பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Monday, 13 June 2011

ஓயோம்

*புலிகள் என்றும் புலிகளே
வீழ்ந்தாலும் எழுந்தாலும்
நாளை வரலாறு அவர்களே
எம் தமிழ் வரலாறு அவர்களே!!...

ஆம் எம் தேசத்து மங்கைகள்
கூட மலர்கள் தான் கவனம்
எம் தேசத்து மலர்கள் கூட
புலிகள் தான்!!......

ஆம் எம் தேசத்து காற்று கூட
எங்கள் தேச வீரம் கூறும் ... கவனம்
காற்றுக்கும் கருவறுக்க தெரியும்
கவனம் கயவர்களே எங்கள் தேச காற்று!!....

தமிழனை தமிழன் ஆளனும்
தமிழன் நன்றாக வாழனும்
தமிழனுக்கு தனிதேசம் வேணும்
அது தமிழீழ தேசமாகவேனும்
அதுவரை ஓயோம்!!!*
..........*தம்பி*.....

வாழ்க்கை

வாழ்க்கை


காலம் என்னும் ஓடத்திலே பயணம் செய்யும் நேரத்திலே.
இன்ப துன்ப காலத்திலே யாருக்காக யாரோ.
போகும் பாதை தெரியவில்லை தேடல் கூட குறையவில்லை.
எதனை தேடி அலைகின்றாய் யாருக்காக துடிக்கின்றாய்.
காவலுக்கு நின்றதுகள் மேய்கின்றது கண்ணைத்தானே கட்டிக்கொண்டு
மனிதனையே தெய்வமாய் ஆக்குகின்றாய் ஆசைக்கே அடிமைப்பட்டு.
எத்தனை வேஷங்கள் எத்தனை அரங்குகள்.
கண் கட்டி நடைபிணமாய் வாழ்கின்றாயே ஏன் மனிதா?
உன்னை புரிந்து கொண்டு உண்மையாக வாழ்ந்து பார்.
பிறந்த பயனை அடைந்திடுவாய் நீயும் மனிதனாய்.
பாவிகள் கூட்டம் தான் பார்த்து நடந்து பார், சுமைகள்கூட தூரப்போகும்.

கவிஞர் இராஜேந்திரகுமார்

ஏழ்மை

ஏழ்மை


சேர்த்து வைக்கின்றான் எங்கே கொண்டு போக பூட்டி வைக்கின்றான்.
பாவங்களைத்தான் மூட்டையாக சேர்த்து வைக்கின்றான்.
மனித இனத்தை அடிமையாக்கி அவாப்பிடித்து அலைகின்றாயே.
ஆறடி நிலம், இல்லை நெருப்புத்தணல்இவைதானே கடைசியில் வரும் சொந்தம்.
பாழடைந்த உலகில் உன்வாழ்வு எவ்வளவு தூரம்.
கண் விழித்து தூங்கும் மனிதா அழித்து வாழ நினைகின்றாயே.
யாரிடம் போராட்டம் யாருக்காக போராட்டம்.
யாருமே இல்லா இந்த உலகில் ஏன் இந்த சூதாட்டம்.
சிறு தோல்வி கண்டு வெறுத்துப்போகும் மனிதா.
சில கால வாழ்வுக்குத்தானே சிக்கி தடுமாறுகின்றாய்.
மனித மனமே ஏழ்மை அதில் நீயென்ன நான் என்ன?

கவிஞர் இராஜேந்திரகுமார்

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்




ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

எண்ணங்கள் பிரம்மாக்கள்

எண்ணங்கள் பிரம்மாக்கள்




எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் கஷ்டம் வந்தது? என்று கேட்கலாம். கேட்பது நியாயமாகக் கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த ஒரு மனிதரைச் சொல்லலாம். அவர் வியாபாரத்தில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். தந்தையின் சொத்தில் ஒரு நல்ல தொகை அவருக்குக் கிடைத்து அதை மூலதனமாகப் போட்டு அவர் வியாபாரம் ஆரம்பித்தார். காலையில் ஏழரை மணிவாக்கில் தான் எழுந்திருப்பார். அரை மணி நேரம் செய்தித்தாள் படிப்பார். பத்து மணிக்குத் தான் கடையைத் திறப்பார். மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தாரானால் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மறுபடி ஐந்து மணிக்குத் தான் கடைக்கு செல்வார். எட்டரை மணிக்கு கடையை மூடி விட்டு வீடு திரும்புவார். அவருடைய போட்டியாளர்கள் எல்லாம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மதியம் அரை மணி சாப்பாட்டு நேரம் தவிர கடையில் இருந்து வியாபாரம் செய்தார்கள்.

அதைச் சிலர் சுட்டிக்காட்டிய போது அவரோ “மதியம் சற்று தூங்கினால் ஒழிய எனக்கு உடல் ஒத்துக் கொள்கிறதில்லை. அந்த மதிய நேரத்தில் பெரிதாக என்ன வியாபாரம் ஆகி விடப்போகிறது” என்று சொன்னார். எட்டரை மணிக்கு கிளம்பி வருவது ஏன் என்று ஒருவர் கேட்ட போது “ஒன்பது மணி சீரியல் ஒன்று டிவியில் நன்றாக இருக்கிறது. எனவே எட்டரைக்குக் கிளம்பினால் தான் சரியாக அதைப் பார்க்க சரியாக இருக்கிறது” என்றார். வியாபாரத்தில் சிலர் அவருக்கு சற்று மரியாதை குறைவாகக் கொடுப்பது போல் தோன்றினாலும் அவரிடம் வியாபாரம் செய்வதை நிறுத்தி விடுவார். அவர் வியாபாரத்தில் படுநஷ்டம் ஏற்பட்டது என்பதை கூறத் தேவையில்லை.

வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிய நேரம் மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற எண்ணமும், இரவு ஒன்பது மணி சீரியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணமும், நல்ல மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட பல மடங்கு வலிமையாக ஆணித்தரமாக அவரிடம் இருந்தன. அந்த பலமான, ஆணித்தரமான எண்ணங்கள் செயல்களாகின. தூங்க முடிந்தது. சீரியல் பார்க்க முடிந்தது. மரியாதை தருபவர்களுடன் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை விட வெற்றிக்கு எதிர்மறையான எண்ணங்கள் வலிமையாக இருந்ததால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை.

எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும். மேலே சொன்ன உதாரணத்தில் தோல்வியடைய வேண்டும் என்பது அவரது எண்ணமாயில்லை என்றாலும் தோல்விக்கு இட்டுச் செல்கின்ற எண்ணங்கள் அவரிடம் வலிமையாக இருந்ததால் தோல்வி நிஜமாகியது.

ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது. அந்த எண்ணம் வலிமையானதாக இருந்தால் அது தனி மனிதர்களை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே மாற்றலாம், நாட்டையே மாற்றலாம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசாகத் திகழ்ந்த ஆங்கிலேயர் ஆட்சியை கத்தியின்றி, இரத்தமின்றி போராடி இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்ற எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது. எண்ண அளவிலே அது நகைப்பிற்கு இடமளிப்பதாகவே தோன்றினாலும் அந்த எண்ணத்தின் வலிமை இந்திய தேசத்தின் சரித்திரத்தையே பின்னாளில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அந்த எண்ணத்தின் வீரியம் எண்ணற்ற மனிதர்களைத் தொட முடிந்ததும், அந்த மனிதர்களை மாற்ற முடிந்ததும், சுதந்திரப் போராட்ட பேரலையை இந்தியாவில் உருவாக்க முடிந்ததும் வரலாறு அல்லவா? ஆங்கிலேய சூரியன் இந்திய மண்ணை விட்டு மறைந்தது சரித்திரம் அல்லவா?

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும், ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்குப் பின்னும், வலிமை வாய்ந்த எண்ணங்கள் ஆரம்பங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் மாற்றத்திற்கே விதைகள் எண்ணங்களாக இருக்கின்றன என்றால் தனி மனித மாற்றத்திற்கு எண்ணங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற எண்ணமே அடிக்கடி ஒருவர் மனதில் எழுமானால் அதற்கான ஆயிரம் நிரூபணங்களை அந்த எண்ணம் அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே எப்போதும் ஒருவர் மனதில் மேலோங்கி நின்றால் அந்த எண்ணம் உண்மையில் அந்தக் காரியத்தை கண்டிப்பாக முடித்துக் காட்டும்.

எண்ணங்கள் பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எத்தகையவை என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். அவை இன்று உங்களை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை. உங்களுடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்