பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

கல்லறைக்குள் புதைத்ததினால்

24.கல்லறைக்குள் புதைத்ததினால்...!!!

கனவினிலே மிதந்திடுவார்
கற்பனையில் மூழ்கிடுவார்
கடிதம் பல வரைந்திடுவார்
கன்னி வேட்டை செய்திடுவாரே ...
கவிதை எழுதி கொடுத்திடுவார்
கரம் பிடிப்போம் என்றிடுவார்
கல்யாணம் எனும் பெயரில்
கரகாட்டம் ஆடி நிற்ப்பாரே ...
கல கலப்பாய் வாழ்ந்திடுவார்
கவலைகளை மறந்திருப்பார்
கம்மல் வாங்கி அவளுக்கும்
கடிகாரம் அவனுக்கும் பரிசளித்து கொள்வாரே ....
கண்மணி என்று கொஞ்சிடுவார்
கணவன் அன்பில் தன்னை மறப்பாள்
கடுகளவும் அவன் அன்பு
கரையாமல் இருக்க வைப்பாளே ...
கருவொன்று தரித்ததென்பார்
கர்பிணி தான் என்றுரைப்பாள்
களிப்புடனே கவிதையவளை
கசங்காமல் பார்த்திடுவாரே ...
கண்டு வந்த கனவு படி
கண்ணனவன் பிறந்து விட
கதர் துணியில் தொட்டிலொன்று
கட்டி அதில் தூங்க வைப்பாரே ...
கஞ்சிக்கு வரும் ஏழை பெண்ணுக்கு
கரி நாக்கு என்று சொல்லி
கன்னத்திலே கண்ணனுக்கு
கருப்பு பொட்டு வைத்திடுவாறே ...
கந்தன் கோவில் வாசலிலே
கணபதிக்கு விளக்கேற்றி ...
கற்பூரம் ஏற்றி செய்த நேர்த்தி
கடனை எல்லாம் முடித்து வைப்பாரே ...
கள்ளிப் பாலை குடித்து சாக
கலைவானியாய் பெண்ணொருத்தி
கந்தையன் மனைவிக்கு
கனிவுடனே பிறந்திடுவாளே...
கயவரெல்லாம் சொந்தமாவார்
கள்ளர் எல்லாம் உள்ளிருப்பார்
கபடம் இல்லா நல் உறவுகள்
கட்டை தாண்டி வெளியில் நிற்பாரே ...
கரும்பாக பேசிடுவார்
கரு நாகமாய் மாறிடுவார்
கழு மரத்தில் ஏற்றி சிலர்
கதை முடிக்க பார்த்திருப்பாரே ....
கழுதை மீது தாம் ஏறி
கடிவாளத்தை தேடிடுவார்
கற்கண்டை கண்டு விட்டால்
கட்டெறும்பாய் மாரிடுவாறே ....
கறவை மாடு பின் வளவில்
கறந்த பாலில் பாதி எடுத்து
கலந்து நீரை விற்றிருப்பார்
கன்றை பசியில் தவிக்க விட்டாரே ...
கலப்பை மாடு வயலினிலே
களை நடுவார் வரம்பினிலே
கச்சை கட்டிய வயல் காரர்
கத்தி வேலை செய்ய வைப்பாரே ...
கல்லூரியில் கூட படித்த
கட்டழகியை பார்த்தும் கூட
கதைக்காமல் வெட்கத்திலே
கடை தெருவில் மறைந்து கொள்வாரே ...
கத்தரிக்காய் தோட்டத்திலே
கரப்புக்குள்ளே கோழி குஞ்சு
கடுவன் பூனை அடுக்கலையில்
கலசத்திலே கறந்த பாலென்று நினைத்திருப்பாரே ...
கவர்ந்து கண்ணை பறிக்கும் உடை
கவர்ச்சியாக உடுத்தும் அவளை
கடைக்கண்ணால் பார்த்து பயத்தில்
கட்டியவளை தேடி நிற்ப்பாரே ...
கஞ்ச தனத்தை காட்டும் கணவன்
கல்லாவில் பணம் பதுக்கி
கண்டவளுக்கு செலவிடுவதை
கண்டித்து கோபம் கொள்வாளே ...
கருவேலம் பட்டை வாசம்
கட்டறுத்து பரவுவதாய்
கலகமென்றால் குடும்பத்திலே பலர்
கரகோசமாய் சிரித்திடுவாரே ...
கனன்று கண்கள் கணவன் கத்த
கயல்விழியவள் காளியாக
கட கடக்கும் சட்டிப் பானை
கதவிடுக்கில் வெளியில் செல்லுமே ....
கசியும் நீரை கண்ணில் தேக்கி
கலவரமாய் பார்க்கும் சேய்கள்
கலக்கமதை பார்க்காமல்
கண்டபடி பேசி தீர்ப்பாரே ...
கசாப்பு கடை பக்கத்திலே
கடாவை விலை பேசி விட்டு
கள்ளு கடை வாசலிலே
கல்லின் மேல் அமர்ந்திருப்பாரே ....
கலியுகத்து காதலிலே
கண்ணடித்து காதலென்று
கங்கணங்கள் கட்டிக் கொண்டு
கஷ்டம் இன்றி சேர்ந்து கொள்வாரே ....
களவானி கூட்டத்திலே
கற்புண்டோ காதலுக்கே
கருமம் தனை முடித்து கொண்டு
கருவேப்பிலை ஆக்கிடுவாறே ...
கனிந்து இருந்த காதல் சாக
கருகி விட்ட வாழ்வை எண்ணி
கம்பளியால் மூடிக் கொண்டு
கவிழ்ந்து அவளும் படுத்திருப்பாளே...
கடப்பாரைக்கும் கலங்காத
கருங்காளியாய் அவள் கணவனும்
கஞ்சா விற்கும் இடங்களையே
கதியென்று கிடப்பானே ...
கடுக்கனையும் விற்று அவள்
கடக் குட்டிக்கு பால் கொடுப்பாள்
கச்சிதமென நினைத்த வாழ்வை
கத்தரித்துச் சென்றிடுவாளே ....
கட்டு மரத்தில் அவள் சென்றிட
கண்டுக்காமல் அவனும் போக
கலை இழந்த பிள்ளைகளும்
கதறி அழுது புலம்புவாரே ...
கப்பலொன்று புயல் காற்றுக்கு
கடல் நடுவே தவிப்பது போல்
கஷ்டங்களை சொல்லாமல்
கண்ணீரை சிந்தி நிற்பாரே ...
கப்பம் இன்றி வாங்கி வரும்
கமலம் போன்ற புரிந்துணர்வை
கருத்தோடு பார்க்காமல்
கல்லறைக்குள் புதைத்ததினாலே ...!!!

தினம் தினம் விழுந்து தினம் தினம் உருகி

23.தினம் தினம் விழுந்து தினம் தினம் உருகி...!!!

எப்பொழுது விடியும்
எப்பொழுது விடியும் என
காத்திருக்கின்றது
கூவும் சேவல்கள் ...
தூரத்தில் பசுக்கன்று
அம்மா என்று அழும் சத்தம் ...
எல்லோர் வீடுகளிலும்
அதிகாலையின் பரபரப்பு ...
அவள் பெயர் தேவி
இப்படி தான் அவள் தோழிகள்
அவளை அழைத்தார்கள் ...
அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் ...
எனக்கும் தான் ...
தினமும் என்னை தேடி வரும்
அவளை தேடுகிறேன் ...
இரண்டு வாரங்களாக
அவளை காணவில்லை ....
நேற்று அவள் தோழிகள்
உரையாடியதை ஒட்டுகேட்டேன் ..
அவள் இன்றைக்கு வருவாளாம் ..
அது தான் அவளுக்காக
இந்த இனிய காத்திருப்பு ...
ஆனால் அவளை இன்னும் காணவில்லை ...
ஏன் இன்னும் அவள் வரவில்லை
ஏக்கத்துடன் பார்க்கின்றேன் ...
காணவில்லை ...
எப்பவும் இந்த நேரம்
வந்து விடுவாளே ...
அவள் வர வேண்டும் ...
கடவுளே ...
என்று எண்ணிக் கொள்கிறேன் ...
அதிகாலையில் எழுந்தாலும்
அவளை ஒரு முறை
பார்த்த பின்பே
மனது ஆறுதல் அடையும் ...
உச்சி மரத்து காகம் ஒன்று
கரைந்து மறைந்தது ...
பள்ளிக்கு செல்லும்
மாணவர் கூட்டம் கூட்டமாய்
வெள்ளைப் புறாக்களை போல
அழகாக போய் கொண்டிருந்தார்கள் ...
ஐயோ இன்னும்
அவள் வரவில்லையே ..
அவள் வரும் திசையை
பார்க்கிறேன் ....
காணவில்லை ....
யோசிக்கிறேன் ....
இன்று எங்கு சென்றிருப்பாள் ....
மனசுக்குள் எங்கோ ஒரு மூலையில்
மெலிதாய் ஒரு சோகம் எட்டி பார்த்தது ....
தினமும் என்னோடு பேசாமல்
அவள் போவதில்லை ...
ஆனால் இரண்டு வாரங்களாக
அவள் வராதது
என்னவோ போல் இருந்தது ...
எங்கே அந்த தேவதை ....
தேடுகிறேன் காணவில்லை ...
அதோ அதோ அவள் தந்தை ....
என்னை கடந்து செல்கிறார்
அவர் முகத்தில் என்றும் போல் அமைதி ...
அவள் தங்கை அங்கும் இங்குமாய்
ஓடிக் கொண்டிருந்தாள் ....
அவள் வீட்டு வாசலில் ஒரே கூட்டம்
ஆரவாரமாய் எதோ பேசுகிறார்கள் ....
எனக்கு ஒரே படபடப்பு ...
உடலில் எதோ சுரீர் என்றது ...
ஐயோ இவனா ..? அதிர்கின்றேன் ...
அதற்குள் இவனுக்கு நேரமாகிட்டுதா ...?
ஐயோ இன்னும் அவளை காணோமே ...
மனசு அங்கலாய்த்தது ....
அவனும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான் ...
பயத்தால் அங்கும் இங்கும் தள்ளாடுகிறேன் ...
அவன் கண்களுக்கு படாமல்
மறைந்து கொள்ள எத்தனிக்கிறேன் ...
இனியாவது அவள் வருவாளா ....
பார்க்கின்றேன் இல்லை அவளை காணவில்லை ...
தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தான்
இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
அவன் வந்து விடுவான் ...
அவளை பார்க்காமலே
போய் விட நேருமோ...
மனது துடிக்கிறது ....
அதோ அவள் வாசல் கதவு திறக்கப் படுகிறது ...
கூட்டமாய் அவள் தோழிகள் ...
அடுத்து அவள் வருகிறாள்
ஆஹா என்ன அழகு ..
முன்பை விட இன்னும் அழகாய் தெரிந்தாள்...
கொஞ்சம் வளர்ந்தவளாய்...
மெதுவாய் அசைந்து வருகின்றாள் ..
முகத்தில் வெட்கத்தின் ஒளி பிரகாசமாய் ....
புரிந்தது மாற்றத்தின் காரணம் ...
தங்க ரதமாய் அசைந்து வந்துக் கொண்டிருந்தாள் ...
சிரிப்பொலி கோயில் மணியாய்
ஒலித்துக் கொண்டிருந்தது ...
இதோ என்னருகில் வந்து விட்டாள்...
என்னை கடக்கும் முன்
சற்று நின்றவள் ...
என்னை பார்த்து சிரித்தாள் ...
குனிந்து என்னை பார்த்தவள் ...
அவள் தோழிகள் கூப்பிட ஓடுகிறாள் ...
என்னை திரும்பி பார்த்துக் கொண்டே ...
அதற்குள் அவன் வந்து விட்டான் ...
என்னை கோபமாய் பார்க்கிறான் ...
நான் பயத்தில் நடுங்குகிறேன் ....
எனக்கு நேரே வந்து நின்றவனை
நேர் நோக்க முடியவில்லை ....
.தூரத்தில் செல்லும் அவளின்
கொலுசொலி கேட்டவண்ணம் இருக்க ...
நான் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துக் கொண்டிருந்தேன் ..
அவளின் சிரிப்பொலியும்
காலின் கொலுசொலியும்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து போவதை போல்
நானும் இதோ கொஞ்சம் கொஞ்சமாய் ...
சாகின்றேன் ....
எரிகிறது உடல் இன்னும் ஒரு நொடி
என் முடிவு வந்து விடும் ...
அவள் போன திசையில் பார்க்கின்றேன் ...
தொலைவில் சிறு புள்ளியாய்
அவளும் காணாமல் போகின்றாள் ...
ஆதவனும் அருகருகே வருகின்றான் ...
நானும் தொலைந்தே போகின்றேன் ...
அப்பொழுதும் ...
அவசரமாய் அவள் சொன்ன கவிதை
மனசில் வந்து மறைகிறது ...
'' ஊசி தனில் நூலை கோர்த்து
நூலினிலே உன்னை சேர்த்து
கழுத்தில் மாட்ட இஷ்டம் இல்லை ...
பள பளக்கும் உன் உடலை
சிடு சிடுக்கும் ஊசியினால்
குத்தி விட இஷ்டமில்லை ..
பிழைத்துப் போ பனித்துளியே ...
நாளையும் நீ அதிகாலையில்
வந்து விடு பனித்துளியே ...!!!

சிந்து சிவசங்கர் .

தொலைந்து போன புன்னகையுடன் அவனும் நானும்

22.தொலைந்து போன புன்னகையுடன் அவனும் நானும் ...!!!

தள்ளி தள்ளி ஒன்றொன்றாய் மரங்கள்
பூக்கள் நிறைய பூத்து குலுங்கியது ..
யாரும் பறிப்பார் இல்லை ..
என் வீட்டு தோட்டத்து பூக்களை
பறிக்க யாரும் வருவதில்லை ...
நான் ஒதுக்கபட்டவள்....
அவரவர்க்கு தேவை ஏற்படின்
என்னை தேடுவார்கள் ...
இல்லையேல் அனாதையாய்
இருக்கும் நிலை தான் ...
ஊருக்கு ஒதுக்கு புறமாய்
இருந்த என் வீட்டை எட்டிப் பார்க்க கூட
யாரும் விரும்புவதில்லை ....
என் பிறப்பை எண்ணி
கடவுளை நொந்துக் கொள்வேன் ..
எனக்கு ஏன் இந்த
ஈனப் பிறப்பை கொடுத்தான் ?
யோசிக்கையில் அவனின் இருமல் சத்தம் ....
இருள் சூழ்ந்து இருந்தது ....
தொலைவில் அவன் வருவது தெரிந்தது ...
போர்த்தி இருந்த போர்வையை
மீண்டும் உதறி போர்த்திக் கொண்டு
வந்துக் கொண்டிருந்தான் ...
அவன் மேல் எனக்கு கொள்ளை பிரியம் ...
நல்லவன் ... ... நாதியற்றவன் ...
அவனுக்கு எல்லாமே நான் தான் ..
என்னை விட்டால் அவனுக்கு என்று
துணை யாருமே இல்லை ...
அதனாலோ என்னவோ
அவன் தனக்குள்ளே பேசிக்கொள்வதை
எல்லாமே நான் கேட்டுக் கொண்டிருப்பேன் ...
என் வீட்டில் அவனும் அப்பப்போது
சற்று நேரம் கண்ணயர்வான்...
பாவம் அவன் என எண்ணிக் கொண்டேன் ...
ஆனால் என்னால் தான் அவனுக்கு
ஒரு நேர சோறு கூட போட முடியவில்லை ...
எதோ சாப்பிடுகிறான் ...வாழ்கிறான் ...
எனக்கு துணையாய் இருப்பவனும்
இவன் மட்டுமே ....
அவனை நான் நேசிக்கிறேன் ....
எப்பவும் என்னோடு இருக்கும் ஒரே ஜீவன் அவன் ...
பணக்காரன் ஏழை என்று பிரித்து பார்த்திடுவார் ...
அவனுக்கும் எனக்கும் அந்த கஷ்டமில்லை ...
நாங்கள் பணக்காரரும் இல்லை
ஏழையும் இல்லை ...
பரந்த மனசு அவனுக்கு ...
அவன் மூட்டிய நெருப்பில் இருந்து
கனன்ற நெருப்புகள் வானத்திலே மிதந்து
கும்மிருட்டில் நட்சத்திரங்களாய் கண் சிமிட்டியது ...
அவன் கண்ணிலே தெரிந்த சோகம் வலி
என்னை ஏதோ செய்தது ...
குப்பையாய் வளர்ந்து கிடந்த
தாடிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்...
அந்த நிலவு யாரோ ....?
நினைக்கையில் மனசு வலித்தது ....
ஆனால் ஏதோ ஒரு பந்தம்
அவனுக்கும் எனக்கும்
அதனால் தானோ என்னவோ
அவன் எப்பவும் என்னை விட்டு பிரியாமல்
என்னோடு தங்கி விட்டான் ....
அவன் சொந்த கதையை
என்னால் கேட்க முடியாதே ...
ஊருக்குள் பலருக்கு அவனை கண்டாலே பயம் ...
அவன் முகத்தில் சிரிப்பை காண்பதே அரிது ..
யாரிடமும் முகம் கொடுத்து பேசாத அவன் கூட
சில நேரம் சத்தமாய் பாடுவான் ...
அவனது குரல் அவ்வளவு இனிமையாய் இருக்கும் ...
அவனின் பாட்டு கேட்டால் என் வீட்டில் உள்ளவர்கள்
கண்ணுறங்கி விடுவார்கள் ...
சுகமான சில நினைவுகளால்
கனவுகளில் மிதப்பவர்கள்
நிஜமாகவே மிதப்பார்கள்
காற்றிலே நடப்பார்கள் ...
உறங்கி விட்டால்
நடப்பவைகள் தெரியவா போகின்றது
பாவம் அவர்கள் ....
இன்று புதிதாய் ஒரு பழைய லுங்கி அணிந்திருந்தான்
யாரோ கொடுத்திருக்கிறார்கள் ....
சிக்கு பிடித்த தலை முடி முனிவராய் தோற்றமளிக்க
அவன் செயல்களினால் கை கூப்ப தோணும் ...
செய்த பாவங்களை எல்லாம் போக்குவதற்க்கு
புண்ணியங்கள் செய்பவர்கள் மத்தியில்
இவன் செய்யும் புண்ணியத்தில்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்
இவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் ....
கிடைக்க வேண்டும் .. இல்லையேல்
கடவுள் என்றொருவன் எதற்க்கு ...?
மௌனமாய் நானும் கடவுளை மன்றாடுகிறேன்
அவனுக்காக ...
இல்லாத இடங்களில் அன்பை தேடி ..
இருக்கும் இடங்களை தொலைப்பவரும்
இங்கு உண்டு ....
மித மிஞ்சிய கோபத்தினால்
கண்ணை மறைத்து
தப்புகள் செய்தவரும் இங்கு உண்டு ...
தப்பென தெரிந்தே தப்பு செய்தவனும் இங்கு உண்டு ...
மேளங்கள் தாளங்களோடு வருபவரும்
எதுவுமே இன்றி வருபவனும்
அவனிடத்தில் ஒரே தராதரத்தில்
மதிப்பிட படுகின்றன ...
ஊருக்காக உழைப்பவர்களில்
இவன் தான் உசத்தி ...
தேவதைகள் வானிருந்து வருவதில்லை
தெய்வங்களே இவன் ரூபத்தில் வருகின்றன ...
இதற்க்கு மேல் அவனை புகழ
வார்த்தைகள் வருகுதில்லை நினைவுக்கு ...
அவனுக்கும் எனக்குமான நெருக்கம்
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ....
காதலோ .. பாசமோ.. நட்போ ... தெரியவில்லை
அதற்க்கெல்லாம் அப்பாற்பட்ட
பெயரே இல்லாத ஒரு வித உணர்வு ....
ஏதோ சத்தத்தில் திடுக்கிடுகிறேன் ...
நினைக்க முடியாத தருணத்திலே
அவன் கடுமையாய் இருமுகிறான் ..
அவன் கை கால்கள் அடித்துக் கொண்டன...
தூரத்தில் யாரோ போகிறார்கள் ..
அவனை கண்டும் காணாதது போல ....
என் குரல் அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை ...
ஆடி அடங்கி விட்டது அவன் உயிர் ....
ஸ்தம்பித்து போகிறேன் நான் ...
என் மடியில் அவனை ஏந்திக் கொண்டேன் ...
எப்பவுமே சிரிக்காத அவன் இதழ்களில்
மென்மையான புன்னகை ஒன்று
இழையோடி இருக்க கண்டு வியந்தேன் ...
பாவ பட்ட உலகை விட்டு சென்றதனால்
சிரித்தானோ ....?
மூளை கெட்ட மனிதர்களை நினைத்ததினால் சிரித்தானோ ?
அவன் பாடலை கேட்காத நிமிடங்களை நினைத்து கூட
பார்க்க முடியவில்லை ...
அணைத்து கொண்டேன் அவனை வாஞ்சையுடன் ...
கடவுளின் சித்தத்தில் அவனும் நானும்
புண்ணியம் தான் செய்தோம் ...
என் வீடும் ஓர் அநாதை ஆச்சிரமம் தான் ...
உயிரற்று போக ஒதுக்கி வைக்கும்
உடல்களை தகனம் செய்து
நிம்மதியான நிரந்தரமான
உறக்கத்தில் ஆழ்த்தி விட்டவன் அவன் ...
அதற்க்கு இடம் கொடுப்பவள் நான் ...ஆம்
அவன் வெட்டியான் ... நான் சுடுகாடு ....
அவனுக்குண்டு மரணம் ... என் மடியில் கண்ணுறங்க ...
எனக்குண்டா மரணம் ...?
இருந்தால் நான் யார் மடியில் கண்ணுறங்க ?????
அப்போ நான் ஆதரவற்றவளா...?
ஐயோ இனி எனக்கு யார் உண்டு ...?
இதோடு நானும் ஒழிந்தாலென்ன..
எனக்கொரு அழிவு கிட்டாதா ...?
நினைக்கும் போதே தூரத்தில்
ஓர் உருவம் என்னை நோக்கி
வந்து கொண்டிருந்ததை பார்த்தேன் ..,
அதே போர்வை .. அதே கனன்ற கண்கள்
எதையோ பறிகொடுத்தவன் போன்ற தோற்றம் ...
அதே போர்வை ..... ஆள் மட்டும் வேறு ....
கடவுள் என் அழுகுரலை கேட்டு இருப்பார் போலும்
எனக்காக அனுப்பி வைத்தான்
இன்னொரு துணையை
புது வெட்டியான் வந்து விட்டான் ....
நிம்மதியான நிரந்தர நித்திரையை
மனிதர்களுக்கு கடைசி மரியாதையுடன்
இனி அவன் கையால் ...
நான் நிம்மதியாய் பெரு மூச்சொன்று விடுகின்றேன் ....
தொலைந்து போன புன்னகையுடன்
அவனும் நானும் மட்டும் இன்னும் தொலையாமல்....!!!

அவளும் நானும்

21.அவளும் நானும்...!!!

தூரத்து மலை முகடுகளில்
மோதிச் செல்லும் முகில் கூட்டங்களின்
இடையே தெரிந்தும் தெரியாமலும்
நீல வானம் அமைதியாய் ...!!!
இயற்கையை ரசித்தப் படி
பயணிக்கிறேன் சொந்த ஊருக்கு
நாளை காதலர் தினம்
நிச்சயம் சந்திப்பேன் அவளை
ஏற்கெனவே எடுத்த முடிவு தான்
ஏழு ஆண்டுகளுக்கு பின்
வரும் காதலர் தினத்தில்
அவளை சந்திப்பேன் என்பது ...
ஆண்டுகள் ஏழு போனது தெரியவில்லை
அதற்குள் எத்தினை சோகங்கள்
எத்தினை உறவுகள்
எத்தினை பிரிவுகள்
வெளி நாட்டுப் பணமும் தமிழரும்
என்றொரு புத்தகமே எழுதலாம்
அவளின் வாழ்க்கை வரலாற்றை வைத்து
இப்படி நான் அடிக்கடி எண்ணியதுண்டு ...
அரபு நாடுகளில் தெரியாத முகங்களின் நடுவில்
கஷ்ட பட்டு உழைச்சதெல்லாம்
பட்ட கடனுக்கு வட்டியாகவும்
தந்தையின் மருந்துகளாகவும்
உரு மாறி போனது ...
எல்லா கஷ்டமும் மறந்து போகும்
அவள் ஒருத்தியின் அன்பை எண்ணுகையில் ...
பாவம் அவள் எண்ணிக் கொண்டேன்
எப்பவும் அன்பு காட்ட மட்டுமே தெரியும் அவளுக்கு ...
மற்றவர் துன்பத்தை கண்டாலே மனம் இலகிடுவாள் ... !
அவள் ஒருத்தியை எண்ணி எண்ணியே
என் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டேன் ...
நான் வெளிநாடு செல்வது அறிந்த உடனே
சந்தோஷப் பட்டவளும் அவளே
துன்பப் பட்டவளும் அவளே
என் கஷ்டங்கள் தீருவதை எண்ணி
சந்தோஷப் பட்டாள்...
என்னை பிரிய நேரிடுவதை எண்ணி
கவலை பட்டாள் ....
அவளிடம் நான் சொன்னேன்
ஏழேவருடங்கள் தான் வந்து விடுவேன் ...
கண்களில் நிறைந்த கண்ணீர் துளிகளாய்
கன்னங்களை நனைக்க என்னையே
பார்த்துக் கொண்டிருந்தாள் ....
அடிக்கடி அவள் சிரிக்கையில்
கன்னத்தில் விழும் குழி ...
வரிசையான அவளின் பற்கள் ...
அவள் சேலை கட்டு கூட ஒரு அழகு தான் ...
அம்மா இறந்த நாள் அடக்க முடியாமல்
கதறி அழுத என்னை ஆதரவாய் அணைத்தவள் ...
உனக்காக தான் நான் இருக்கேனே ...
கவலை படாதே என்றாள்....
இப்படி தான் வெளிநாடு பயணத்தின் போது
நீர் ததும்பும் கண்களால்
நிமிர்ந்து பார்க்காமல் விடை கொடுத்தாள்
பிரிகையில் பற்றி இருந்த அவள் கைகளின் இறுக்கத்தில்
அறிந்தேன் அவளின் மன கஷ்டத்தையும்
பிரிவின் சோகத்தையும் ...
என் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு புறப்பட்டேன் ..
வாரம் தவறாமல் வரும் அவள் கடிதங்களுக்காக
ஏங்கி தவிக்கும் என் மனது ...
கடந்த பத்து மாத காலமாக
அவளின் கடிதங்களை காணவில்லை ...
இடை இடையே என் நண்பர்களின் கடிதங்களில்
வீட்டு விடயங்களையும் அவர்களின்
இடம் பெயர்வுகளையும் அறிய கூடியதாய் இருந்தது ....
நானும் எத்தனையோ கடிதம் அனுப்பியும் பலனில்லை
அவர்களின் கடிதங்களிலும் அவளை பற்றி
எந்த ஒரு வரியும் இல்லை ....
தந்தையுடனான தொலைபேசி உரையாடலில்
அவளை பற்றி கேட்கலாம் என்றாள்
அதற்கும் தொலைபேசி துண்டிக்க பட்டது ...
என்னவோ தெரியவில்லை
கொஞ்ச நாளாக என் மனது ஒரு நிலையில் இல்லை
பலவாறாக மனது எண்ணத் தொடங்கியது ....
மிகவும் கவலையாக இருந்தேன் ...
என் பொறுமையும் நிலை கொள்ளவில்லை
வேலைக்கான நாட்களும் நீடிக்கவில்லை
கிளம்புகிறேன் ஊரை நோக்கி ...
புகையிரத வண்டி மெதுவாய் அசைந்த வண்ணம் இருந்தது
மூடி இருந்த கண்களின் ஊடே அவள் முகம் வந்து வந்து மறைந்தது
அவளுக்காக ஆசை ஆசையாய் வாங்கி வைத்த
சின்ன சின்ன பரிசு பொருட்கள் எல்லாமே
அவள் ஆசை பட்டவைகள் ....
நான் ஊர் போக விடிந்து விடும் ...
நாளைக்கு எப்படியும் அவளை பார்ப்பேன் ...
விடியும் வேலை
ஊர் வந்து விட்டேன்
உடைந்து போன வீடுகளும்
சரிந்து கிடந்த மரங்களும்
பாதி கிடங்கும் பாதி கல்லுமாய்
கிடந்த வீதி வழியே வாகனம் செல்ல முடிய வில்லை
இறங்கி நடக்கின்றேன் ...
எங்கள் தெருவில் பாதி வீடுகளை காணவில்லை
பார்த்துக் கொண்டே சென்றேன் ...
எங்கள் வீடு வந்து விட்டது
படலையை திறக்கும் போதே
அப்பாவின் இருமல் சத்தம் கேட்கிறது ..
வீட்டுக்குள் நுழைகிறேன் ...
அப்பாவின் இருமலை தவிர
வீடே அமைதியாய் இருந்தது ...
அப்பா என்னை கண்டதும் சிரிக்கின்றார் ...
சிரித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்கின்றேன்
என்னடா பார்க்கிறாய்
அது அப்பாவின் குரல் ...
இல்லை ஒன்றும் இல்லை
சொல்லி கொண்டே
பின் வாசலுக்கு வருகின்றேன்
அங்கும் அவள் இல்லை ...
வராந்தாவில் பேச்சு சத்தம்
வந்து விட்டாளோ ஓடி வருகிறேன்
அங்கு சேது அண்ணா........
என்னை கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொள்கிறார்
கண்ணாலேயே அவரை கேட்கின்றேன்
அவளை காணவில்லை எங்கே என்று ?
அப்பா என்னையும் அவரையும்
மாறி மாறி பார்க்கின்றார்
பின் அவருக்கு கண் ஜாடை செய்கின்றார்
சொல்ல வேண்டாம் என்பது போல்
அப்பாவின் முகத்தில் சோகம் நிழலாடுகிறது
சேது அண்ணா முகமும் தான் ..
அவரின் பரிசு பொருள்களை காட்டுகிறேன்
கண்ணீர் மல்க பார்க்கின்றார்
அவளின் பரிசுகளையும் காட்டுகிறேன்
கட்டுபடுத்த முடியாமல் அழுகின்றார்
என்ன என்கின்றேன் ...
எல்லாம் எடுத்துட்டு வா அவளிடமே கொடுத்திடலாம்
என்றவர் பின்னாடியே போகின்றேன்
பரிசுகளையும் கொண்டு
வழியில் அவரிடம் சொல்கின்றேன்
இதை அவளிடம் கொடுத்து கட்டி பிடிக்க வேண்டும் என்கின்றேன்
அழகிய கடுதாசி ரோஜாவை காட்டி
அதை அவர் கைகளில் வாங்கி கொண்டார்
சரி சொல்லலாம் என்றார்
சரி அவள் ஏன் அங்கு இருக்கிறாள் என்கிறேன்
வா சொல்லுறேன் என்கிறார்
நானும் செல்கிறேன் ...
அடுத்து அவர் சென்று நிண்ட இடம்
ஒரு கணம் என்னை நிலை குலைய வைத்தது
ஆடிப் போய் விட்டேன் ...
நிமிர்ந்து சேது அண்ணாவை பார்கின்றேன்
கண்ணீருடன் தேம்புகிறார்
ஓடி போய் கல்லறையில் விழுகின்றேன்
ஏன் இப்படி செய்து விட்டாய்
சொல்லாமல் போய்விட்டாயே
ஐயோ என்று கதறுகிறேன்
சேது அண்ணா என் கைகளை பற்றுகிறார்
பல பேரை காவு கொண்ட
அகோர யுத்த வெறியர்களின் வேட்டைக்கு
இவளும் பலியாகிட்டாடா
என் தலையில் அடித்துக் கொள்கிறேன்
நீ வந்த உடனே விருப்பத்த சொல்றேன்னு சொன்னாளடா
இப்படி ஆகி போச்சுடா
இந்த பூவை அவள் கல்லறையில் வைக்கிறேண்டா
அலுத்து கொண்டே அந்த பூவை கல்லறையில் வைக்கிறார்
காதலர் தினத்தில் சேது அண்ணாவிடம் உன் காதலை
சொல்கிறேன் என்று சொன்னாயே அக்கா
இப்போ உயிரை விட்டுட்டியே அக்கா
துக்கம் தொண்டையை அடைத்தது
அம்மாவின் படத்துக்கு பக்கத்தில்
அக்காவின் படத்துக்கும் மாலை போடுகிறேன்
அக்கா நீ அக்கா இல்ல நீயும் என் அம்மா தான்
சேது அண்ணா சொல்கிறார் என்னடா
இன்னுமா நிற்கிறாய்
வா வா ரயிலுக்கு நேரமாகிட்டு ....
இன்னும் மூன்று வருடங்களுக்கு
வேலை வெளிநாட்டில் செல்கிறேன் விரக்தியில்
அக்காவின் கல்லறையை
கட்டி முடிக்கவும் காசு வேணுமே ...!!!

---சிந்து சிவசங்கர்.

எதனாலே

20.எதனாலே ?

உற்றாரும் தூர நிற்பார்
உறவினரும் தூர நிற்பார் எதனாலே ...?
உண்மைகளை மறைத்திடுவார்
உற்ற நீதி அகற்றிடுவார் எதனாலே ?
உணவு வகை மறந்திருப்பார்
உறக்கத்திலும் பசி இருப்பார் எதனாலே ?
உச்சத்திலே அமர்ந்திருப்பார்
உருக்கி ஏழை வயிற்றிலடிப்பார் எதனாலே ?
உசுப்பி தப்பை செய்ய வைப்பார்
உருண்டு விட்டால் கை விரிப்பார் எதனாலே ?
உலையில் அரிசி கொதிக்குதென்பார்
உதைத்து பிச்சை இல்லை என்பார் எதனாலே ?
உரசி பெண்ணை காதலிப்பார்
உயந்த வீட்டில் பெண்ணெடுப்பார் எதனாலே ?
உபாதையால் படுத்திருப்பார்
உண்டு பல நாட்கள் என்பார் எதனாலே ?
உமையவளை வணங்கி நிற்பார்
உரியவளின் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உத்தரவுக்கு காத்திருப்பார்
உதிர்ந்து விட்டால் மாண்டிடுவார் எதனாலே ?
உள்ளம் தனை கொள்ளை அடிப்பார்
உரிமை என்றால் விலகிடுவார் எதனாலே ..?
உற்சவங்களை மறந்திருப்பார்
உயர் படிப்பை நிறுத்தி வைப்பார் எதனாலே ?
உப்பளத்தில் வேலை செய்வார்
உப்பு வீட்டில் இல்லை என்பார் எதனாலே ?
உச்சி மரத்தில் காகமென்பார்
உடனே வீட்டை பூட்டி வைப்பார் எதனாலே ?
உழுந்து இல்லை விதைக்க என்பார்
உழவன் தான் அவர் என்பார் எதனாலே ?
உள்ளிருந்தே குளிபறிப்பார்
உருட்டு கட்டைக்கு வேலை வைப்பார் எதனாலே?
உச்சு கொட்டி சிலர் உண்டிருப்பார்
உலர்ந்த கண்ணால் சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உறிஞ்சி குடிக்க சிலர் பானமென்பார்
உயிர்ப்பின்றி சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உடையை பார்த்து மதிப்பிடுவார்
உடம்பை பார்த்து மதிப்பிடுவார் எதனாலே ?
உடுக்கை அடித்து பாடிடுவார்
உய்யாத பேயென்பார் எதனாலே ?
உப்பி சிலர் உடம்பெடுப்பார்
உருகி சிலர் நோயாவார் எதனாலே ?
உண்டியலை உடைத்திடுவார்
உத்தியோகத்தை குறை சொல்வார் எதனாலே ?
உடும்பை போல பணம் பிடிப்பார்
உருசி அறியா உண்டிருப்பார் எதனாலே ?
உமியை கூட விற்றிடுவார்
உறியில் எறும்பை ஏற விடார் எதனாலே ?
உதிரத்துக்கும் விலை வைப்பார்
உருக்குலைந்து போய் விடுவார் எதனாலே ?
உளியால் சிலைகள் செதுக்கிடுவார்
உறுதிமொழியை மறந்திருப்பார் எதனாலே ?
உலகெங்கும் அலைந்திடுவார்
உனக்கும் விலை உண்டு என்பார் எதனாலே ?
உறையும் பணியை கரைத்திடுவார்
உதவி செய்ய மறுத்திடுவார் எதனாலே ?
உமிழ் நீரும் துப்ப மாட்டார்
உடைந்த சட்டி வீச மாட்டார் எதனாலே ?
உதைத்தாலும் வாங்கிடுவார்
உரைத்தாலும் உண்டிடுவார் எதனாலே ?
உக்கிரத்தையும் பொருத்திடுவார்
உளுப்பினாலும் அசைய மாட்டார் எதனாலே ?
உதித்த உடன் கதிரவனும்
உறுமியோட கிளம்பிடுவார் எதனாலே ?
உறுமும் புலி சிங்கத்துக்கும்
உறைகள் போட்டு மாட்ட வைப்பார் எதனாலே ?
உத்தரத்தில் பிறந்ததென்பார்
உல்லாசமாய் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உரலில் நெல்லை கொட்டிடுவார்
உலக்கை கொண்டு குத்திடுவார் எதனாலே ?
உடைகள் மானம் காக்க என்பார்
உருவி அதையும் எறிந்திடுவார் எதனாலே ?
உள்ளி இன்றி சமைத்திருப்பார்
உரிக்கும் தோலும் சமைத்திடுவார் எதனாலே ?
உண்ணாத விரதமென்பார்
உரைகள் பல நடத்திடுவார் எதனாலே ?
உலவி எங்கும் நடந்திடுவார்
உன்னையும் என்னையும் பிரித்திடுவார் எதனாலே ?
உரிமை என்று பொய்யுரைப்பார்
உழைப்பு இன்றி வாழமாட்டார் எதனாலே ?
உயிலை மாற்றி எழுத சொல்வார்
உருக்கமாக பேசிடுவார் எதனாலே ?
உத்தமியாம் தாயவளின்
உயிரை கூட எடுத்திடுவார் எதனாலே ?
உள்ளங்கையில் பணம் வேண்டும் அதனாலே ...!!!

சிந்து சிவசங்கர் .

அவனுக்காக மட்டுமே

19.அவனுக்காக மட்டுமே ...

காத்திருப்பு ....
இந்த சொல்லை சொல்வதற்கே
நெஞ்சில் வலிமை வேண்டும் ...
வருகிறேன் என்றவன் வாராமல் போய் விட
மணித்துளிகள் நாட்களாக , நாட்கள் வாரங்களாக ,
வாரங்கள் மாதங்களாக ...மாதங்கள் பல வருடங்களானது ..
அவன் வருகை இன்னும் தாமதமாகவே உள்ளது ..
நிழலுக்கு ஏங்கும் பாலைவனமாய்
என் மனது அவன் வருகைக்கு ஏங்கியது ...
சில இடங்களையும் , பொருட்களையும்
காணும் போதெல்லாம்
மனசுடைந்து போகின்றேன் ...
அவனும் அவன் நினைவுகளும்
கடலோரம் வரைந்த கவிதைகளாய்
அலைகளோடு காணாமலே போனது நிஜம் தானா ..?
இன்று வரை புரியவே இல்லை ...
எதோ மனதை வருட விழி மலர்ந்து பார்க்கிறேன் ...
அதே இடம் , அதே இருக்கை...
எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன
ஆனால் அவன் நினைவு மட்டும் இன்னும்
அப்படியே ஒட்டிகொண்டது மனசெல்லாம் ...
இதே புகையிரத நிலையத்தில் தான்
அன்று நானும் அவனும் சந்தித்தோம் ..
நினைவுகள் அலை மோத இளங்காற்றை சுவாசிக்கிறேன் ...
நடு இரவு ... வீதிக்கு வருகிறேன் ..
தூரவே என்னை கண்ட பறவைகள் சிறகடிக்கின்றன ....
எங்கோ நாய் ஊளையிடும் சத்தம் ...வீதியை வெறித்து பார்க்கின்றேன்
முதல் முதல் அவனை சந்தித்த இடம் எதிர்பாராத மோதலில்
சிதறிய புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன் ...
அவனும் அடுக்குகிறான் என் புத்தகங்களை ...
பார்வைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ள ...
காதல் பறவை தன் இஷ்டப்படி பறந்தது ...
பார்வைகள் மட்டுமே பேசிக் கொண்டது நெடு நாள் வரை
ஒரு வார்த்தை பேச மூவிரண்டு மாதம் ஆனது ...
அந்த வார்த்தை பேசுவதற்குள்
வியர்வை துளிகள் காதோரங்களில்
சொல் சொல் என்று கூச்சலிட்டு
கலைத்து தரையில் சரிந்து விழுந்தது ...
நெற்றியில் மிஞ்சி இருந்த வியர்வை துளிகள்
விழவா வேண்டாமா என்று
போட்டி போட்டுக் கொண்டு இருந்தது ...
மெதுவாக இதழ் மலர்ந்து வார்த்தைகளை
உச்சரிக்க முனைகிறேன் ...
தொண்டைக்குழியில் எதோ உருள்வதாய்
ஓர் உணர்வு ...வார்த்தைகள் வெளி வர சிரமப் பட்டது ....
ஒரு வழியாய் மனதை திடப் படுத்தி சொல்வதற்கு வாய் திறக்க ...
அந்த வார்த்தைகளும் உமிழ் நீரில் மூழ்கி மரணமடைகிறது ...
திக்கி திக்கி என்றாலும் சொல்லலாமென எண்ணி
நிமிர்கிறேன் ... அப்பொழுது ....''உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்''
என்ற வார்த்தைகள் தேனாய் என் செவிகளில் பாய்கிறது ...
அதிசயமாய் நிமிர்ந்து பார்கின்றேன் அவன் ...அவனே தான் சொல்லிவிட்டான் ..
இதயம் திறந்து ... நான் தான் தாமதம் ...
பாதணிகள் கால்களை மூடி இருக்க
தரையில் கோலமிட முடியாமல்
கால் கட்டை விரல் கோபமாய் ஆடிக் கொண்டிருந்தது ...
தமிழ் பெண்களுக்குரிய அந்த வெட்கம் தானோ ...
நேர் நோக்க முடியவில்லை அவன் விழிகளை
அதில் காதல் அம்புகள் தொடுக்க ஆவலோடு காத்திருந்தன ..
வேறு எங்கோ பார்த்தப் படி ... எதுவும் அறியாதவள் போல
அவனை கேட்கின்றேன் ''என்ன சொல்லுறீங்க'' என்று
மீண்டும் சொல்கிறான் சத்தமாய் ... மற்றவர் திரும்பி பார்க்க
நகருகிறேன் அந்த இடத்தை விட்டு ...
ஓடி வந்து பாதையை மறித்துக் கொண்டு
பதிலை சொல்லிவிட்டு போ என்கிறான் ...
அவன் மேல் எனக்கு இருந்த காதலை
அவன் அறிந்திருக்க நியாயமில்லை இருந்தும்
வார்த்தைகளை விட முடியவில்லை ..
அவன் மனதில் நானிருப்பது அறிந்ததும்
ஆனந்தக் கண்ணீர் விழிவழியே துளிகளாய்
எட்டி எட்டி பார்த்து கண்ணகளில் உருண்டு வர
பதைக்கின்றான் .. தப்பா சொல்லிட்டேனா ...?
மன்னிச்சுடுங்க என்கிறான் ...
அவசரமாய் இடைமறித்து சொல்கிறேன்
இல்லை இல்லை நான் அப்படி சொல்லவில்லை ...
குறும்பு தனமாய் அவன் சிரிப்பு ...கண்களும் சேர்ந்து சிரிக்க
என் அருகில் வந்து நோக்கினான் குறு குறுக்கும் அவன் பார்வை
என்னை என்னவோ செய்தது ...வேகமாய் ஓடி மறைந்தேன் ..
அவன் துள்ளி குதித்து சிரிக்கும் ஓசை
என் செவிகளில் நீண்ட நேரமாய் கேட்டது ...
அதிகமாய் பேசும் அவனிடம் ..
என் வார்த்தைகள் வெளி வர அச்சப் பட்டு உள் வாங்கிக்கொள்ளும்
மௌனமாகவே பேசும் என் மனதின் காதல் வார்த்தைகளை ..
புரிந்து கொள்வான் அவன்
எப்பவும் சற்று தள்ளி அமரும் என்னை
அவன் விசித்திரமாய் பார்ப்பான் ...
கவிதைகளை வரைந்து நான் நடக்கும் வழியில் போடுவான் ...
கடிதங்களில் கல்லை கட்டி எறிந்து விடுவான் ...
விடுமுறைகளில் காணாமல் தவிக்கும் நம் இதயங்கள் ..
கண்டதும் கட்டித் தழுவிக் கொள்ள
ஆசைப் படும் ... ஆனால் எதோ தடுக்கும் ...
கலங்கிய விழிகளுடன் மன துயரங்களின் பரிமாறல்
கொஞ்சமாய் பேசி நிறைய நேசித்து ...
கல்லூரி காலம் கனவுகள் நிறைந்த காலம்
இறுதி நாள் ... இன்றாவது நிறைய பேசணும் ..
எண்ணிக் கொண்டு அருகருகே அமர்ந்து
எதுவும் பேசாமால் மௌனமாய் இருவரும் ...கண் கலங்கி நிற்க ....
ரயில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வர ...
செய்வதறியாமல் இருவரும் பார்த்துக் கொள்ள
அவன் மெதுவாய் சொல்கிறான் ...
நான் ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன் ...
பிரிய மனமின்றி ரயில்களில் ஏற ரயில் ஊர்ந்து செல்கிறது ....
இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்ல
சோகம் மனதை தழுவிக் கொள்ள
அவனும் நானும் கைகளை அசைத்த வண்ணம் பிரிகின்றோம்
கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம்
சொட்டு சொட்டாய் தரையை தொட்டது ...
ஜன்னலில் சாய்ந்தபடி உறங்கிப் போனேன் ...
எதோ கூக்குரலிடும் சத்தம் கேட்டு
திடிக்கிடுகிறேன் ... என்னாச்சு எழும்பி பார்கின்றேன்
எதோ விபத்தாம் ... யாரோ சொல்கிறார்கள்
நிறைய உயிர் சேதம் ஆச்சு என்று ...
எட்டி வெளியே பார்க்கின்றேன் ...
ஒரே கூட்டம் ..மெதுவாய் தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்குகிறேன்
என்ன செய்வதென்று தெரியவில்லை
மெதுவாய் நடக்கின்றேன் தண்டவாளத்தில்
வந்த திசைக்கே செல்ல ஒரு ரயில் ஆயத்தமாய் நிற்கிறது
ஓடிச் சென்று அதில் ஏறுகிறேன் ...
ரயில் நகர்கிறது ...
நாளைக்கு ஊருக்கு போய்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்
மீண்டும் அதே இடம் அதே இருக்கை
வந்து அமர்ந்து கொண்டேன்
நடு சாமம் என்றதால் ஆள் அரவம் எதுவும் இல்லை
அந்த இருக்கையில் முடங்கி படுத்துக் கொண்டேன்
மறு நாள் அதி காலையில் ரயில் நகரும் சத்தம்
எழுந்து அமர்ந்து கொண்டேன்
எட்டிப் பார்க்கின்றேன் ரயில் ஒன்று ஊருக்கு கிளம்புகிறது
அப்போது தான் கவனித்தேன் இரண்டாவது ரயில் பெட்டியில் அவன்
சத்தமாய் கூப்பிட்டேன் அவனுக்கு கேட்கவில்லை
ரயில் நகர ஆரம்பித்துவிட்டது
அவசர அவசரமாய் ஓடுகிறேன் ரயிலில் ஏற
ஒருவாறு ஏறிவிட்டேன் கடிசி பெட்டியில்
ஒவ்வொரு பெட்டியை கடந்து
அவனை தேடி செல்கிறேன் ...
ஒரே சன கூட்டம்
அவனருகே வந்துவிட்டேன் ...
அவன் பெயரை சொல்ல எண்ணுகையில் தான்
அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கவனித்தேன்
சரி அவன் அனுமதி வாங்கிவிட்டான் போல
துணிவுடன் ஊருக்கு வருகிறான்
மனசில் ஒரே சந்தோசம் ...
இவனுக்கு தெரியாமலே இவன் பின்னாடி செல்வோம்
என்று எண்ணியவாறு மறைந்து அமர்ந்துக் கொண்டேன்
ஊர் வந்தது அவன் இறங்கி நடக்கின்றான்
நான் குறுக்கு வழியில் சென்று
முன் வாசலுக்கு போகாமல் வீட்டு பின் வாசல் வழி செல்கிறேன்
யாரையும் காணவில்லை
அம்மா அப்பா கூப்பிடுகிறேன் யாரையும் காணவில்லை
எங்கே என்று எண்ணியபடி
அறையை எட்டி பார்க்கின்றேன் என் தங்கை
விசும்பலுடன் சுற்றி அவள் தோழிகள்
என்னடி ஆச்சு சத்தமாய் கேட்கின்றேன்
அவள் பேசவில்லை கோபம் வர
வராந்தாவுக்கு விரைகின்றேன்
சொந்த பந்தங்கள் சுற்றிவர நிற்க
நடுவில் அழகான கண்ணாடி பெட்டியில் யாரது
எட்டிப் பார்க்கின்றேன் ...அதிர்ந்து போகிறேன்
நானா அது ஆம் நானே தான் ...
நான் இறந்து விட்டேனா ...?
மெதுவாக நிமிர்ந்து வாசலை பார்க்கின்றேன்
அவன் தூணில் தலையை அடித்தபடி
கதறிக்கொண்டு இருக்கின்றான்
எல்லோரிடமும் ஓடி ஓடி சொல்கிறேன்
நான் இங்க இருக்கேன் அழவேண்டாம் என்று
யாருமே கேட்கவில்லை ...
அம்மாவின் சத்தம் பெருங்குரலாய் கேட்க யாரோ
என் உடலை தூக்க ...இறுதி சடங்கு நடக்கிறது ..
என் சக மாணவர்கள் அப்பாவிடம் எதோ சொல்ல
அவன் காதுகளில் அப்பா எதோ சொல்ல
அவன் அலறுகிறான் அயோ நானா
என் கையாள எப்படி நான் அவளுக்கு கொல்லி வைப்பேன்
கத்துகிறான் இல்லை இல்லை என்கிறான்
அவன் துவண்டு போய் கிடக்கிறான்
சுடுக்காட்டில் எனக்கான இறுதி சடங்கு ..
அவனே செய்கிறான் ...
நான் அவன் பின்னாலேயே சுற்றுகிறேன்
அவன் என்னை கண்டுக்கவில்லை
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு
கிளம்புகிறான் ... நானும் எல்லோரிடமும் சொல்கிறேன்
அவர்கள் கவனிக்கவில்லை
அவனுடன் சேர்ந்தே செல்கிறேன்
ரயில் பயணம் மீண்டும் அவன் வழி நெடுக
அழுது கொண்டே போகிறான்
பரிதாபமாய் பார்க்கின்றேன்
மீண்டும் அதே இடம் அவனும் இறங்க நானும் இறங்கினேன்
அவன் நம் கல்லூரி வாசலில் ஒட்டுகிறான்
என் கண்ணீர் அஞ்சலியை
அழுதுகொண்டே அவனும் நானும் சந்தித்த இடங்களை
ஒவ்வொன்றாய் பார்க்கின்றான்
மீண்டும் திரும்புகிறான் ....
தண்டவாளத்தில் தலையை வைக்கின்றான்
நான் கதறுகிறேன் வேண்டாம் வேண்டாம்
அவனுக்கு கேட்கவில்லை
நிற்பவர் முதுகில் பலமாய் தட்டி சொல்கிறேன்
அவனை காப்பாதுங்கள் ....
யாரோ அவனை ஓடி போய் காப்பாற்ற
மீண்டும் வருகிறான் மகிழ்கிறேன்
அவனை அனுப்பி வைக்கின்றன
அவன் செல்லும் திசையை பார்கின்றேன் கண்ணீருடன்
பல வருடங்களாக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன்
தண்டவாளங்களை அடிக்கடி சரி பார்க்கின்றேன்
இன்னொரு விபத்தும் இன்னொரு காதல் தோல்வியும் வேண்டாமென
என்றாவது ஒரு நாள் அவன் வருவான்
அவனை பார்ப்பேன் இங்கு இருந்தபடியே
கண்ணீருடன் காத்திருக்கிறேன் ...
அவன் ஒரு ஆண்மாவாயேனும் வராமலா போய் விடுவான்
எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பேன்
அவனுக்காக ...
அவனுக்காக மட்டுமே ..

சிந்து சிவசங்கர் .

என்னுயிர் தோழி

18.என்னுயிர் தோழி ...!!!

அமைதியான இரவுகளில்
மெலிதாய் வீசும் தென்றலில்
கரையோரங்களில் அசைந்தாடும்
நெட்டையாய் வளர்ந்த மூங்கில்களின்
சங்கீதம் செவிகளுக்கினிமையாய்...
இமைகள் மூட மறுத்து நித்திரையோட
யுத்தம் செய்யும் தருணங்களில் ...
யாருக்காக? ... எதற்காக? ... ஏன் ....?
என்று கூட தெரியாமல்
மனசு அலைபாயும் ....
முதல் பிடிக்காதது பிறகு பிடித்து போகலாம் ...
முதல் பிடித்தது பிறகு பிடிக்காமலும் போகலாம் ..
சில விஷயங்கள் அப்படி தான் ...
அப்படி தான் அந்த அழகியும் எனக்கு ....
அழகென்று சொல்வார்கள் அவளை ...
அப்போது அப்படி எனக்கு தோன்றியதில்லை
சிறுவயதில் எனக்கு அவளை பிடிப்பதில்லை
அவளும் என்னை விட்டு தள்ளி தள்ளியே இருப்பாள் ...
சண்டையும் இல்லை நேசமும் இல்லை ...
சில காலம் அப்படி தான் இருந்தேன் ...
யௌவனம் என்னை தொற்றிக் கொண்டதும்
அந்த உண்மை பொய்த்தது ...
ஓரக் கண்ணால் அவளை ரசிப்பதுண்டு ...
அவளை மற்றவர் புகழ மகிழ்ந்ததுண்டு
அவளை பற்றின கவிதைகள்
பக்கம் பக்கமாய் எழுதி குவிப்பார்
என் நண்பர்கள் ... பார்த்ததும் உண்டு ...
ஆனால் அவளுக்காக நான் எழுதிய கவிதைகளை
யாருக்குமே காட்டியதும் இல்லை
சொல்லிக் கொள்ளவும் இல்லை
எப்பவும் அவளைச் சுற்றி தோழிகள் கூட்டமாய் ...
கவனிக்க தவறவில்லை ...
அவளை காணாத நாட்களில்
அவள் வந்திருக்கலாம் என்றும் எண்ணியதுண்டு ...
எதோ ஓர் உணர்வில்
உடல் சிலிர்த்துக் கொள்ளும் ....
அவள் வந்திருப்பாளோ ...?
எட்டி எட்டிப் பார்க்கின்றேன் ...
ஆம் வந்து விட்டாள் ... அழகே உருவாய் ...
கருப்பு உடை அவளுக்கு மட்டும் தான் அழகு
என்று எண்ணிக் கொண்டேன் ....
என்னை கண்டதும் அவள் முகத்தில் தான்
எத்தினை பிரகாஷம் ...
அவளை பார்த்துக் கொண்டிருந்தால்
பசியும் மறந்திடும் ...
அவளை பார்த்து மெலிதாய் தலை அசைக்கிறேன் ..
அவள் முகத்தில் வெட்கத்தின் ஒளி தெரிகிறது ...
பூரித்துப் போகிறேன் ....
அவள் வெட்கத்தை கண்டதும்
ஒரு கவிதை நினைவுக்கு வந்தது ...
''தேவதையே ஒளியாக நீ வந்தாய் என்னருகில்
வாழ்வின் இருள் தனையே துரத்தி விட்டாய் நீ விரைவில் ''
உண்மை தான் .... இப்பொழுதெல்லாம்
இன்பமாகவே இருக்கின்றன என் பொழுதுகள் ...
தினமும் அவளுக்காக நான் எழுதும் கவிதைகள்
அவளிடம் சென்றடையாத காரணத்தால்
பெட்டகங்களுக்கும் லாச்சிகளுக்கும்
இடம்பெயர ஆரம்பித்து விட்டன ...
பாவம் அந்த பேசத் தெரியா கவிதைகள் ...
அந்த கவிதைகள் கூட சில நேரம் என்னை திட்டி இருக்கும் ...
அழகின் இலக்கணமான அவளிடம் செல்ல வில்லை என்ற
கோபம் அவைகளுக்கு அதிகமாகவே ...
பரிதாபமாய் பார்க்கின்றேன் அந்த கவிதைகளை ...
பெட்டகுத்துள் பூட்டி வைக்கிறேன் ....
உறங்கலாமென கண்களை மூடுகிறேன்
உறக்கம் வர மறுத்தது ...
நாளைக்கு மறுபடியும் இடம்பெயர்வு ...
இனி அவளை சந்திப்பேனா?
நினைவு அறிந்த நாள் முதல்
எத்தினை உறவுகள் எத்தினை பிரிவுகள் ...
ஒவ்வொரு உறவாய் இழந்து இப்பொழுது தனிமையாய் ...
நாளைய பயணம் தனிமையாக ....
நினைக்கையில் கண்கள் கலங்கியது ...
எல்லாம் அடுக்கி வைத்தாயிற்று ...
பயணப் பையில் வைக்கின்றேன் பெற்றோரின் புகைப்படத்தை ...
அடுத்து நான் ஆசை ஆசையயாய் அவளுக்காக
எழுதிய கவிதைகள் ...
விட்டுச் செல்ல மனமில்லை
எடுத்து வைத்தேன் எல்லாவற்றையும் ...
அதிகாலையில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது . ...
நான் செல்ல வேண்டிய நேரம் சுட்டிக் காட்டுகிறது
மணிக்கூடு தன் வேலையை சரியாய் செய்கிறது ...
புறப்படுகிறேன் என் புதிய இடத்துக்கு ..
மனது முழுக்க அவளின் நினைவு நிறைந்திருந்தது ...
அன்பா பாசமா பதில் தெரியவில்லை ...
நன்றிக் கடனோ ... ஆமாம் அப்படி தான் இருக்கும்
நினைத்துக் கொள்கிறேன் ....
பயணப் பையை சுமந்தபடி வெளியே எட்டிப் பார்க்கிறேன்
கதவினை பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கின்றேன்
அவள் வரவில்லை ... மெல்ல மெல்ல நடக்கின்றேன் ...
இரண்டு பேருந்து பயணத்திற்கு பின்பு
மாலை புகையிரத நிலையத்தில் காத்திருக்கிறேன் ..
தூரத்தில் புகையிரத வண்டி வரும் சத்தம் ..
ஓடிப் போய் ஏறுகிறேன் ...
ஜன்னலோரமாய் அமர்ந்துக் கொண்டேன் ...
கண்களை மூடியபடி தனிமையின் கொடூரத்தை அசைபோடுகிறேன் ...
என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்
கன்னத்தில் உருண்டோடியது ....
விழிகளை துடைத்தப் படி ஜன்னல் வழி பார்க்கின்றேன்
அவள் .....!!! அவளே தான் புன்கையுடன் அவளையே பார்க்கின்றேன்
என்னை பார்க்க தான் வந்திருப்பாளோ ...
ரயில் மெதுவாய் நகர ஆரம்பித்தது ...
பின்னாலேயே ஓடி வந்துக் கொண்டிருந்தாள் ..
நீர் தேங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தேன் ....
ஓடிக் கொண்டே இருந்தாள்...
மனசு கணத்தது....
கண்களை இறுக மூடிக் கொண்டேன் ...
நீண்ட நேர பயணம் உறங்கிப் போனதே தெரியாமல்
விழிக்கின்றேன் ... அவளை காணவில்லை ...
சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் ...
இறங்க வேண்டிய இடம் இதோ வந்து விட்டது ...
இறங்கி நடக்கின்றேன் ...
சட்டை பையுனுள் இருந்த முகவரியை பார்க்கின்றேன் ...
வந்து விட்டேன் .....வீட்டினுள் ஓர் அறை எனக்காக
மேல் மாடியில் ... மொட்டை மாடி இருக்குமோ
அவசரமாய் வெளியே வந்து பார்க்கின்றேன் ..
ஆமாம் இருக்கிறது ...
பயண அசதியில் உறங்கிப் போனேன் ..
மீண்டும் மாலை எழுந்து மொட்டை மாடிக்கு செல்கிறேன் ..
என் கண்களை நம்பவே முடியவில்லை ..
அவள் வந்துவிட்டாள்... என்னையே பார்த்து புன்னகைப்பதாய் உணர்ந்தேன் ..
கவிதை மனதுள் தோன்றியது ..
காகிதம் பேனா சகிதம் அமருகிறேன் ...
எழுதத் துவங்குகிறேன் ...
தன்னந்தனி வாழ்க்கையிலே
துணைக்கு வரும் நல் மனமே
உன்னை தேடும் பகல் பொழுதில்
மறைந்து விடும் இளமதியே
காற்றோடும் வருகின்றாய்
இருளோடும் வருகின்றாய்
நான் அழைக்கும் வேளைகளில்
எங்கே நீ மறைகின்றாய் ...
பாதி மாதம் தெரிகின்றாய்
மீதி மாதம் ஒழிகின்றாய்
உறவாக உன்னை நினைத்தால்
வருவாயா ஒளிகீற்றே
சிந்தும் சிறு பனி துளிகள்
சேர்த்து வைப்பேன் உனக்காக
நான் முதிர்வதற்குள் வந்திடுவாய்
சிங்கார வெண்ணிலவே ....
சோகம் தாக்கும் இருள் பொழுதில்
குளிர் தந்து நீவிடுவாள்
நீண்ட நேரம் வான் வெளியில்
எனக்காக அசைந்திடுவாள்
சிமிட்டி சிரிக்கும் வெள்ளிகள் அவள்
தோழிகள் என நான் நினைப்பேன்
உன் தோழி நான் தான் என -
என்னை பார்த்து சிரித்திருப்பாள் ...
நிலா அவள் என்னுயிர் தோழி ...

சிந்து சிவசங்கர் .!

நான் உயிருள்ள ஜீவன்

17.நான் உயிருள்ள ஜீவன்

வீட்டில் ஒரே ஆரவாரம்
அவன் இன்று வெளிநாடு போகிறானாம் ...
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே
இதே பேச்சு தான் ...
அவன் போவது உறுதி ஆனதுடன்
என்னிடம் ஓடி வந்தான் ..
ஏய் உனக்கு ஒன்று தெரியுமா ..?
நான் வெளிநாட்டுக்கு போக போறேன் என்றான் .
தலையை அசைத்தேன்
இனிமேல் உன்னோட பேச முடியாதே
இருந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்றான் ..
கவலையாய் இருந்தது ...
சோகமாய் அவனை பார்த்தேன்
அவன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது
அவன் சொன்னான் கவலை படாதே
நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும்
உனக்காக ஒரு வரி இருக்கும் என்றான் ...
அதற்கும் தலையை அசைத்தேன் ..
மெதுவாய் புன்னகைத்தவன்
என்னை இறுக கட்டி அணைத்துக் கொண்டான் ...
துக்க மிகுதியில் உயிரே போவது போல் உணர்ந்தேன் நான் ...
அவன் தலையை மெதுவாய் கோதி விட்டேன் ...
போய் வரவா என்றவன் வீட்டுக்குள் சென்றான் ...
இதோ தோளில் பையுடன் புறப்பட்டுவிட்டான்
வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றவன்
என்னை ஒரு முறை திரும்பி பார்த்தான் ...
அவன் விழிகளில் இத்தனை சோகம் இன்றைக்கு ...
எண்ணிக் கொண்டேன் நான் ...
சோகமாய் அவன் என்னை பார்த்து தலை அசைத்தான் ..
அந்த தலை அசைப்பு போய் வரவா என்பது போல் இருந்தது
பதிலுக்கு போய் வா என்பது போலவே நானும்
தலை அசைத்தேன் கணத்த மனதுடன் ...
கண்ணீர் கண்களில் தத்தளிக்க எல்லோருக்கும்
சொல்லிக் கொண்டு புறப்படுகிறான் ..
தொலை தூரப் பாதையில் அவன் உருவம்
சிறு புள்ளியாய் மறையும் வரை
கையசைத்து கொண்டே இருந்தேன்
அவனையே பார்த்தபடி
அவனும் கையசைத்த படியே
சென்று மறைந்தான் ...
என்னால் ஜீரணிக்க முடியவில்லை
அவன் என்னருகில் இல்லை என்பதை
அவனையே நினைத்தபடி இருந்தேன் அன்று நாள் பூராவும் ..
பொழுது சாய்ந்ததும் ஊரே அமைதியாய் இருந்தது
அவன் நினைவு என்னை ஆட்கொண்டதால்
சிந்தனையில் மூழ்கி இருந்தேன் நான் ...
அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் அடிக்கடி
சின்னச் சின்னச் சண்டைகள் வரும்
அவன் கோபித்து கொண்டு என்னிடம் வருவான்
ஏனோ தெரியவில்லை அவனுக்கும் என்னை
ரொம்ப பிடிக்கும் எனக்கும் தான் அவனை பிடிக்கும் ...
எல்லா பிரச்சினைகளையும் என்னிடம் சொல்லுவான் ..
நான் மௌனமாய் இருப்பேன் ...
ஏன் என்றால் என்னால் தான் பேச முடியாதே .
கேட்டு கொண்டே அவன் தலையை கோதி விடுவேன் ...
பேச முடியாத ஊமை நான்
ஆனாலும் அவன் என்னோடு அடிக்கடி பேசுவான்
நான் புரிந்து கொள்வேன் ....
அவன் ஆசைகள் சந்தோஷங்கள் துக்கங்கள்
எல்லாமே என்னிடம் சொல்லி இருக்கிறான்
ஏனோ தெரிய வில்லை அவன் இன்று போக போறதை சொன்னதும்
எனக்குள் இந்த மாற்றம் ... ஏன் என்று புரியவில்லை ...
எனக்கு தேவையானவற்றை நான் கேட்காமலே
சரியான நேரத்துக்கு எனக்கு தந்து விடுவான்
என்னை பார்க்காமால் அவனால் இருக்கவே முடியாது
எனக்கும் ஒரு நாள் கூட அவனை பார்க்காமல் இருக்கவே முடியாது ...
இப்படி தான் ஒரு நாள் அவன் என்னை தேடி வந்தான்
வந்தவன் என்னருகில் அமர்ந்து கொண்டு சொன்னான்
ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா ...
உன்னை பார்க்கலைனா என்னால தூங்கவே முடியலை என்றான் ...
நான் திடுக்கிட்டு அவனை பார்த்தேன் ...
அவன் பார்த்த பார்வையில் பாசம் தெரிந்தது அன்பு இருந்தது ...
நான் உருகி போனேன் ... அன்போடு அவனை பார்த்தேன் ...
அவன் அன்று பார்த்த பார்வை இன்றும் என்னால்
மறக்கவே முடியவில்லை ....
சில நேரங்களில் அவனை காணவில்லை என்றதும்
அவனது அம்மாவுக்கு தெரியும்
அவன் என்னோடு இருக்கிறான் என்று
சத்தமாய் கூப்பிடுவாள் அங்கே என்ன செய்றாய் என்று ...
அவன் எழுந்து ஓடுவான் ...
ஒன்றொன்றாய் நினைவுக்கு வந்து வந்து மறைந்தது ...
அவன் வெளிநாடு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது .
அவன் அம்மாவை விட நான் தான் அவன் கடிதத்தை
எதிர்ப்பார்த்து காத்திருந்தேன் ....
அன்று தபால் காரன் வந்தான் ...
எனக்கோ ஒரே சந்தோசம்
எல்லோரும் கடிதத்தை பிரித்து படிக்க
எனது பெயர் கேட்குதா என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்
ஆம் அவன் சொன்னது சரி தான்
எல்லோரையும் சுகம் கேட்டதா அவன் எழுதிய கடிதத்தில்
என்னையும் கேட்டு எழுதி இருந்தான்
அதை படித்ததும் எல்லோரும் சிரித்தார்கள் ...
ஆனால் எனக்கோ இன்பம் பாதி துன்பம் பாதி ...
அவன் இன்னும் என்னை மறக்கவில்லை
சந்தோஷமாய் உணர்ந்தேன் ....
மெலிதாய் வீசும் தென்றல் காற்றில்
அவன் பேசிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் என் மனதில் வந்து போனது ...
ஒரு வருடம் ஓடி போனதே தெரியவில்லை ..
அந்த ஒரு வருட காலத்துக்குள்
அவனின் கடிதங்களுக்காக ஏங்கினது
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
எல்லாமே சுகமான சுமைகளாய் இருந்தது...
திடீரென ஒரு நாள் பெரும் சத்தம்
எதோ விழுந்தது போல் இருந்தது ...
ஒரு கணம் ஊரே அதிர்ந்து போனது
சற்று நேரத்துக்கெல்லாம் ஆள் ஆளுக்கு
ஒவ்வொரு பையுடன் சைக்கிள்களை
உருட்டிக் கொண்டு எங்கோ போகிறார்கள் ..
அவர்களுடன் நடக்க நானும் எத்தனிக்கின்றேன் ..
முடியவில்லை .. என்னால் தான் நடக்கவும் முடியாதே ...
மெல்ல நகர முயற்சிக்கிறேன் ..
என் உடம்பு வலித்தது ...
திரும்பி பார்கிறேன் என் ஒரு பக்க உடம்பு எரிந்து
கருகிப் போய் இருந்தது ....
வலி தாங்க முடியவில்லை ..
கத்துறேன் கதறுகிறேன் எல்லோரும் ஓடுகிறார்கள் ...
யாருமே எனக்கு செவி மடுக்கவில்லை ...
துடித்து போகிறேன் ...
ஒரு இரவுக்குள் ஊரே மாறி போய் இருந்தது ...
யாருமே ஊரில் இல்லை ..
காக்கா குருவி கூட இடம் பெயர்ந்துவிட்டது ...
திடீரென்று தனித்து விட்டதாய் உணர்கிறேன் ...
வீட்டிலும் யாரும் இல்லை ..
அவன் கடிதம் வருகிறதா இல்லையா அறிய முடியவில்லை ...
கலங்கிப் போய் விட்டேன் ...
தினம் தினம் பாதி உடலோடு
காயப்பட்ட மனசோடும்
காத்திருந்தேன் யாரும் வரவில்லை ...
அதிகாலையில் சூரியன் ...
மாலையில் சந்திரன் ...
இடைவிடாது உரசும் காற்று ..
இவைகள் மட்டுமே என்னை பார்த்து செல்லும் ...
சிறிது சிறிதாய் நான் செத்துக் கொண்டிருந்தேன் ...
எல்லோருக்கும் உபயோகமாய் இருந்த நான்
இன்று யாரும் அற்ற அனாதையாய் ..
தனித்து நிற்கின்றேன் ....
என்னையும் ஒரு ஜீவனாய் மதித்தவன்
என்னவானான் ? ஊகிக்க முடியவில்லை ...
திடீரென பேச்சு குரல் கேட்டு பார்க்கிறேன் ...
வீட்டில் எல்லோரும் வந்து இருந்தார்கள் ...
கொஞ்சமாய் கூட்டம் ..
என்னவா இருக்கும் ..
யாரோ சொல்கிறார்கள்
பெரியவர் சாக போறாராம்
சொந்த வீட்டில் சாக இஷ்டப்பட்டார் போல ..
சோகமாய் இருந்தது ...
கொஞ்சம் சந்தோசம் எட்டி பார்த்தது ...
அவன் வருவானோ ...ஆமாம் வருவான் எல்லோரும் சொல்கிறார்கள்
இரண்டே நாள் தான் ..
பெரியவர் இறப்பை தழுவ
உறவுகள் அவன் வரவை எதிர் பார்த்து காத்திருக்க
நானும் ஆவலாய் இருந்தேன் ...
அந்த ஆவலும் சந்தோஷமும் நீடிக்கவில்லை
என் மேல் எதோ அடிவிள .. பார்க்கிறேன்
யாரோ என்னை வெட்டுகிறார்கள் ..
துவண்டு போகிறேன் அய்யோ ..
வீடு முற்றத்தில் வாகன சத்தம்
அவன் வந்து விட்டான் ..
மெதுவாய் கையை உயர்த்தி அசைக்கிறேன் ...
அவன் என்னை பார்க்கவில்லை
ஓடுகிறான் வீட்டுக்குள் ..
பாவம் அவனுக்கு அவன் தந்தையின் இழப்பு ...
அவனின் கதறலை கண்டது என் வலி மறைந்து போனது ..
அவன் தந்தை உடலை தூக்குகிறார்கள் ..
நானும் அத்தோடு செத்துக் கொண்டிருக்கிறேன் ...
சுடலையில் பெரியவர் உடலுக்கு மேல்
வெட்டப் பட்ட நான் அடுக்கி வைக்கப் படுகிறேன் ...
இதோ கொழுந்து விட்டு எரிகிறேன் ...
பிரேதமும் நானும் ஒன்றாய் எரிகின்றோம் ...
சாகும் தருணத்தில் அவன் முகத்தை பார்க்கின்றேன்
சோகமே உருவாய் ....
அவன் எனக்காகவே அழுவதை நினைத்துக் கொண்டு
முற்றும் முழுதாய் சாம்பலாகிறேன் ...
காற்றோடு காற்றாய் கலந்து விட்ட நான்
வாழ்ந்த இடத்தை போய் பார்க்கிறேன் ...
பெரும் சத்தமாய் அவன் குரல் ...
இந்த மரத்தையா வெட்டினீங்க ?
அய்யோ முதலே எனக்கு தெரியாம போச்சே ...
அம்மா சொல்கிறாள் இல்லைடா தம்பி
செல் விழுந்து அந்த மரம் பாதி பட்டு போய் இருந்தது.
அதான் வெட்டி சாய்க்க சொன்னேன் ...
அவன் கண்களில் கண்ணீரை கண்டு வியக்கின்றேன் ...
இவன் ஒரு மரமண்டை அம்மா சொல்கிறாள்
அட கடவுளே முட்டாளுக்கு உதாரணம் நானா
நினைத்து கொள்கிறேன் ...
கடிதத்திலும் கேட்டு கேட்டு எழுதினாய் தெரியும்ட ...
சரி விடு அதான் வெட்டியாசே ..
இல்லைமா இந்த மரம் கூட எனக்கு தாய் மடி போல தான்
அவன் உருக்கமாய் சொன்னான் ...
அவனின் அந்த வசங்களை கேட்டபடியே
நான் காற்றோடு கலக்கின்றேன் ....
தொட்டிலுக்கும் நான் சுடலைக்கும் நான்
வாழ் நாளெல்லாம் கால் கடுக்க நின்றேனே
ஏன் என்று கேட்டார்களா ?
கேட்காமலே நிழல் கொடுத்தேனே
ஏன் என்று கேட்டார்களா ...?
மலர் கொடுத்து கனி கொடுத்து
உயிர் வரை கொடுத்தேனே சிறிதும் தயங்காமல்
நான் வெறும் மரம் தானா
மரம் என்று சொன்னால் வெறும் மரம் மட்டுமல்ல
உயிருள்ள ஜீவன்....
உருக்குலைந்து வெட்டப்பட்டு தறிக்கப்பட்டு
கிளைகள் வேறு , இலைகள் வேறு , வேர்கள் வேறு என்று
தனி தனியாய் பிரிக்கப் பட்டு
சாகடிக்கப் பட்டுவிட்டேன்...
காற்றோடு கலந்து விட்டேன் .....
போகிறேன் வாராத ஊருக்கு ....!!!


சிந்து சிவசங்கர்.

இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க

16.இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க... !!!

இவளின் அழகினை
இவனும் ரசிக்க
இன்னிசை கேட்டு
இன்பத்தில் மிதக்க
இமயத்தில் அமர்ந்து
இருப்பதாய் நினைக்க
இடைவெளி இன்றி
இருவரும் பார்க்க...

இல்லையென தோணும்
இடுப்பினை அசைக்க
இரவினில் வண்டுகள்
இசைகளை மீட்க
இதமான காற்றினில்
இலைகளும் சிலிர்க்க
இசைந்தாள் அவளும்
இருதயம் கொடுக்க...

இரத்தின கல்லென
இனியவள் ஜொலிக்க
இவளே உயிரென
இனியவன் நகைக்க
இயக்கமே இன்றி
இயல்பினை தொலைக்க
இயலுமோ காதலை
இன்றும் மறக்க...

இரத்தொன்று காதலின்
இடையினில் குதிக்க
இவனே மூச்சென
இருந்தவள் பதைக்க
இப்படி அப்படி
இன சனம் கதைக்க
இடர்கள் முளைத்தது
இவர்களை பிரிக்க...

இதயத்தின் துடிப்பது
இடியென முழங்க
இயற்கையின் மழை போல்
இரு விழி நனைக்க
இறகுகள் ஒடிந்ததாய்
இளங்குயில் துடிக்க
இரையின்றி அடிக்கடி
இரைப்பையும் தவிக்க...

இமையென நினைத்த
இறைவனும் ஒழிக்க
இளகிய மனசும்
இரும்பாய் விரைக்க
இழவொன்று விழுந்ததாய்
இடமே சலிக்க
இன்முகம் காட்டி
இல்லமும் பகைக்க...

இருந்தது இருந்த
இடத்தினில் கிடக்க
இருட்டினில் அப்புவின்
இருமலும் கேட்க
இக்கரை தனிலே
இளையவன் முறுக்க
இழந்தவள் இதயம்
இறப்பினை அணைக்க ...

இங்கிதம் இல்லா
இருப்பவர் இருக்க
இரனியர் பிறப்பில்
இவர்களும் பிறக்க
இறுகிய மனத்தவர்
இவ்விடம் நிலைக்க
இஷ்ட தெய்வங்கள்
இல்லையோ தடுக்க...

இம்சை அரசர்கள்
இருப்பிடம் தகர்க்க
இயம்பினால் போதும்
இங்கேயே மரிக்க
இரக்கத்தை மறந்த
இம்மண்ணை துதிக்க
இணக்கமும் உண்டோ
இலக்கணம் படைக்க!!!

அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து

15.அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து !!!

இதமான காற்று மெல்ல
என்னை தொட்டுச் செல்ல சில்லிட்டது உடல் ...
மெதுவாய் திரும்பி பார்க்கின்றேன் .....
அசைய முடியவில்லை
நேற்று வாங்கிய அடி உதை காரணமாய்
நொறுங்கி போய் இருந்தேன் ...
நேற்று இரவெல்லாம் பெய்த மழையில்
தெப்பமாய் நனைந்து போய் இருந்த எனக்கு
இன்று எரிக்கும் வெயில் கதகதப்பாய் இருந்தது ...
ஏதோ குத்துவது போல் உணர்வில்
அவசரமாய் பார்க்கின்றேன்
ஈர்க்கு குச்சி ஒன்று என் மேல்
குத்திக் கொண்டிருந்தது ...
ஒரு தடியின் மேல் சாய்ந்தபடி
மீண்டும் கண்ணயர்கிறேன் ...
என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கும் வேளை
எனக்கு ஏற்பட்ட இன்ப துன்பங்களை
அசைபோடுகிறது மனது ...
என் பிறப்பை பற்றி சொல்ல
எனக்கு தெரியவில்லை
ஏனெனில் என்னை செய்தவரை
தான் எனக்கு தெரியும் ...
விதம் விதமாய் உடைகள் எனக்கு ...
என் உடலை அலங்கரிக்கும் உடைகள்
மற்றவர் கண்களை பறிக்கும் அளவு
பிரகாசமாய் இருக்கும் ...
குழந்தை முதல் கிழவி வரை
என்னை தேடாதவர்களே இல்லை
எல்லோருக்கும் நான் தேவை படுவேன் ..
அது அவர்களுக்கு தேவை ஏற்படும் வரை தான் ..
அதன் பிறகு இப்படி தான் செத்து மடிய வேண்டும் ..
கொண்டாட்டங்கள் திருவிழாக்கள்
நடக்கும் இடங்களில்
நானும் நிற்பேன் என் தோழிகளுடன் ...
பல பேர் வருவார்கள் விலை பேசுவார்கள்
அடி மாட்டு விலைக்கு கேட்பார்கள்
வேண்டாம் என்பார்கள் வேண்டும் என்பார்கள் ...
எம் தலை எழுத்தை பார்த்தீர்களா?
வேண்டாம் என்றாலும் நாம் பேச கூடாது ..
வேண்டும் என்றாலும் நாம் பேச கூடாது ..
எம் சந்தோஷத்தை எப்பவுமே யாருமே கேட்பதில்லை ..
வலுகட்டாயமாய் அனுப்ப படுவோம்
இஷ்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் ..
ஒவ்வொரு வீட்டு பெண்களும் எம்மை கண்டால்
ஒரு கணம் நிண்டு பார்ப்பது வழமை
எனக்கு கூட பெண்களை ரொம்ப பிடிக்கும் ...
அதுவும் என்னை விருப்ப பட்டு கேட்ட
சுகுணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
சுகுணா ஒரு அழகு தேவதை ...
அவளோடு நானிருந்தால் இன்னும் அழகு என்று
அவள் கணவன் எண்ணி இருப்பான் போலும் ..
ஆறு மாத காலமாய் சுகுனாவுடன் பழகிய எனக்கு ..
அவள் எப்பவுமே தீங்கு செய்ய வில்லை ...
அப்பப்போ என்னை தொட்டு பார்ப்பாள் ...
அடிக்கடி என்னை சுத்தம் செய்வாள்
அவள் உறக்கத்தில் அசைகின்ற போதெல்லாம்
நான் சிரித்துக் கொள்வேன் ...
அவள் அவசரமாய் வேலைகள் செய்யும் போது
அவளோடு பேசிக்கொள்வேன் அடிக்கடி ...
பதிலே சொல்ல மாட்டாள் ..
பதிலுக்கு ஒரு புன்னகை ..
சில நேரம் நான் அவளை காய படுத்தி இருக்கிறேன்
திட்டவே மாட்டாள் ஷ் ஷ் என்று சொல்லுவாள் ..
அத்தோடு சரி ......
அவள் கணவன் இல்லாத நேரங்களில்
அவள் தனியாக பேசுவதை எல்லாம் கேட்பது நான் தான்
பரதமும் ஆடுவாள் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல்
அப்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிப்பேன் ...
அவள் ஆடி அசைகையில் என் சிரிப்பு அதிகமாகும்
சில நேரங்களில் அவள் சோகமாய் இருப்பாள்
அந்த சோகம் என்னையும் ஒட்டிக் கொள்ளும் ..
அப்போ கூட என்னை எண்ணிக் கொள்
என்று அமைதியாய் இருப்பேன்..
பாவமாய் இருப்பாள் அவள் நல்லவள்
நான் நினைத்துக் கொள்வேன் ...
நான் அவளோடு போன இடங்கள்
ஒரு நாளும் மறக்காது ..
அவள் கிராமத்தில் அழகிய நீர்வீழ்ச்சியில் குளித்தது ..
கோயில்களுக்கு சென்றது ...சினிமா பார்க்க சென்றது ..
இப்படி நிறைய இடங்கள் .. அங்கு எல்லாம்
அவள் கூடவே இருந்தேன்
அவள் துக்கங்களின் போது கூட
நான் பிரிய முற்படவில்லை ..
என்றும் போல் அன்றும் வேலைகளில்
மும்முரமாக இருந்தாள் அவள் ..
தொலைபேசி மணி அழைத்துக்கொண்டே இருந்தது ..
தனக்கு தானே பேசி கொண்டாள் .
. ''யாரு இந்த நேரத்துல ''
நானும் அவளை பார்கின்றேன்
என்னிடம் தான் கேட்டாளோ?
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் யாருமே இல்லை ..
தொலைபேசியை கையில் எடுத்தவள்
''யாரு பேசுறது ''என்றாள்..
அந்த பக்கம் கேட்ட ஆண் குரலில் பதற்றம் தெரிந்தது ....
அய்யோ.............. என்று வீறிட்டாள் சுகுணா .........
அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தாள்...
எனக்கு ஒன்றுமே புரியவில்லை ..
யாரும் வீட்டில் இல்லை என்ன
செய்வதென்று தெரியவில்லை ..
கதறவேனும் போல உள்ளது ஆனால் எப்படி ?
சுகுணா எழுந்திருக்கவில்லை
எதுவும் தெரியாமல் நான் குழம்பி போனேன் ...
தொலை பேசியில் யாரோ
கூப்பிட்ட வண்ணம் இருக்கிறார்கள் ..
அடுத்த சில நொடிகளில்
வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்
யாரோ உள்ளே வரும் அரவம் ....
கதவு பலமாக தட்ட படுகிறது ..
ஜன்னல் வழியா சத்தம் கேட்கிறது
அவங்க மயங்கிட்டாங்க போல ..
ஜன்னல் வழியாக உள்ளே வந்த ஒருவன்
கதவை திறக்கின்றான்
நான்கைந்து பெண்கள்
ஓடி வந்து சுகுணாவை தூக்க
யாரோ நான்கு பேர் எதையோ தூக்கி வருகிறார்கள்
வராந்தாவில் வைக்கிறார்கள்
வெள்ளை துணியால் சுற்றப் பட்டுள்ளது ..
எல்லோரும் அழுகிறார்கள் ..
ஒப்பாரி சத்தம் கேட்கிறது ...
செய்வதறியாமல் நான் ஸ்தம்பித்து நிக்கின்றேன் ..
சுகுணா ஓடிச் சென்று அந்த
வெள்ளை துணியை மெதுவாய் அகற்றுகிறாள்
அவள் கணவன் இறந்து கிடக்கின்றான் ..
அதிர்ச்சியால் வாயடைத்து
நிக்கின்றாள் அவள் .. ...நானும் தான்
தன் தலையில் அடித்து கொண்டு அழுகிறாள் அவள்
எனக்கும் வலிக்கிறது அவளை பார்க்கையில் ..
சன கூட்டம் அதிகமாகியது
யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள்
மறுநாள் அந்த உடலை
கொண்டு போய் விட்டார்கள் ...
எரித்து விட்டதாக யாரோ பேசுகிறார்கள் ..
சுகுணா ஒரு மூலையில்
விசும்பிக் கொண்டிருக்கிறாள் ..
பாவம் அவள் நினைத்து கொள்கிறேன் நான் ...
திடீர் என்று சில பெண்கள்
வீட்டுக்குள் நுழைந்தார்கள்
சுகுணாவை அழைத்துக்கொண்டு
போனார்கள் பின் புறமாக
அவளை இருத்தி விட்டு
எதையோ சொல்கிறார்கள் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
அடுத்த நொடி அவர்கள் என்னை
அடித்து நொறுக்குகிறார்கள் ..
நான் சுகுணாவை
பரிதாபமாய் பார்க்கின்றேன் ..
சுகுணா வேண்டாம் வேண்டாம்
விடுங்கள் விடுங்கள் என்று அலறுகிறாள்
அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்னை
அடித்து நொறுக்குவதில் கவனமாக இருந்தார்கள் ..
அடித்த அடியில் நொறுங்கி போகிறேன் நான்
உடலெல்லாம் துண்டு துண்டாக சிதறுகிறேன்
நிலமெங்கும் சிதறிக்கிடந்த என்னை
கூட்டி குப்பையில் போட்டு விட்டார்கள் ...
நேற்று பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்தது ..
அழகு ஜொலிக்கும் நான் இதோ
மழை வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்து
ஆற்றுக்குள் விழுந்து மிதக்கின்றேன் ...
தூரத்தில் ஒரு வெள்ளை உருவம் ..
மூடத் துடிக்கும் விழிகளை திறந்து பார்க்கின்றேன் ..
வெண்ணிற உடையில் சுகுணா விதவையாய் ,,
சோகம் தொண்டையை அடைக்கிறது ....
கணவன் இறந்து விட்டால்
பூச்சூடுவதில்லை பூவுக்கு விடுதலை ...
பொட்டு வைப்பதில்லை அதற்கும் விடுதலை
மஞ்சள் பூசுவதில்லை மஞ்சளுக்கு கூட விடுதலை
இவைகளை விட்டு விடும் அவர்கள் என்னை மட்டும்
ஏன் துவம்சம் செய்கிறார்கள்
அந்த நாளில் சொல்வார்கலாமே
அவன் இறந்தால் அவளும் உடன் கட்டை ஏறுவாள் ....
அன்று தொட்டு இன்று வரை
அவள் கணவன் இறந்தால் நாங்கள்
உடன்கட்டை ஏறுவதை என்னவென்று சொல்வீர் ?
எனக்குள் நினைத்துக் கொள்கிறேன் நான்
''அவள் விதவை என்றாள் நாங்கள் நொறுங்கி விடுவோம் .''...
வளையல் எனப் பெயர் கொண்டதால் ......
மடிகின்றேன் ஆற்றிலே மிதந்து மிதந்து
உயிர் தனை தொலைக்கின்றேன் நீருக்குள் விழுந்து விழுந்து ....
அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து நினைந்து ....



சிந்து சிவசங்கர்

மௌனித்துக் கொள்கிறேன் ஒரு நாள்

14.மௌனித்துக் கொள்கிறேன் ஒரு நாள் .......

நான் யார் தெரியுமா ?
ஆமாம் உங்களுக்கு தெரியும்
நான் யார் என்று ..
எனக்கும் தெரியும்
இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள் ...

சூரியன் அஸ்தமிக்கும் அதி காலையில்
பின்பு மறைந்து கொள்ளும் அது மாலையில்
ஓய்வெடுக்கும் போல
சில மணி நேரம் கண்ணில் படுவதே இல்லை ...

நிலவு ஒளிதரும் பாதி மாதம்
ஒழிந்துக் கொள்ளுமோ மீதி மாதம்
அதற்கும் ஓய்வு தேவை போல
மூவைந்து நாட்கள் எங்கே போகின்றது ...?

காற்று கூட விட்டு விட்டு தான் வந்துரசும்
காற்றை உணராத நேரங்கள் அதன் ஓய்வு நேரம் போல
சில நேரங்களில் மறைகின்றதே ...

ஆனால் நான் ஓய்வே எடுப்பதில்லை
மற்றவர்க்காக உழைப்பதே என் முக்கிய வேலை
ஆனால் அதுவே என் சந்தோஷம்
நான் என் தொழிலை தெய்வமாய் மதிக்கிறேன் ...

சில நேரங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கும்
அப்ப கூட நான் வேலை பார்க்க தான் இஷ்ட படுவேன்
என் எஜமானிகள் விட மாட்டார்கள் எனக்கு சிகிச்சை அளிப்பார்கள்
அவசர பட்டு அவர்கள் நல்லவர்கள் என்று எண்ணாதீர்கள்
நஷ்டம் வந்திடுமே என்ற பயம் ....

தினமும் நான் வேலைக்கு செல்கையில்
பலதரப்பட்ட மனிதர்களை காண்கின்றேன்
தத்தி தாவும் பாலகனும்
தள்ளாடும் பாட்டனும்
பூச்சூடிய பூவையும்
மீசைமுறுக்கும் இளைஞனும்
தலையை நீவும் அம்மாவும்
தட்டி கொடுக்கும் அப்பாவும்
பட்டை போட்ட சாஸ்திரியும்
சிலுவை சுமந்த மத குருவும்
பிச்சை எடுக்கும் ஆண்டியும்
அங்காங்கே திருடரும்
நயவஞ்சக காரனும்
கண் தெரியா குருடனும்
காது கேளா செவிடனும்
பொய் சொல்லும் புளுகனும்
உண்மை பேசும் நல்லவனும்
சொல்லி சொல்லி அலுத்திடும்
எத்தனையோ இன்னும் இன்னும் .....

உணர்வு எனக்கு இல்லை என்பார்
இருப்பவர் இங்கு உணர்பவரா ?
சிரிப்பெனக்கு வருவதில்ல
சிரிப்பவர் எல்லாம் நல்லவரா ...?
கண்ணீரும் வருவதில்லை
அழுவதனால் என்ன பயன் ...?

ஜாதி மதம் பார்ப்பதில்லை
பேதம் என்றும் அறிந்ததில்லை
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும்
ஒரே நிலையில் வைத்திடுவேன்
நான் முற்போக்கு வாதியல்ல ...

நான் யோக்கியவானில்லை
நானும் பல குற்றங்கள் செய்திருக்கிறேன்
ஆனால் இதுவரை அதற்காக தண்டனை அனுபவித்ததில்லை
அது கூட என் குற்றமில்லை
யாரும் எனக்கு தண்டனை வழங்கவில்லை ...

தண்டனை என்றதும் தான் நான் சொல்ல வந்த கதை
என் மனதில் நிழலாடுகிறது
அதிகாலையில் தினமும் நான் வேலைக்கு செல்கையில்
அவளை பார்ப்பேன் ஆஹா அழகானவள்
இப்படி நானே வியக்கும் அளவு அழகானவள் அவள் ..

அவள் என்னோடே வந்து போவாள்
ஆனால் நான் பேசியதே இல்லை
அவளை பார்க்கும் போதெல்லாம்
அவள் கை முதல் முதல் என்னை தொட்ட நாள் நினைவுக்கு வரும் ...

தினமும் தான் அவள் என்னை தொட்டு தொட்டு பேசுகிறாள்
ஆனாலும் அந்த முதல் நாள் ஏனோ நினைவை விட்டு செல்லவில்லை
அவள் தொடுவதென்னவோ என்னை தான்
ஆனால் அவள் பேசுவது என்னோடல்ல
ஒரு ஆடவனுடன் பேசுவாள் ..

அந்த ஆடவனை அடிக்கடி பார்க்கின்றேன்
அந்த அழகியுடன் மட்டுமல்ல பல அழகிகளுடன் ...
அவள் அதை அறிந்திருக்க நியாயமில்லை
சொல்லி விட எனக்கும் வாய் இல்லை ....
மௌனித்துக் கொள்கிறேன் ...

திடீரென்று ஒரு நாள் அவளை பார்கிறேன்
சோகமே வடிவாய் அழுது வீங்கியஅவளது அழகிய விழிகள்
கண்ணீரை துடைத்து துடைத்து சிவந்து போன கன்னங்கள் ...
இடை இடையே கேட்கும் விசும்பல் ..பரிதாபமாய் இருந்தாள்....

வழமை போல என்னை தொட்டதும்
உணர்ந்தேன் அவள் உடல் கொதிப்பதை பதறினேன்
அது அவளுக்கு தெரியவில்லை
அவள் உடலும் மனதும் நொந்து போனவளாய் காணப்பட்டாள்
எனக்குள்ளே நான் அழுது கொண்டேன் ...

மாலை நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது
நான் வேகமாய் வந்து கொண்டிருந்தேன்
அப்போது எதிரில் ஓர் உருவம்தள்ளி போ தள்ளி போ கூக்குரலிடுகிறேன்
யோசிக்கிறேன் என் மூளைக்கு எட்டவில்லை ...எ
ன் மீது மோதி மறைந்தது அந்த உருவம்
வீலென்று ஒரு சத்தம்
அதிர்ச்சியோடு நான் செல்கிறேன் ...........

மறு நாள் நான் வேலைக்கு செல்கிறேன்
போகும் வழியில் ஒரே கூட்டம் எட்டிப் பார்க்கிறேன் ..
ஒரு கணம் ஆடிப் போகிறேன் ...
என் அழகி இரத்த வெள்ளத்தில் இரு கைகளும் இல்லாமல் ...

பார்த்துக் கொண்டே சென்றேன்
என்னை தொட்டு தொட்டு பேசிய கைகள்
அவை இப்பொழுதில்லை
அழவும் முடியவில்லை
பேசவும் முடியவில்லை
யாரோ பேசுவது காதில் விழுகிறது ...

இவன் தான் அடிச்சுட்டு போய்ட்டா
ன்என்னை காட்டி சொல்கிறார்கள்
திடுக்கிடுகிறேன் அய்யோ நானா அவளை போய் நான் எப்படி ...?
அப்போ அந்த உருவம் ....?புரிந்து விட்டது எல்லாம் ...

சோகத்தில் தத்தளிக்கிறேன்
தண்டனை தருவார் என்றால் அதுவும் கிடைக்கவில்லை
என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்னோடு வருபவர்கள் பலவிதமாய் விமர்சிக்கிறார்கள்
என் அழகியை பற்றி
கொதித்து போகிறேன் ....

அவள் நல்லவள் இல்லை இப்படியும் சொல்கிறார்
அவள் கெட்டு போனவளாம்அப்படியும் சிலர்
காதலிச்சவன் எமாத்திடானாம் அட கடவுளே......

கோபம் தலைக்கேறுகிறது என்ன செய்யலாம்
இனிமேல் இந்த வழியில் செல்ல எனக்கும் இஷ்டமில்லை
மௌனிக்க நினைக்கிறேன் நிரந்தரமாய்
அவளை பற்றி அவதூறுகள் பேசுபவருக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
சிந்திக்கிறேன் ...

இப்பொழுதே இதோ கொடுக்க போகிறேன்
கீழே எட்டி பார்க்கின்றேன்
நான் தப்ப மாட்டேன் மனதுள் பட்டது
அபபடியே குதிக்கிறேன்
இதோ உருண்டு உருண்டு போகிறேன்
சாகிறேன் இனிமேல் வர மாட்டேன் .....

எப்பவும் இரு பாதையில் பயணிக்கும் நான்
முதல் தடவையாய் தடம் புரள்கிறேன்
இதோ இதோ தண்டவாளங்களை விட்டு
முற்றும் முழுதாய் நான் ..சுக்கு நூறாய் போகிறேன் ...
அவளை கொன்றதுக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன் எனக்கு தண்டனை
கடைசி மூச்சுடன் நினைத்துக் கொள்கிறேன் அவளை....
ஈன குரலில் யாரோ சொல்கிறார்கள்
ரயில் புரண்டு போகுது ...ஒண்டும் மிஞ்சாது .....
தட தடக்கும் நான் இன்று மௌனித்து விட்டேன் ...



சிந்து சிவசங்கர்

உதித்தாயே

13.உதித்தாயே !!!

அடிமைகளாய் வாழ்ந்தோம் எம்மண்ணில்
அதை தடுக்க தான் நல்லதோர் திருநாளாம்
கார்த்திகை இருபத்தாறாம் நாள்
வந்துதித்தாயோ இம்மண்ணில்....

உன் முகவரி விளங்க நின்ற வீடும்
அளவில்லா புகழ் வாய்ந்த நாடும்
ஈழம் எனும் தமிழரின்
வீடும் நாடுமாய் இருந்ததே ...

வானமும் வயலும் வீதியும் வாவியும்
உயிர்களும் மரங்களும் காற்றும் மணலும்
எஞ்ஞான்றும் ஏற்றமுற எழுந்து நின்றதே
நீ சொல்லும் ஒரு சொல்லில் ....

இணையில்லா பீடு பெற்ற ஈழத்தின் வேந்தனே
அயல் நாட்டு அரசியலும் அளவளாவும் அளவு
நயத்தகு நாகரீகம் கொண்ட
நல்லவனாம் நகைமுகனாய் இருந்தாயே ...

யார் உன்னோடு சமர் புரிய வரினும்
உன் துப்பாக்கி குவித்ததே நினக்குன்று
வீரத்தை உன் வாகை காட்டியதே
நெஞ்சின் ஈரத்தை உன் ஈகை காட்டியதே ...

விரிந்த மார்பும் வீங்கிய தோளுமாய்
விளங்கினையே மதப்பு மிகக்கொண்டு
அடங்கல் மடங்கல் ஒடுங்கல் நடுங்கல்
எல்லாம் என்னவேணு அறிந்திருக்க மாட்டாயே ...

உன் பொறி கக்கும் விழிகள் வழங்கும் வாள் முன்னே
வெண்ணிலவும் வெயிலும் வெள்கிப் பொய் தஞ்சமாகுமே
நீ ஆட்ட நினைத்து ஆட்டி இருந்தால்
ஆடிப் போய் இருக்குமே எதிரியின் தேசமெல்லாம் ...

தருக்கேறி தான்தோன்றித் தனமாய் திரிந்தவன் அல்ல
உன்னை திரைந்த பால் என்று சொல்ல ..
தாய் மண்ணை காக்க ஊண் உறக்கம் தொலைத்து
அரை நொடியும் உனக்காக வாழாத உனக்கு இன்று பிறந்த நாள் ...

உன் வீரத்தை விடிய விடிய வர்ணித்தாலும்
தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி விடும்
காவியமாய் போனாயா ..? காட்டு வழி சென்றாயா ..?
காற்றோடு கலந்தாயா..? நாமறிய வாய்ப்பில்லை ...

ஆனால் உன் நாமம் மட்டும் எங்கள் நெஞ்சில்
என்றும் மறையாமல் ... வாழ்ந்து கொண்டே இருக்கும் ...
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் வரினும் அழியா புகழில்
பிரபாகரன் எனும் உந்தன் நாமம் ......என்றென்றும் ...................

சிந்து சிவசங்கர் .

அவன் தமிழன் என்பதனால்

12. அவன் தமிழன் என்பதனால் ...!!!

அலை கடலின் ஓசையிலே
அஸ்தமிக்கும் நேரத்திலே
அரை உயிராய் மறைந்தவரை
அடையாளம் சொன்னதுவோ ..?

அவனியிலே உதித்ததனால்
அவன் தமிழன் என்பதினால்
அணு அணுவாய் சிதறுண்டு
அகாலமாய் போனதுவோ ...?

அந்தி சாயும் பொழுதுகளில்
அன்னையரின் வயிற்றினிலே
அக்கினியை கட்டி வைக்கும்
அகோரங்கள் மறந்ததுவோ ...?

அன்பு மிக்க தமிழ் மொழியை
அறுக்க துடிக்கும் கயவர்களை
அம்பெய்து கொன்றாலும்
அழுவதற்கு யாரும் உண்டோ ...?

அள்ளி அள்ளி கொடுத்தாரை
அகதியாக்கி துரத்தி விட்ட
அரக்கர்களின் ஈனச் செயலை
அறிந்தும் தலையை குணிவதுவோ..?

அருகதையே அற்றவர்கள்
அண்டி வாழ நினைக்கையிலே
அல்லலுறும் எம்மவர்கள்
அனாதையாய் போலாமோ ...?

அழகான எம் மண்ணில்
அசைந்தாடிய மரச் செடிகள்
அவமானம் தாங்காமல்
அழியும் கதையை அறிவீரோ ...?

அத்தி மர நிழலினிலே
அப்பம் சுட்ட ஆச்சி கிழவி
அடுப்பில் தள்ளி எரித்தகதை
அத்தனையும் நினைவிலுண்டோ...?

அம்மன் கோவில் தேர் இழுக்க
அர்ச்சகரை தான் விரட்டி
அநியாயமாய் கொன்ற நினைவு
அதுக்கிடையில் மறைந்திடுமோ...?

அட்டைகளாய் ஒட்டிக் கொண்டு
அபய குரலை எழுப்புகின்ற
அறுந்து போன துரோகிகளும்
அசராமல் நிற்பதுவோ ...?

அல்லும் பகலும் பாடு பட்டு
அரிதரிதாய் சேர்த்து வைத்த
அத்தனையும் ஒரு போரில்
அலங்கோலம் ஆகிடுமோ ...?

அட்டகாச விளைச்சல்களை
அறுவடைகள் செய்ய முன்பே
அச்சுறுத்தி நசுக்கியதை
அந்நியரும் அறிவாரோ ...?

அம்பிலியே ஒளி கொடுக்க
அகதியாக மர நிழலில்
அமர்ந்திருக்கும் நம் உறவை
அப்படியே விடலாமோ ...?

அப்பு ஆச்சி வாழ்ந்த வீட்டில்
அப்புஹாமி வாழ்வதற்கு
அதிகாரம் கொடுத்தவர்கள்
அலட்டுவது சரி தானோ ...?

அரும்பு மீசை முலைக்கு முன்னே
அவர்கள் கழுகு பார்வையிலே
அகப்பட்ட இளசுகளை
அடித்தடித்தே முடித்ததுவோ ...?

அண்டை நாட்டு பெரியோரும்
அன்று நடந்து முடிந்தவற்றை
அலசி பார்க்க மறுக்கும் நிலை
அவசரமாய் தோனலையோ...?

அருவருப்பாய் பார்த்து எம்மை
அவமானப் படுத்தியதை
அயர்ந்து தூங்கும் நேரத்திலும்
அடி நெஞ்சை தொட வில்லையோ ...?

அற்புதமாய் ஓங்கி நின்ற
அருமையான எம் தேசம்
அகந்தை கொண்ட மனிதர்களால்
அம்மணமாய் ஆனதுவோ ...?


சிந்து சிவசங்கர் .

சுழலும் இந்த உலகினிலே

11.சுழலும் இந்த உலகினிலே

ஆயிரமாயிரம் உறவுகள் உண்டு
ஆலம் விழுது போல் படர்வதும் உண்டு
ஆடிக்கொரு முறை வருவதும் உண்டு
ஆட்டங்கள் காட்டி செல்வதும் உண்டு

ஆலயமதிலும் தெய்வங்கள் உண்டு
ஆறாத மனங்கள் செல்வதும் உண்டு
ஆசீர்வாதம் கேட்பது உண்டு
ஆசிகள் பெற்றதாய் சொல்வதும் உண்டு

ஆபத்து பலதும் வருவதும் உண்டு
ஆறா கஷ்டத்தில் விழுவதும் உண்டு
ஆண்டவன் உண்டென்று சொல்பவர் உண்டு
ஆவிகள் உண்டென்றும் சொல்பவர் உண்டு

ஆணவத்துடனே அழைபவர் உண்டு
ஆற்றினில் உண்மைகள் கரைவதும் உண்டு
ஆதவன் தினமும் வருவதும் உண்டு
ஆதியிலிருந்தே தொடர்வதும் உண்டு

ஆசைகள் நெஞ்சில் சுமப்பவர் உண்டு
ஆழியில் அதனை தொலைத்தவர் உண்டு
ஆகாய உயரத்தில் கனவுகள் உண்டு
ஆயுள் முடிய முன் செல்வதும் உண்டு

ஆற்றிய பணியை விடுவதும் உண்டு
ஆழும் ஆசையில் விழுவதும் உண்டு
ஆண் என்று கூறி முறைப்பவர் உண்டு
ஆதிக்கம் மிகையாய் வாழ்பவர் உண்டு

ஆசான் ஒருவன் இருப்பதும் உண்டு
ஆடு மேய்க்கும் சிறுவனும் உண்டு
ஆடவர் என்று செருக்கும் உண்டு
ஆண்டுகள் தோறும் மாற்றமும் உண்டு

ஆபத்தில் உதவும் நண்பனும் உண்டு
ஆறா துயரத்தில் தள்ளுபவரும் உண்டு
ஆஹா என்று புகழ்பவர் உண்டு
ஆத்திரம் கொண்டு அடிப்பவர் உண்டு

ஆவேஷம் கொண்டு கொல்பவர் உண்டு
ஆறா நோயை போக்கும் மருத்துவர் உண்டு
ஆடி அசைந்து வரும் ஆறுகள் உண்டு
ஆற்றங்கரையில் நாணல்கள் உண்டு

ஆறேழு தெரியா பாமரனும் உண்டு
ஆறெழுத்து அறிஞ்ச அறிஞனும் உண்டு
ஆஸ்தியை ஆழும் மனிதனும் உண்டு
ஆண்டியாய் திரியும் மனிதனும் உண்டு

ஆடும் கலையை அறிந்தவர் உண்டு
ஆட்டி வைக்கவும் பல பேர் உண்டு
ஆச்சியின் கதைகளில் உண்மையும் உண்டு
ஆட்சியில் பொய்யே கதையாய் உண்டு

ஆதரவெனும் சொல்லொன்று உண்டு
ஆணைகள் இட்டு சொல்வதும் உண்டு
ஆரிரோ பாடும் தாயும் உண்டு
ஆழியின் நடுவில் சுழலும் இந்த உலகினிலே ...!!!


சிந்து சிவசங்கர் .

சேவையின் சம்பளம் மரணமா

10.சேவையின் சம்பளம் மரணமா?

என்னை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது

பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்

என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...

என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...

இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...

மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...

நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..

அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...

என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...

அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...

எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..

அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...

ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..

கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?

நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..

ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...

அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...

அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...

மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!

சிந்து சிவசங்கர்.

ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே

9.ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...!!!

முன்னம் ஒரு காலத்திலே உனக்கெனவே வாழ்கையிலே
நீ அழுதிடும் ஓசையிலே நான் அழும் குரல் கேட்கலையே ...
நீ புன்னகை புரிந்திடவே என் சுமைகள் மறைந்ததுவே
கை கடுக்க உழைக்கையிலே சோர்வேனக்கு தெரியலையே ....

நீயுறங்கும் நேரத்திலே என் கண்கள் உறங்களையே
நீ சுகமாய் உறங்கிடவே என் கண்கள் விழித்ததுவே...
உன் வயிற்றை நிரப்பிடவே என் வயிறும் காய்ந்ததுவே
உன் தாகம் தணிகையிலே என் தாகம் தணிந்ததுவே ...

நீ நன்றாய் படித்திடவே நான் விரதம் இருந்தேனே
நீ நிமிர்ந்து நடந்திடவே நான் தலையை குனிந்தேனே ...
நீ படித்து முடிக்கையிலே வேலை வெளிநாட்டினிலே
போவதாக சொல்கையிலே நான் பதறி போனேனே ...

குடி இருந்த வீட்டையுமே சொன்னாயே விற்றிடவே
நீ பயணம் சென்றிடவே வீட்டையும் நான் விற்றேனே
சென்ற முதல் மாதத்திலே நீ அனுப்பிய கடிதத்திலே
உன் கஷ்டங்கள் சொன்னதுமே என் கஷ்டங்கள் மறைந்ததுவே ...

அன்பு பாசம் நிறைந்திடவே சின்ன சின்ன பரிசுகளே
நான் உனக்கு வாங்கியதே மனம் அனுப்பிட எண்ணியதே
மறதி எனும் பழக்கத்தையே இன்னும் நீ விடவில்லையே
நீ அனுப்பிய கடிதத்திலே முகவரி நீ எழுதலையே ...
.
ஈரேழு மாதத்திலே மறு கடிதம் வரவில்லையே
உன் சுகத்தை அறிந்திடவே என் மனசும் ஏங்கியதே ...
நீ சுகமாய் வாழ்ந்திடவே பல பூஜைகள் செய்தேனே
என் உறக்கம் தொலைத்தேனே நோயாளி ஆனேனே ...

வாடகையும் வீட்டினிலே ஏறிக்கொண்டு போனதுவே
வேலைவெட்டி செய்திடவே கையிரண்டும் நடுங்கியதே ..
முதுமை என்னை ஆட்டிடவே உன் நினைவும் என்னை வாட்டியதே
யாருமில்லை அருகினிலே என் சோகம் சொல்லிடவே ...

நான் இருமும் இருமளிலே பெருந்தெருவே திரும்பிடுதே
என் மூச்சு சத்தத்திலே பறவைகளும் விழித்திடுதே...
என் இதய துடிப்பதுவே உன் பெயரை சொல்லிடுதே
மகனே என் பாசத்தையே உன் மனசுக்கு தெரியலையே ...

உன்னை பார்த்த கண்களிலே பார்வை மங்கி போகிறதே
வந்திடுவாய் ஒரு முறையே இல்லை பார்வை போய் விடுமே ...
பெட்டி கடை ஓரத்திலே கிழிந்த பாயில் படுக்கையிலே
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே ...

உறங்காத நேரத்திலே உன் கஷ்டம் தோன்றிடுமே
வெள்ளைக்காரன் நாட்டினிலே புரியாத பாஷையிலே
என் பிள்ளை கஷ்டத்திலே என்ன செய்றானோ தெரியலையே
குளிர் என்று அறிந்தேனே போர்வயுண்டோ தெரியலையே ....

நாளை எடுக்கும் பிச்சையிலே நிறைய பணம் சேர்ந்தாலே
முருகா உன் கோயிலிலே முன் வாசல் உண்டியலிலே
போட்டிடுவேன் சரவணனே என் மகனின் கஷ்டங்களே
அத்தனையும் போக்கிடவே அருள் புரிவாய் ஆண்டவனே

தினமும் என் கனவினிலே சிரிக்கின்றாய் இரவினிலே
சிரிப்பேன் அந்த நினைப்பினிலே பொழுதெல்லாம் என் மகனே
உயிர் பிரிந்தால் என் உடலினிலே மகனே நீ கலங்காதே
நீர் வந்தால் உன் கண்களிலே என் ஆன்மா செல்லாதே ...

சிந்து சிவசங்கர் .

என் நண்பன்

8.என் நண்பன்!

யாருமே என்னோடு
விளையாட வரவில்லை ..
சோகமாய் வீட்டு
முற்றத்தில் அமர்ந்திருந்தேன் ..

அப்போது தான் அவன் வந்தான் ...
அண்ணார்ந்து அவனை பார்த்தேன் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
விருட்டென்று எழுந்து
வீட்டுக்குள் சென்றேன் ...
வாசலில் நிண்டு எட்டிப் பார்த்தான்
அந்த பார்வை வா விளையாடலாம்
என்பது போல் இருந்தது ...

நானும் விளையாட்டாய்
அறையினுள் சென்று
கதவை மூடிக் கொண்டேன் ...
பரிதாபமாய் ஜன்னல் வழியாய்
எட்டிப் பார்த்தான் ...
எனக்கு சிரிப்பு வந்து விட்டது ...

முற்றத்து தேக்கு மரத்தில்
ஓடி போய் ஒழிந்து கொண்டேன் ...
அங்கேயும் இலைகளுக்கு மறைவில்
நின்று என்னை கண்டு பிடித்து விட்டான் ...

தோட்டத்து வாழை தோப்பில்
மறைந்து கொண்டேன்...
வாழை மரங்களுக்கு நடுவே நின்று
எட்டி எட்டி பார்த்தான் ...

மீண்டும் வீட்டுக்குள்
ஓடி மறைந்து கொண்டேன் ...
மறுப்படியும் வாசலிலும் ... ஜன்னல் வழியும்
எட்டி எட்டி பார்த்தான் ...
பாவமாய் இருந்தது ..

என்ன என்று கேட்டேன்
பொழுது சாய்ந்து விட்டது
நாளை அதிகாலையில்
வந்து விடுகிறேன் என்றான் ...

அவன் முகம் சிகப்பாய் மாறியது வெட்கத்தில் ...
நானும் சரி என்று தலை அசைத்தேன் சோகமாய் ..
என்னை பிரிய மனம் இன்றி
சென்று மறைந்தான் அவனும் ...

அவன் வருகைக்காய் காத்திருந்தேன் நானும் ..
என்னை பார்க்காமல் அவனால் இருக்க முடியாது ...
கண்களை மூடி உறங்கி போனேன் நானும்
அவனையே நினைத்தபடி ...

அதிகாலையில்
அவன் முகத்தில் தான் முழிப்பேன்
வந்து விடுவான் ...
அவன் என்றும் என் நண்பன் வெயில் ....

சிந்து சிவசங்கர் ...!

தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்

7."தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்"



இளங்காற்று இதமாக தழுவிக் கொண்டு செல்லும்
தெருவோர தென்னைகள் தாலாட்டிக் கொள்ளும்
பொடி கல்லும் குறும் மணலும் சிறு தூரம் தாவும்
கிணற்றுக்குள் தவளைகள் கூட்டமாய் கத்தும் ...

காற்றசைவில் மூங்கிலும் குழல் ஊதிக் கொள்ளும் ...
வெண் மேகம் கருமையாய் தான் மாறி போகும்
சூரியனும் அதனுள்ளே தான் ஒழிந்து கொள்ளும்
குடில்களின் கதவுகளும் தான் மூடிக் கொள்ளும் ....

பறவைகள் கூட்டமாய் சிறகடித்து செல்லும்
பொடி நடையில் செல்பவரை ஓடிடச் செய்யும்
விலங்குகளும் குகைகளில் தான் அடைந்து கொள்ளும்
கோழியொன்று கொக்கரித்து குஞ்சுகளை அழைக்கும் ....

வானை விட்டு நீல நிறம் காணாமல் போகும்
பகல் தனில் இருள் கூட ஓடி வந்து சேரும்
படகுகள் கரை நோக்கி வேகமாய் செல்லும்
கடல் அலை ஓசையாய் ஒரு வீணை மீட்டும் ...

விளையாட்டில் மேகங்கள் தாம் மோதிக் கொள்ளும்
வானமது இடியாக ஒரு மேளம் கொட்டும்
தென்றலோ இசையாக ஒரு காணம் பாடும்
சிறு தோணி கடல் மீது ஒரு ஆட்டம் போடும் ...

தட தட எனும் ஓசை செவிகளை கிழிக்கும்
மின்னலும் ஒரு நொடியில் ஒளி தந்து மறையும்
செடிகளும் மலர்களும் தலை அசைத்து சிரிக்கும்
மழை தேவதையே நீ மண்ணில் வந்துதிரும் நேரம் ...!!!


சிந்து சிவசங்கர் .

துருவ நட்சத்திரங்கள்

6.துருவ நட்சத்திரங்கள்!

நூறாயிரம் தீபங்கள்
சுடர் விட்டெரிய
நிரந்தர நித்திரையில்
ஆழ்ந்திருக்கும்
மாவீரரேனும்
உயிர் பூக்களே ...

கடந்து போனது
காலங்கள் தான்
நீங்கள் அல்ல ...
உங்கள் செயல்களினால்
இன்னும் இம்மண்ணில்
வாழ்கிறீர்கள் ...

உங்கள் வாழ்க்கை
சரித்திரத்தை
அசை போடுமளவிட்கு
நாங்கள் உயர்ந்தவர்கள் அல்ல ..
எனினும் நினைத்துக்
கொள்கிறோம் உங்களை ...

நளினமான உங்கள் இளமையினை
விவாகரத்து செய்து விட்டு
முதுமையின் மனோபாவத்தை
மணம் முடித்து கொண்டீர்கள் ...

சபலத்திலும் சலனத்திலும்
உபாதையுரும் மனித மனங்களுக்கு
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணம் ஆனீர்கள் ...

நெஞ்சில் உருக்கொள்ளும்
ஆசைகளை புறந்தள்ளி
களத்தினில் காவியமானீர்கள் ...

குரிப்பிழந்து கடந்து போய்விட்ட
காலக் கணக்குகளை
சிதைவுற்று சிதிலமடைந்த
ஞாபக பதிவேடுகளில்
பதித்து விட்டீர்கள் ....

யௌவன நினைவுகளை
அசை போட்டு
அல்லாடிக் கொள்ளும்
பருவம் வரும் முன்பே
பட்டுப் போனீர்கள் ...

அரக்கர்களால் மாய்ந்து
மயானமாகிப் போன
மன ராஜ்ஜியத்தில்
போராட்டத்தை
நிலை நிறுத்தி விட்டீர்கள் ...

பருவத்துக்கு ஏற்ற
அன்பு பாசங்கள்
கருக்கொள்ளும்
மனசுக்கு சுருக்கு மாட்டி
உங்கள் முடிவில்
முழுமை பெற்றீர்கள் ...

தீரா துயரில் நம்மவர் தவிக்க
இருண்ட நீல வானில்
நட்சத்திரங்களாய்
கண் சிமிட்டி சிரிக்கின்றீர்கள் ...

இனி வரும் எங்கள்
யுகங்களிலேனும்
விடுதலையோடு
பூரித்து புளங்காகிதம்
கொள்வீர்கள்
மறு ஜென்மங்களாய் வந்து ...

உங்களை எண்ணி எண்ணி
வானத்தை நோக்குகையில்
ஒன்றே ஒன்று புரிந்தது ...
உயிர் பூக்களே ................!
நிஜமாகவே நீங்கள்
அதிசயமாய் தோன்றும்
துருவ நட்சத்திரங்கள் தான் ...!!!

ஆம் வானில் தோன்றும்
ஒற்றை துருவ நட்சத்திரம் அல்ல ...
எங்கள் மனவானில் தோன்றி மறையும்
நூறாயிரம் துருவ நட்சத்திரங்கள் ...,,!!!!!.


நன்றி சிந்து

மண்ணின் மைந்தர்களே

5.மண்ணின் மைந்தர்களே!

பூமியெனும் மஞ்சத்தில்
உறங்கிவிட்ட உயிர்களே
நிம்மதியை கண்டீரோ ...?
வாழ்வு போதுமென
நிரந்தரமாய் போனீரோ ...?

நித்தம் நித்தம் அழுதிடும்
உறவுகளின் அழுகுரல்
கேட்காமல் மாண்டீரோ ...?
பகைவர் சூழ்ச்சியால்
கூட்டமாய் சாய்ந்தீரோ ...?

இலக்கேனும் கனவது
அழிவதை தாங்காது
மண்ணுக்குள் புதைந்தீரோ ...?
செங்குருதி ஓடத்தில்
மூழ்கி தான் போனீரோ ...?

பட்டமது பறந்திடும்
அழகிய வானிலே
குண்டுதிர்வதை கண்டீரோ...?
வீழ்ந்ததும் பூமியது
எரிவதை பார்த்தீரோ ...?

பிஞ்சுதிர பூவுதிர
காயுதிர கனியுதிர
சோகத்தில் துடித்தீரோ ...?
நெஞ்சினில் நெருப்பை
தான் சுமந்தீரோ...?

குடிசையுடன் கோவிலும்
தரையுடன் படுத்து விட
நிழலின்றி தவித்தீரோ ...?
மர நிழல்கள்
போதுமென துவண்டீரோ ...?

எத்தினை ஆசைகளை
நெஞ்சினில் நீங்களும்
சுமந்து கொண்டு இருந்தீரோ ...?
சொல்லாமல் கொள்ளாமல்
சிதறுண்டு போனீரோ ...?

தாய் கண்ட கனவிலே
விடுமுறைக்கு ஒருமுறை
வீட்டுக்கு வந்தீரோ ....?
கனவது முடியும் முன்
கல்லறையில் படுத்தீரோ...?

தங்கையின் சிறு பாதம்
வாசலில் நின்று
உம்மை தேடுதே கண்டீரோ ...?
பக்கத்திலும் வாராமல்
பாராமல் போனீரோ ...?

தந்தையின் இருமலும்
தாயவளின் முனகலும்
தொலைவினில் கேட்டீரோ ...?
இல்லை தொலைத்து
விட்டு சென்றீரோ ...?

விழிகளில் சுமந்து வந்த
வலிகளை எல்லாம்
வீதியில் விட்டீரோ ...?
வழியின்றி
விதியோடு இணைந்தீரோ ...?

கடந்து வந்த பாதைகளை
கரடு முரடானதென
ஒரு வார்த்தை சொன்னீரோ ...?
வாழ்க்கையில் ஒரு
சுகமேனும் கண்டீரோ ...?

தமிழெனும் ஒரு மூச்சை
தவறாமல் சுவாசித்து
தள்ளாடி போனீரோ ...?
போகையிலும் தமிழன் தான் நானென்று
ஆணவமாய் உரைத்தீரோ ...?

காலன் உம்மை அழைக்க
காவு கொண்டு போக
காற்றோடு இணைந்தீரோ ...?
இதழோரத்தில் மென்னகையை
சோகமாய் விதைத்தீரோ ...?

போகுமிடமெல்லாம்
உம்பெயரை சொல்லும்
உயிர்களை மறபபீரோ...?
இல்லை மறைந்திருந்து
அழகாக ரசிப்பீரோ ...?

பிள்ளைகளை பறிகொடுத்த
அன்னையர் வயிற்றிலே
மறுபடியும் பிரப்பீரோ ...?
புது உலகினை
படைப்பீரோ ....?

நன்றி சிந்து

உயிருக்கும் மேல்

4.உயிருக்கும் மேல் ...!!!



அந்த மலரின் விழியில் இருந்து
ஒரு நீர்த்துளி தரையை தொட்டது ...!
அந்த நிலவு மழை பெய்ததோ...?

நீர்த்துளி தன்னை தொட்டதும்
சிலிர்த்துக் கொண்டது தரை ...!
சில நேரம் மெல்லாளின்
இதையத்தை படித்திருக்குமோ...?

தரை சிலிர்த்ததால் ஒருவன்
பதை பதைத்தான்...!
நிலவின் அன்புக்குரியவனோ ...?

அவள் விழி ஈரத்தை கண்டு
துடி துடித்தது அந்த மீசை ...!
அந்த இரவில் வானில் துடித்து மறையும்
நட்சத்திரங்களையும் விட வேகமாய் ...!
வெறும் அன்பினால் மட்டும் தானோ ...?

அது... நட்பா ...? பாசமா...? காதலா ...?
அவள் அறிந்திருக்கவில்லை ...!
அறிய முற்படவும் இல்லை ...!
அவளுக்காக ஓர் இதயம் துடிப்பதை
அவள் வரமாக நினைத்தாளோ...?

ஆம் அவள் அறிந்திருந்தால்
கருங்கட்பாரையும் கசிந்து விடும்
அவன் காட்டும் அன்பினால் ...!
இருண்ட வானமும் ஒளி தரும்
அவனது பாசத்தால் ...!
வற்றிய கிணற்றிலும் நீர் ஊரும்
அவனது நட்பினால் ...!

போகத்துடிக்கும் அவளது உயிருக்கு
அவனது கைகளால் விஷத்தை தந்தாலும்
அவள் பருகிடுவாள் காதலுடன் ...!
அந்த உயிர் பூ மீண்டும் பூக்கும்
விஷம் அவன் தந்தால்...!
ஆம் அவளுக்கு தெரியும்
அவன் அவளுக்கு உயிருக்கும் மேல் என்று ...!!!


தொகுப்பு : சிந்து சிவசங்கர் .

என்று வரும் அந்த இனிய நாள்

3.என்று வரும் அந்த இனிய நாள்?

மனிதம் வளர்ந்தது நன்று ...
உன்னை மனிதர் அறிய முன்பு ...
நீ வளர்ந்த பின்பு ...
மனிதனை அழிக்கின்றாயே இன்று ...

பாவங்கள் பல செய்தும் ...
சேர்க்க தூண்டும் பாவியே உன்னை ...
நேர்மையாய் உழைப்பவர்க்கு
அடங்கிக் கொள்வாய் கைகளுக்குள் ....
குறு வழியில் செல்வோர்க்கு...
தலை மேலே குவிந்து கொள்வாய் ...

இறந்தவனின் நெற்றியிலே ..
செல்லாத சில்லரையாய் சென்றிடுவாய் ...
அது கூட எரிகையிலே ....
வெட்டியானின் பையுக்குள் புகுந்திடுவாய்...

கருவுக்கும் நீ தேவை ....
கருவறைக்கும் நீ தேவை.....
பிறப்பே நீயாகிப் போனது ஏன் ...

பாவங்கள் பல செய்தும் ...
வீட்டுக்குள் உன்னை அழைக்க ...
பல பேர்கள் காத்திருப்பார் ...

வஞ்சமாகி வந்து நின்று ...
ஒழுங்குகளை சீர் குழைத்தாய் ...
வறுமையாக வந்து நின்று ...
கொலை கொள்ளை கேடானாய் ...

அன்புக்குள் புகுந்து கொண்டு ...
பங்குச் சண்டை பிறப்பித்தாய் ...
சீதனமேனும் வடிவில் வந்து...
பெண் வாழ்வை சீர் குழைத்தாய் ...

வறுமையாய் வேஷமிட்டு ...
பலர் அறிவை நீ அழித்தாய் ...
பள்ளிச் செல்லும் பாலகரை ....
தொழிலாலியாய் ஆக்கி வைத்தாய் ...
வறுமை கொண்ட மாதரினை ...
வழி தவற நீ வைத்தாய் ...

பலர் சொல்ல கேட்கின்றேன் ...
நல்லதும் உன்னாலே ...
கேட்டதும் உன்னாலே என்று ...
உயிர் உள்ளதும் உன்னாலே ...
உயிர் போவதும் உன்னாலே என்று ...

யாரோ சொல்கிறார் ...
உன்னை கடவுள் என்று ...
இன்னும் பலர் அதற்கும் மேல் என்பார்...

நாடாது உன்னிடம் -
நல்லவர் மனம் ...
துரவிகளுக்கெல்லாம் -
நீ வெறும் பிணம் ....

மகா பாவியே
உன் பெயர் தான் பணம் ...
உனக்கு ஏன் தான்
இந்த குணம் ....

சபிக்கின்றேன் உன்னை
அழிந்துப் போ என்று ....
பண்ட மாற்று காலம் ...
இனியும் வாராதோ ...?
மனிதமும் இனிதாகவே மலராதோ ...?
என்று வரும் அந்த இனிய நாள் ....?

மரணப் படுக்கையிலும்

2.மரணப் படுக்கையிலும் .!!!



அன்பே அன்று ...!
கவிதைகள் வரைந்தாய்
என்னை காதலிப்பதாக கூறி
என் மனதை பறி கொடுத்தேன்
நானும் உன் காதலில் மயங்கி ....

சில நாட்களில் பிரிந்தாய்
மீண்டும் வருவதாக கூறி
வந்த வரனை எல்லாம் தட்டி விட்டேன்
நானும் உன்னை நம்பி....

நீ வரவே இல்லை
செய்தி மட்டும் வந்தது
பொன்னோடு சேர்த்து - நீ
பெண்ணையும் மனம் முடித்தாய் என்று .....

என்னவர்கள் சூழ்ந்து நின்று
என்னை திட்டி தீர்க்கையில்
என் மனம் மட்டும்
உன் பொய்களை அசை போட்டது...

முதல் முதல் நாமிருவரும்
பார்வைகளை பகிர்ந்துக் கொண்ட
மணி கோபுரம் ....!!!
நீயும் நானும் கை கோர்த்து
நடந்த வயல் வரம்புகள்.......!!!
உனக்காக நானும் எனக்காக நீயும்
காத்திருந்த கருங்கற்பாறை .....!!!
நீ எனக்காக கால் கடுக்க நிற்கும்
குடி நீர் கிணற்றடி ஒற்றைப் பனை....!!!
மழைக்காக நாம் ஒதுங்கி நின்ற
பாதி கரைந்து போன மண் வீடு...!!!
வெயில் சுடச்சுட நடந்த
செம்மன் பாதை...!!!
நிழல் தேடி அமரும்
ஓங்கி நிற்கும் அடி வளவு வேம்பு...!!!

இவற்றை பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது ...
என்னை மறக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..!!!

இன்று அழுது வடிந்த விழிகளும் ...
குனிந்த தலை நிமிராமலும் ..
அவமானத்தில் கூனி குறுகி
நான் நடப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் ...

நீண்ட நேர யோசனைக்குப் பின்
உன் நினைவினை நீக்கவென்றேண்ணி
வீடு வாசல் விட்டு பெற்றார் உற்றாரைப் பிரிந்து
வேறு திசையில் செல்கிறேன் இன்னும் படிக்கலாமென ..

ஆனால் அங்கும் ......
விட்டுப் போன நினைவுகளின் துயரமும்
மரணித்துப் போன என் காதலின் நினைவுகளும்
மறக்க எத்தனிக்கையில்
மீண்டும் நீ வருகிறாய்
அன்பிற்காக மட்டும் ஏங்கும் இதயத்தோடு ...

காணாதது போல நடக்க நினைக்கிறேன்
ஆனால் ...!! நீயோ
வலிகள் ஆறா மனப்புங்களுடன்
நினைவினூடே பின் தொடர்கிறாய் ...
அன்பே நான் எப்படி சொல்ல ......
மரணப் படுக்கையிலும்
உன்னை மறக்கும் ஷக்தி
என் காதலுக்கு இல்லை போலும் ...!!!!!!!


சிந்து சிவசங்கர் .