசமாகத் தருவோம் என்கிற அறிவிப்பு தான் முக்கியமாக தேர்தல் அறிக்கையாக வெளி வர ஆரம்பித்தது. அறிவார்ந்த அணுகுமுறை இந்த அறிவிலிகளுக்குத் தேவை இல்லை என்ற முடிவை அரசியல் கட்சிகள் எடுத்து விட்டது போல் தான் தெரிகிறது.

பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என இந்த இலவசங்களை குறிப்பிட்டு கவலை தெரிவிக்கின்றனர். ஆனாலும் இலவச மதிய உணவு இலவசக் கல்வி கொடுத்த காமராஜர் ஆட்சி இழந்ததும்,இலவச சைக்கிள் ரிக்ஷா, இலவச கண்ணொளித் திட்டம் கொண்டு வந்த கருணாநிதி ஆட்சி இழந்ததும், இலவச சத்துணவு கொடுத்த எம்ஜிஆர் 1986 உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தும் மோசமான தோல்வியைச் சந்தித்ததும், இலவச சைக்கிள் கொடுத்த ஜெயலலிதா ஆட்சி இழந்ததும் வரலாற்று நிகழ்வுகள்.

இலவசத் திட்டங்களை அறிவிப்பதாலேயே ஓட்டும் ஆட்சியும் கிடைத்து விடாது என்பதற்கான உதாரணங்கள் இவை. என்றாலும் இப்போது அடுக்கடுக்காக வரைமுறையில்லாமல் வர ஆரம்பித்திருக்கும் இலவசத் திட்ட அறிவிப்புகள் இன்றைய அரசியல் போகும் பாதையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இலவசம் என்பது அரசியலில் பயன்படுத்தியே தீர வேண்டிய ஒருவித மயக்க மருந்து என்றும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க அதைத் தவிர வேறு சிறந்த ஆயுதம் கிடையாது என்றும் இன்றைய அரசியல்வாதிகள் திடமாக நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இலவசத் திட்டங்களால் நன்மைகள்

இலவசத் திட்டங்களால் எந்த நன்மையுமே இல்லை என்று சொல்லி விட முடியாது. மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவை எத்தனையோ ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு வேளைச் சோற்றை உத்திரவாதத்துடன் கொடுத்து பசியாற்றி அவர்கள் கல்வியைத் தொடர உறுதுணையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு அனுப்பினால் குழந்தைகளுக்குப் போடும் ஒரு வேளை உணவுச் செலவு மிச்சம் என்ற ஒரு காரணத்திற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய ஏழைப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகம் உண்டு.

அது போல வறியவர்களுக்கு இலவச மருத்துவ உதவி, காப்பீட்டுத் திட்டம், ஆம்புலன்ஸ் வசதி போன்ற சேவைகள் உபயோகமாக இருப்பதில் சந்தேகமில்லை. பணக்காரர்கள் மட்டுமே பெற முடிந்த சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு வறியவர்களுக்கும் அமைந்துவிடுவதால், வளரும் பொருளாதாரம் உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட சேவைகள் சமூக நீதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் முதியோர் உதவித் தொகை போன்ற சில திட்டங்கள் உண்மையாக ஒருசில பயனாளிகளுக்குப் பெரும் உதவியாகவே இருக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு. பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில இன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. அதேபோல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்து குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு வழங்கப்படுவதும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சைக்கிள்கள், போக்குவரத்திற்கு கட்டணக் குறைவு ஆகியவை மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்து விட்டு ஏழைகளுக்கான இலவச திட்டங்களால் தான் நாட்டின் நிதி நிலைக்கு ஆபத்து என்று கூறுவது நியாயமற்றது என்று மேற்கூறிய இலவசத் திட்டங்களுக்கு ஆதரவாக சில பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இலவசத் திட்டங்களால் தீமைகள்

எதையுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் அத்தியாவசிய சேவைகளைத் தாண்டிப் பொருட்களை இலவசமாக வழங்க ஆரம்பிக்கும் போதுதான் அது நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த ஆரம்பிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது..


இந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்றால் பெரும்பாலும் அது இல்லை என்றே கூற வேண்டும். பொதுமக்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு (யார் ஆட்சியில் இருந்தாலும்) கொடுக்கும் ஊக்க போனஸாகவே சில இலவசத் திட்டங்கள் அமைகின்றன. ஓட்டு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த இலவச நாடகத்தின் மூலம் ஊழல் பெருச்சாளிகள் நன்றாக கொள்ளையடித்து விடுகிறார்கள்.

பல சமயங்களில் இலவசமாய்க் கொடுப்பதாலேயே அந்தப் பொருட்களின் தரம் மிகக் குறைந்ததாக அமைந்துவிடுகிறது என்பதால் இந்த இலவசங்கள் அந்த ஏழைகளை அவமானப்படுத்தும் சின்னங்களாகிவிடுகின்றன. ஆனால், பாவம் ஏழை மக்களுக்கு இந்த அவமானமும் புரிவதில்லை. புரிந்தாலும் மக்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை

வெங்கடேச ரவி என்ற கவிஞர் அழகாகச் சொல்வார்:

நாம்
தன்மான உணர்ச்சிகளை
அடகு வைக்கவில்லை;
அடகு வைத்தால்
மீட்கப்படுமோ என்ற பயத்தில்
மொத்தமாகவே விற்று விட்டோம்!

இலவசமாகப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோமே என்கிற உணர்வு மக்களைப் பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப் பார்க்கையில் அந்த கவிஞரின் ஆதங்கம் தவறில்லை என்றே தோன்றுகிறது.


ரேஷனில் போடப்படும் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களின் தரம் தாழ்ந்திருப்பது ஒருபுறம். தப்பித்தவறி அது சுமாராக இருந்துவிடும் பட்சத்தில் அதைக் கடத்தி, அதிக விலைக்கு விற்று விடும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆனால் அரிசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் அரிசியை மட்டுமே சாப்பிட பழகி கொண்டால் தான் ஏழைகள் பசியின்றி வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை, காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்தால் விழி பிதுங்கி விடும். அடிப்படை தேவைகளுக்கே இப்படி என்றால் தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? விலை வாசியை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைக்காமல் ரேஷன் அரிசியை மட்டும் ஒரு ரூபாயிற்குத் தருவது எந்த வகையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்யும்.

கழிப்பறை வசதிகளே இல்லாமல் இன்னமும் இங்கு பல லட்சம் வீடுகள் இருக்கும் போது வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவது கேலிக் கூத்தே அல்லவா? எது முக்கியம் என்கிற அடிப்படைகள் கூட இங்கு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றல்லவா தெரிகிறது.

சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ? வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?

சமீபத்தில் விவசாயக் கடன் ரத்து என்ற பெயரில் தேசிய வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கொடுத்த கடன்களை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்) ஒரே நேரத்தில் மத்திய அரசு தள்ளுபடி செய்தது. கடன் சுமை தாள முடியாத விவசாயிகளுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் சூதாட்டத்திற்கும், டாஸ்மாக் கடைக்கும் செலவழிக்க, நகைகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்குக் கூட இந்தத் தள்ளுபடி செல்லுபடியானது, உண்மையாக உழைத்து வாங்கிய கடனைக் கட்டுபவர்களை ஏளனம் செய்வதுபோல் அல்லவா இருக்கிறது? இதில் ஏழைகளை விட பல மடங்கு பலன் அடைந்தவர்கள் செல்வந்தர்களே. ஏற்கனவே பெரும் தொழிலதிபர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளைக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டுவதற்கு புதிது புதிதாக வழிகள் கண்டுபிடித்துக் கடன் வாங்கும் நிலையில், அடிமட்டக் கடனையும் ரத்து செய்துவிட்டால் வங்கிகள் கதி என்ன ஆகும்? இனி வாங்கிய கடனைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வருமா? வங்கிகள் நஷ்டமடைந்தால், பொருளாதாரப் பற்றாக்குறை பெரிதாகிக் கொண்டே போனால் அது மறுபடியும் பொதுமக்கள் தலையில்தானே வரியாக வந்து விடியும்?

இன்னொரு மிக வருத்தமான விஷயம் என்னவென்றால், இலவசத் திட்டங்களை அள்ளிக் கொடுப்பதில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போடுகின்றனவே தவிர, ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவே தெரியவில்லை.

உலகமே பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும்போது, ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் நமது அரசியல் கட்சிகளால் எப்படி இவ்வளவு இலவசத் திட்டங்களை அறிவிக்க முடிகிறது? இலவசத் திட்டங்களால் அரசின் கடன் சுமை கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம் என்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது.

இது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை இந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது. தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை பிரசுரித்த ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை , “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம். எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று யோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் வேறு உருப்படியான நீண்ட காலத்திற்கு உதவக் கூடிய நல்ல திட்டங்களுக்குச் செலவிட கணிசமாக மிஞ்சும்.

முடிவாக சில வார்த்தைகள்

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் ஒருசில இலவசத் திட்டங்கள் ஒருசிலருக்கு ஓரளவு நல்ல பலன் தருவனவாக இருந்தாலும் பெருமளவு திட்டங்கள் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன. அவற்றில் சில ஏழைகள் தற்காலிக பலன்களை அடைய வாய்ப்பிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, அவர்களை மேம்படுத்தவோ அந்தத் திட்டங்கள் உதவுவதில்லை.

கோழியுடன் எழுந்து கோட்டான் கூவுகையில் தூங்கி காலமெலாம் உழைத்து கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள் இன்றும் இந்த இலவசத் திட்டங்களால் பெரிதாகப் பயனடையாமலேயே இருக்கின்றனர். விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நிலையில் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இருக்கின்றனர். கல்வி என்கிற அடிப்படைத் தேவைக்குக் கூட அவர்கள் பெருமளவு செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று அதிகரித்திருக்கிறது. இந்த இலவசத் திட்டங்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமில்லை, வாழ்க்கையை எந்த விதத்திலும் மேம்படுத்தி விடவுமில்லை.

மொத்தத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் குறுகிய சுயநல நோக்கே இந்த இலவசத் திட்டங்களில் தெரிகிறதே தவிர மக்களுக்கு உதவும் தொலை நோக்குப் பார்வையைக் காணமுடியவில்லை என்பதால் இவை பெருமளவு நிரந்தரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

- என்.கணேசன்

சமூகம்

அன்பிற்கு இல்லை எல்லை!




கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். ரயில் தண்டவாளத்தில் ரயிலை எதிர்கொண்டு வாழ்க்கையையும் தன் துக்கங்களையும் முடித்துக் கொள்ளும் முடிவோடு அவர் சென்ற நாள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 25.

அப்போது தான் ரஜியா பீவி என்ற பெண்மணி அவரைப் பார்த்தார். விரைந்து வரும் ரயிலையும் அதை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த அந்த மூதாட்டியையும் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார். ஓடிச்சென்று செல்லம்மாவை ரயில் செல்லும் பாதையிலிருந்து இழுத்து அவர் காப்பாற்றினார். பிறகு செல்லம்மாவின் சோகக் கதையைக் கேட்டறிந்த ரஜியா பீவியின் மனம் நெகிழ்ந்தது. அங்கிருந்து அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கணவர், நான்கு குழந்தைகளுடன் ரஜியா பீவி வசித்து வந்த வீடோ மிகச் சிறியது. ஆனாலும் மனம் சிறுக்கவில்லை என்றால் யாருக்கும் எங்கும் இடம் இருக்கும் அல்லவா? உற்றார் உறவினரால் துரத்தப்பட்ட அந்த இந்து மூதாட்டிக்கு, ரஜியா பீவி என்ற முஸ்லீம் பெண்ணின் மிகச் சிறிய வீட்டில் தற்காலிக அடைக்கலம் கிடைத்தது.

ஆலப்புழையில் வடக்கு அம்பலப் புழா பகுதியில் ஆறாம் வார்டு பஞ்சாயத்து உறுப்பினரான ரஜியா பீவி செல்லம்மாவைத் தன் தாயாகவே எண்ணிப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் அந்த வீடு மிகச் சிறியதாகையால் சிரமங்கள் நிறையவே இருந்தன. எனவே ரஜியா பீவி பஞ்சாயத்தின் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றின் மூலம் செல்லம்மாவிற்குத் தனியாக ஒரு சிறிய வீடு கட்டித் தர முனைந்தார். அரசாங்கம் தந்த பணம் போதாமல் போகவே ரஜியா பீவி தன் சொந்த சேமிப்பையும் செல்லம்மாவிற்காக செலவு செய்து வீடு கட்டி முடித்தார்.

மதங்களுக்கிடையே உண்மையில் பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினைகளை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் ரஜியா பீவியின் முயற்சிகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜியா பீவியும், அவர் குடும்பத்தினரும் அதைப் பொருட்படுத்தவில்லை. கட்டி முடித்த வீட்டில் செல்லமாவைக் குடியேற்றிய ரஜியா பீவி தினந்தோறும் அங்கு சென்று செல்லம்மாவின் நலம் விசாரிக்கவும், அவருடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றவும் இன்று வரை தவறவில்லை. ஒரு தாயும், மகளும் போல ஒரு இந்துவும், முஸ்லீமும் பத்து வருடங்கள் கழிந்த பின் இன்றும் பாசத்தோடு இருந்து வருகிறார்கள்.

இந்த செய்தி மலையாளத் திரைப்பட இயக்குனர் பாபு திருவல்லா என்பவரை எட்டி அவர் இந்த வித்தியாசமான நேசமுள்ள பந்தத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த பிறகு தான் இவர்கள் நட்பு நாட்டில் பலர் கவனத்தையும் எட்டியது. குறுகிய மனங்கள் சமூகத்தில் பெருகிய இன்றைய காலத்தில் ரஜியா பீவியின் மனதில் கசிந்த அந்த இரக்கமும், அன்பும் அவரை எத்தனை பெரிய உதவி செய்யத் தூண்டியது பாருங்கள். வார்டு உறுப்பினர் பதவியில் எவ்வளவு சம்பாதிக்கலாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடும் நபர்களே இன்று அதிகம். அப்படி இருக்கையில் எந்த விதத்திலும் உறவோ, நட்போ, பரிச்சயமோ இல்லாத ஒரு வயதான பெண்மணிக்கு எல்லாமாக ஆகி அபயம் அளித்த அந்த உள்ளம் நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா?

இன்றைய எந்திர உலகில் நான், எனது குடும்பம் என்று அதிக பட்சம் நாலைந்து நபர்களோடு தனிமனித அக்கறை நின்று விடுகிறது. அந்தக் குடும்பத்தில் உடன்பிறப்புகளுக்குக் கூட பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. வயதான பெற்றோர்கள் கூட பாரமாக கருதப்படும் அவலம் அதிகரித்து வருகிறது. மற்றவர்களுக்கு உதவுவதால் தங்களுக்கு சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் அது சகிக்க முடியாத கொடுமையாக நினைக்கும் இயல்பு அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ரஜியா பீவி போன்றவர்கள் பாலைவனச் சோலையாகவே நமக்குத் தோன்றுகிறார்கள்.

ஒரு காலத்தில் வீடு கட்டும் போது வீட்டின் திண்ணையைப் பெரிதாகக் கட்டுவார்கள். அந்தத் திண்ணை இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி விட்டுப் போவதற்காகவே கட்டப்பட்டது. பல வழிப்போக்கர்கள் விடிந்த பின் அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போவதும் உண்டு. முன்பின் பழக்கமில்லாத, பார்த்திராத மனிதர்களுக்கும் தங்கள் வீட்டில் ஒரு இடம் ஒதுக்கி விடும் உள்ளம் நம் முன்னோர்களுக்கு இருந்தது என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

‘அதிதி தேவோ பவ” என்று சமஸ்மிருதத்தில் சொல்வார்கள். விருந்தாளியை இறைவனாகவே நினைக்கும் அளவு விருந்தோம்பல் நம் முன்னோரிடத்தில் இருந்தது. திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு ஒரு தனி அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கிறார். இதெல்லாம் மனிதனின் அன்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. எல்லோர் நன்மையும் சேர்த்து நினைக்கும் பெரிய மனது அவர்களுக்கு இருந்தது. இன்று கல்வியிலும், சௌகரியங்களிலும் நாம் எத்தனையோ முன்னேறி இருந்தாலும் மனம் என்று எடுத்துக் கொண்டால் நிறையவே நாம் பின் தங்கி அல்லவா இருக்கிறோம்.

ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்னை தெரசாவின் தொண்டுகளால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டவராக அவரிடம் சொன்னார். “அன்னையே, நானும் ஏதாவது விதத்தில் இது போன்ற தொண்டில் பங்கு பெற விரும்புகிறேன். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?”

அன்னை தெரசா ஒரு நல்ல தொகையை நன்கொடையாகக் கொடுக்கச் சொல்வார் என்று எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அன்னை தெரசா சொன்னார். “நீங்கள் அதிகாலை எழுந்து உங்கள் நகர வீதிகளில் நடந்து செல்லுங்கள். எனக்கு யாருமே இல்லை என்ற துக்கத்தில் அழுந்திக் கிடக்கும் மனிதர்களை நகர வீதிகளில் கண்டால் அவர்கள் துக்கங்களைக் கனிவாகக் காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்குத் தைரியம் சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள். ’நீ தனியன் அல்ல, உன் நலனில் நானும் அக்கறை கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி உங்களால் அவர்களை ஆசுவாசப்படுத்த முடியுமானால், அவர்கள் இருண்ட மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்த முடியுமானால் அதுவே பெரிய தொண்டாக இருக்கும்”. அன்னையின் அந்த பதில் தன்னை மிகவும் மனம் நெகிழ வைத்து சிந்திக்கவும் வைத்ததாக பின்னர் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்தார்.

பொதுவாக மனிதர்கள் நினைப்பதெல்லாம் ‘எனக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அடுத்தவர்கள் பிரச்சினைகளை நினைக்க எனக்கு நேரமேது?’ என்று தான். பிரச்சினையே இல்லாதவன் தான் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்றால் யாருக்கும் யாரும் உதவ முடியாது. ஏனென்றால் இறந்து போன மனிதன் மட்டுமே பிரச்சினை இல்லாதவன். உயிரோடு இருப்பவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.

ரஜியா பீவிக்கு பிரச்சினைகள் இருக்கவில்லையா? இருந்தன. அவர் செல்வந்தர் அல்ல. ஒரு பெரிய குடும்பத்தின் தலைவி என்ற நிலையில் அவருக்கு ஆக வேண்டிய எத்தனையோ காரியங்கள் இருந்தன. ஆனாலும் எல்லோராலும் துரத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற செல்லம்மா என்ற அந்த மூதாட்டியைப் பார்த்த போது இயல்பாக சுரந்த இரக்கம் அவரை உதவிக்கரம் நீட்ட வைத்ததல்லவா? அங்கே அந்த அன்பில் தான் அவர் இமயமென உயர்கிறார்.

உண்மையான அன்பிற்கு எல்லைகள் இல்லை. அப்படிப்பட்ட அன்பை நான், எனது குடும்பம் என்று சுருக்கி விடுவது மனிதமும் அல்ல. அதையும் மீறி நீட்டிக்கும் போது அது ஏற்படுத்தும் மாற்றங்கள் சாதாரணமானதல்ல. ரஜியா பீவி போல் பேருதவி செய்ய முடியா விட்டாலும் அன்னை தெரசா கூறிய படி வாழ்க்கை சுமையைத் தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனிதர்களிடம் கனிவான பார்வை, தைரியமூட்டும் வார்த்தைகள், சிறு சிறு உதவிகள் தர முடிந்தால், அந்த சுமைகளின் கனத்தை குறைக்க முடிந்தால் அதுவே மிகப் பெரிய சேவை. அந்த உயர் அன்பே மனிதகுலத்தின் இன்றை மிகப்பெரிய தேவை.


- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்