பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Saturday, 4 June 2011

கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்

இராமாயணத்தில் சில கதாபாத்திரங்கள் பெயரளவில் மட்டுமே அறியப்படுபவர்கள். உதாரணத்திற்கு சுமத்திரையும், சத்ருக்கனனும். இவர்களால் இராமாயணத்தில் எந்தத் திருப்புமுனையும் கிடையாது. இவர்கள் அதிகம் பேசியதும் இல்லை. அதிகம் பேசப்பட்டதும் இல்லை. ஆனால் கம்பன் இது போன்ற கதாபாத்திரங்களையும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டால் கூட அவர்களைத் தன் கவிநயத்தால் சிகரங்களாக உயர்த்தி விடுகிறான்.

சுமத்திரை தசரதனின் மூன்றாம் மனைவி, இலக்குவன் சத்ருக்கனனின் தாய் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். அவள் பட்டத்தரசியுமல்ல, கடைசி மனைவியானாலும் கணவனின் தனியன்பிற்குப் பாத்திரமானவளும் அல்ல. பட்டத்தரசி கோசலை. தசரதனின் தனியன்பிற்குப் பாத்திரமாக இருந்தவள் கைகேயி. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான பெண்மணிகள் பொறாமையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சுமத்திரை வித்தியாசமானவள்.

கைகேயி வரத்தால் இராமன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். சீதை 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று உடன் செல்லத் துணிகிறாள். சுமத்திரை பெற்ற மகன் இலக்குவனும் அண்ணனைப் பின் தொடரத் தீர்மானிக்கிறான். இலக்குவன் தாயிடம் விடை பெற வரும் போது சுமத்திரை சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை உருக்குபவை.

"ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன் அம்மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை: என்றே
ஏகாய்! இனி இவ்வயின் நின்றலும் ஏதம்" என்றாள்.

(அந்த வனம் உனக்கு இந்த அயோத்தியாக இருக்கட்டும். இராமனை மன்னன் தசரதனாக எண்ணிக் கொள். உன் தாய்களின் நிலையில் சீதைக் காண். இந்த மனநிலையில் இங்கிருந்து புறப்படு. இனி இங்கு நீ நிற்பது கூடத் தவறு).

'அவனாவது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற காட்டிற்குப் போகிறான்? நீ ஏன் அங்கு போக வேண்டும்?' என்ற விதத்தில் பேசினாலும் அந்தத் தாய் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் நீ போகாமல் இருந்தால் தான் தவறு என்று சொன்ன மனதைப் பாருங்கள். மேலும் தாய் என்று தன் ஒருத்தியை மட்டும் சொல்லாமல் பன்மையில் சொல்லி கோசலையையும், கைகேயியையும் கூடசேர்த்துக் கொண்ட பண்பைப் பாருங்கள். அடுத்த பாடலில் சுமத்திரை இன்னும் ஒரு படி மேலே போகிறாள்.

பின்னும் பகர்வாள் "மகனே இவன் பின் செல், தம்பி
என்னும் படியன்று. அடியாரினும் ஏவல் செய்தி!
மன்னும் நகர்க்கே அவன் வந்திடில் வா! அன்றேல்
முன்னம் முடி" என்றவள் வார்விழி சோர நின்றாள்.

("மகனே இராமன் பின் தம்பியாகப் போகாதே. சேவகனை விட அதிகமாய் அவனுக்கு சேவை செய். மீண்டும் இந்த நகருக்கு அவன் வந்தால் வா! அவன் வர முடியாதபடி அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவனுக்கும் முன்னால் உன் உயிரை விட்டு விடு" என்றவள் மகனிடம் இப்படிச் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற துக்கத்தில் விழிகளில் அருவியாக கண்ணீர் வழிய நின்றாள்).

இராமனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற வார்த்தையைக் கூட அவள் சொல்லத் துணியவில்லை. அன்றேல் என்ற சொல்லில் சூட்சுமமாகவே தெரிவிக்கிறாள். 'முன்னம் முடி' என்று சொல்லியவுடன் இப்படி சொல்லி விட்டோமே என்ற துக்கத்தில் துயருடன் நிற்பதை கம்பன் நம் கண் முன்னல்லவா கொணர்கிறான்.

இரண்டே பாடல்களில் நம் மனதில் சிகரமாக உயரும் சுமத்திரையின் பேச்சை பின்பு இராமாயணத்தில் வேறெங்கும் நாம் கேட்பதில்லை.

அடுத்ததாக சத்ருக்கனன். சொன்ன நாளில் இராமன் அயோத்திக்குத் திரும்பாததைக் கண்ட பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகிறான். தனக்குப் பின் அயோத்தியின் அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்படி சத்ருக்கனனை வேண்டுகிறான்.

அதைக் கேட்ட சத்ருக்கனனின் நிலையை கம்பர் அழகாகச் சொல்கிறான். சத்ருக்கனன் காதுகளைப் பொத்திக் கொள்கிறான். நஞ்சை உண்டது போல் மயங்கி நிற்கிறான். மாபெரும் துயரத்துடன் பரதனைக் கேட்கிறான். "நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?" நான் உனக்கு என்ன தவறு செய்தேன் என்று இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று மருகி நின்றவன் அடுத்து சொல்வது மிக அழகான பாடல்.

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு
போவானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது
யானாம் இவ்வரசு ஆள்வேன்? என்னே இவ்வரசாட்சி? இனிதே அம்மா!

(காட்டை ஆள நாட்டை விட்டுப் போகிறவனைக் காவல் காக்க பின் தொடர்ந்து போனவன் ஒரு தம்பி. சென்ற அண்ணன் வரவேண்டிய நாளில் வரவில்லை என்று உயிர் விட ஏற்பாடு செய்தவன் ஒரு தம்பி. இப்படிப்பட்டத் தம்பிகள் இருக்கும் போது நான் மட்டும் வெட்கமில்லாமல் இந்த அரசை ஆள்வதா? நன்றாகத் தான் இருக்கிறது என்று இகழ்வாகச் சொல்கிறான் சத்ருக்கனன்.)

இன்றைய அரசியலில் பதவிக்காகத் தம்பிகள் செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்களைப் பார்க்கையில் அந்தத் தம்பிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் அல்லவா? பரதனுக்காவது தாயின் வரம் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் சத்ருக்கனனுக்கு அந்தக் காரணமும் சொல்ல முடியாது. அவன் இராமனின் தம்பிகளில் தானும் குறைந்தவன் அல்ல என்று காட்டுகிறான் அல்லவா?

சிறிய கதாபாத்திரங்களையும் மிக அழகாகக் காட்டி மனதில் என்றென்றும் நிறுத்தும் கம்பனின் கவித் திறமைக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களே சான்று.

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்
கைகேயி இராமன்


கைகேயியிற்கும் இராமனுக்கும் இடையே உள்ள பந்தம் ஆழமானது. கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டவள் அவள். கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவள் பட்ட கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால் கைகேயி அவளை ஏசுகிறாள்.

"எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல" (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசுகிறாள்

(எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!).

இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்த கூனி 'கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்' என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது. தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். "என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு" என்று கதறுகிறான்.

('கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற' என்றான்

'நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நய' என்றான்.)

கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் பந்தத்தை அழகாய் விளக்குகிறது. "இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது" என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்

(தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்.)

இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. "மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்"

(மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்)

தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் "நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல" என்று தசரதன் மனம் வெறுத்து கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு "நீ என் தாயே அல்ல" என்று சொல்லி விட்டுப் போன பின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

எந்த மகனுக்காக அவள் அரசபதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப் போல் வாழ ஆரம்பித்த போது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவறை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தை காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனதில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள் மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாதது.

தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாகும். ஆனால் இராமன் கைகேயி மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை. அதனால் தசரதனிடம் "தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்" என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை 'தெய்வம்' என்று உயர்த்துகிற பண்பைக் கவனியுங்கள்.

(தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான்.)

அதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். ஆக இராமன் கடைசி வரை கைகேயி இராமனாக இருந்தான் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

-என்.கணேசன்
வாலியிடம் பேச்சிழந்த இராமன்



கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.

வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்

(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா?” என்று கேட்கிறான்).

அந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.

வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.

(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியிருக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்?)

வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.

(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே! நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா?)

இப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு? நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்?”

ஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை?

(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)

வசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.

மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!



தன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்

”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.

இரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)

வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.

-என்.கணேசன்
ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!



உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.

பரதனைப் போல் ஒரு உத்தமனை இலக்கியத்தில் காண்பது கூடக் கடினம். கைகேயி அவனுக்காக வரம் பெற்ற பிறகு அவன் படும் பாடு கொஞச நஞ்சமல்ல. முடிசூட்டிக் கொள்ள குலகுரு விசிட்டர் சொன்ன போது அவன் விஷம் சாப்பிடச் சொன்னது போல நடுங்கினான், பயந்தான், அயர்ந்தான், அருவி போலக் கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தான் என்கிறான் கம்பன்.

தஞ்சம் இவ்வுலகம் நீ ’தாங்குவாய்’ என
செஞ்சவே முனிவரன் செப்பக் கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன்; அயர்ந்தனன்; அருவிக் கண்ணினன்.

”தந்த வரத்திற்கு இழிவு வரக்கூடாது தந்தை இறந்தான். தந்தை சொல்லை ஏற்று நடப்பது தான் தர்மம் என்று அண்ணன் அரச பதவியைத் துறந்தான். அப்படிப் பட்ட அண்ணனோடு பிறந்தவன் தாயின் சூழ்ச்சியால் ஆட்சி பிரிந்தான் என்ற பெயரை என்னால் பெற முடியுமா?” என்று வருந்துகிறான்.

இறந்தான் தந்தை ஈந்த வரத்திற்கு இழிவு என்னா;
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான்; தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான், ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமோ?


உடனே பெரும்படையோடு அண்ணனை அழைத்து வர பரதன் கிளம்புகிறான். படையுடன் அவன் வருவதைப் பார்த்த குகன் ஆரம்பத்தில் அவனைத் தவறாக எண்ணிக் கோபப்படுகிறான். என்னை மீறி ஆற்றைக் கடந்து இவர்கள் எப்படி இராமனைச் சென்று அடைகிறார்கள் என்று பார்க்கிறேன்? (ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?) என்று கரையில் நின்று பார்க்கிறான்.

அருகில் வந்த பிறகு பரதனை அவன் கண்டதோ வேறு விதத்தில். கம்ப இராமாயணத்தில் மிக அற்புதமான இடம் இது. கம்பன் பரதனையும், அவனைப் பார்த்த குகன் மனநிலையையும் மிக அழகாக விளக்குகிறான்.

பரதன் கைகளோ தொழுத வண்ணம் இருக்கின்றன. உடலோ துவண்டு போயிருக்கிறது. கண்களோ அழுதழுது சிவந்திருக்கிறது. முகமோ துக்கம் என்பது இது தான் என்று வரையறுக்கும் படியாக இருக்கிறது. இதைக் கண்டவுடன் அவனை முழுதும் புரிந்து கொண்ட குகன் அவனை இன்னும் கூர்ந்து பார்க்கிறான்.


தொழுதுயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுதழி கண்ணினன்: அவலம் ஈதென
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்.

”பார்த்தால் இவன் என் நாயகனான இராமன் போல் இருக்கின்றான். அவனுடன் இருக்கும் தம்பியான இலக்குவனின் சாயலும் இருக்கின்றது. தவ வேடம் வேறு பூண்டிருக்கிறான். அவனுடைய துன்பத்திற்கோ முடிவிருப்பதாகத் தெரியவில்லை. இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றான். இவனைப் போல் தவறாக நினைத்தேனே எம்பெருமானின் பின்னால் பிறந்தவர்களால் தவறும் இழைக்க முடியுமோ?” என்று தன்னையே கடிந்து கொள்கின்றான்.

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்றான்.


பரதன் வந்த காரணத்தை அறிந்து அவனிடம் பேசிய பின்னரோ அவன் மரியாதை பலமடங்கு அதிகரிக்கிறது. “உன்னுடைய தாயின் பேச்சைக் கேட்டு உன் தந்தை உனக்களித்த நாட்டை தீயதாக ஒதுக்கி, துக்கத்தை முகத்தில் தேக்கியபடி கிளம்பி இங்கே வந்திருக்கிறாய் என்பதைப் பார்க்கும் போது, புகழ்பெற்ற உன் தன்மையைக் காணும் போது ஆயிரம் இராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு இணையாவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை” என்று குகன் மனம் திறந்து சொல்கிறான்.


தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேள் ஆவரோ தெரியினம்மா!


பின் பரதன் இராமனை சந்தித்து அவனை நாடு திரும்ப வற்புறுத்த அவன் ஒத்துக் கொள்ளாததால் அண்ணனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஆட்சி நடத்த பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு துயரத்துடன் நாடு திரும்புகிறான். அப்படித் திரும்புகையிலும் “சரியாகப் பதினான்கு வருடங்கள் தான். அதைத் தாண்டி ஒரு நாளும் அதிகமாக நான் தாங்க மாட்டேன்” என்று சொல்லி அண்ணனின் ஒப்புதலும் வாங்கிக் கொண்டு தான் போகிறான். அரியணையில் இராம பாதுகைகள் இருக்க துறவி போல் வாழ்க்கை நடத்துகிறான்.

குறித்த காலத்தில் இராமன் அயோத்தி வர முடியாத சூழ்நிலை உருவாகவே அவன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது கோசலை வந்து அவனைத் தடுக்கிறாள். தந்தை கேட்டுக் கொண்டதால் இராமன் 14 வருடங்கள் வனவாசம் போக வேண்டி இருந்தது. ஆனால் பரதனோ யாரும் கூறாமலேயே கிட்டத்தட்ட அண்ணனைப் போலவே வனவாசம் போலவே அங்கு வாழ்ந்ததைக் கடந்த 14 வருடங்களாகப் பார்த்து வந்த அவள் அவனிடம் சொல்கிறாள். ”அரசன் சொன்னதும், அவன் மகனான இராமன் இசைந்து காட்டிற்குச் சென்றதும் விதியின் செய்கையே. பின்னால் நடந்தவை எல்லாம் கூட யோசித்துப் பார்த்தால் அதன் தன்மையே. இப்படி இருக்கையில் உன் மேல் குற்றம் ஏற்றுக் கொண்டு என்ன செய்யத் துணிந்தாய் என் மகனே?”


மண் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்
மின் இழைத்த விதியின் முயற்சியால்
பின் இழைத்ததும் எண்ணில் அப்பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள்

“உனக்கு உன் அருமை தெரியவில்லை, பரதா. உலகத்தில் பிரளயமே வந்தாலும் உன் பெருமை அழியுமோ?

(உன்) அருமை உணர்ந்திலை! ஐய நின்
பெருமை ஊழி தீயினும் பேருமோ?


“எண்ணிப் பார்த்தால் கோடி இராமர்கள் சேர்ந்தாலும் உன் மனதிற்கு ஈடாவார்களோ? புண்ணியாத்மாவான உன் உயிர் போனால் மண்ணும், வானும், உயிர்களும் வாழ முடியுமோ?

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்(கு) அரு(கு) ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?

நல்ல வேளையாக இராமன் விரைவில் வந்து பரதனைத் தழுவிக் கொள்ள எல்லாம் சுபமாக முடிகிறது. இப்படி இராமனின் தாயான கோசலையும், பக்தனான குகனும் கூட மனம் நெகிழ்ந்து இராமனை விடப் பன்மடங்கு சிறந்தவன் என்று சொன்ன பெருமை கம்ப இராமாயணத்தில் வேறெந்த கதாபாத்திரத்திற்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
இணையற்ற சகோதரன் இலக்குவன்



சிறு வயது முதலே இராமனின் நிழல் போல இணைபிரியாதிருந்தவன் இலக்குவன். இது போன்ற சகோதர பாசத்தின் தீவிரம் எல்லாம் திருமணத்திற்குப் பின் பொதுவாகக் குறையும் என்பார்கள். திருமணத்திற்குப் பின்னும் குறையாமல் இருந்தது இலக்குவனின் சகோதர பாசம். தசரதன் கைகேயிக்குத் தந்த வரத்தால் இராமன் வனம் செல்லக் கிளம்பிய போது “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று சீதை இராமனுடன் கிளம்ப இலக்குவனும் இராமனுடன் செல்லத் தயாராகிறான்.

வனத்திற்குத் தன்னுடன் வர வேண்டாமென்று இராமன் சொன்னதற்கு இலக்குவன் நீயில்லாத இடத்தில் நான் எப்படி இருக்க முடியும் என்று அண்ணனிடம் கேட்கிறான். ”நீர் இருந்தால் தான் மீன் இருக்க முடியும். அதே போல் நானும் சீதையும் நீ இருந்தால் தான் இருக்க முடியும்” என்று கூறுகிறான்.

நீர் உள எனில் உள மீனும் நீலமும்
பார் உள எனில் உள யாவும்; பார்ப்புறின்
நார் உள தனு உளாய்1 நானும் சீதையும்
ஆர் உளர் எனில் உளேம் அருளுவாய் என்றான்.

திருமணமாகி அதிக நாட்கள் ஆகவில்லை. பிரியக் கூடிய காலம் சில நாட்கள் அல்ல. பதினான்கு வருடங்கள். அப்படி இருந்தும் மனைவியை விட்டு அண்ணனைப் பின் தொடர்ந்து இலக்குவன் காட்டுக்குச் சென்றான். அப்படிச் சென்றவன் ஒரு இளவரசனைப் போல் இருந்து விடவில்லை. அவன் செய்த சேவைகள் சாதாரணமானதல்ல. பர்ணசாலை அமைக்கவும், காட்டில் பாதைகள் ஏற்படுத்தவும் அவன் உழைத்ததைப் பார்த்து இராமனே வியந்து போனான்.

”தம்பி நீ என்னோடு இணைபிரியாமல் இருந்தவனாயிற்றே, சாலையமைத்தல் முதலியவற்றை எனக்குத் தெரியாமல் என்றைக்குப் பழகினாய்” என்று கண்ணீர் சொரிய இராமன் இலக்குவனைக் கேட்கிறான்.

என்று சிந்தித்(து) இளையவற் பார்த்(து) “இரு
குன்று போலக் குலவிய தோளினாய்!
என்று கற்றனை நீயிது போல்’ என்றான்:
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்

அது போன்ற பணிகள் மட்டுமல்லாமல் வனவாச காலம் முழுவதும் இராமனுக்கு இலக்குவன் ஒரு சேவகனாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமனைக் காண வந்த பரதன் குகனிடம் பேசிக்கொண்டிருந்த போது இலக்குவனைப் பற்றி குகன் பெருமையாகச் சொல்கிறான். “இராமபிரானும், சீதையும் உறங்கும் போது வில்லை ஊன்றிக் கொண்டு இரவெல்லாம் கண்களைக் கூட இமைக்காமல் காவல் காத்து நின்றான்” என்று தெரிவிக்கிறான்.

அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும், வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான்! இமைப்பிலன் நயனம் என்றான்.

’இமைப்பிலன் நயனம்’ என்ற இரு சொற்களில் இலக்குவனின் காவலைப் பற்றி கம்பன் சொல்கின்ற நயத்தைப் பாருங்கள்.

மாயப் பொன்மானைக் கண்டு சீதை ஆசைப்பட, இராமன் அதன் பின்னால் சென்று மாயப்பொன்மான் வேடத்தில் இருந்த மாரீசனை வில்லால் வீழ்த்தினான். விழும் முன் இராமன் குரலில் இலக்குவன் பேரைச் சொல்லி அலறிக் கொண்டு மாரீசன் வீழ்கிறான். சீதை அதை இராமனுக்கு வந்த ஆபத்தாகக் கருதி சென்று பார்க்க இலக்குவனைப் பணிக்கிறாள். சீதைக்குக் காவலாக இரு என்று சொல்லி விட்டுச் சென்ற அண்ணனின் வார்த்தைகளை மீற விரும்பாத இலக்குவன் அவளைத் தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. அது தன் அண்ணன் குரலல்ல, இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.

அவனைப் போக வைக்க சீதை சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள். ”அண்ணன் இறந்தால் என்னை நீ அடையலாம் என்று எண்ணித் தான் நீ செல்லாமல் இருக்கிறாய்” என்று குற்றம் சாட்ட நஞ்சாக வந்த வார்த்தைகளின் வலி தாங்காமல் இலக்குவன் போகிறான். போகும் போது ஒரு கோடு கிழித்து ‘எக்காரணத்தைக் கொண்டும் இந்தக் கோட்டைத் தாண்டி வெளியே வராதீர்கள்’ என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் செல்கிறான். ஆனால் இராவணன் தன் சூழ்ச்சியால் அவளை அதையும் தாண்டி வர வைத்து கவர்ந்து செல்கிறான்.

செல்கின்ற போது போகின்ற தடத்தின் அடையாளத்திற்காக தன் ஆபரணங்களை வழியெல்லாம் வீசிக் கொண்டு சீதை செல்கிறாள். அந்த ஆபரணங்கள் சிலவற்றைப் பார்த்த இராமன் இது சீதையுடையது தானே என்று இலக்குவனிடம் கேட்ட போது இலக்குவன் கூறும் பதில் பிரசித்தமானது. “அண்ணியின் குண்டலங்களையோ, கேயூரங்களையோ நான் அறியேன். அவள் காலில் அணிந்திருந்த மெட்டிகளை மட்டும் நான் அறிவேன். தினமும் வணங்குவதால் என்னால் அவற்றை மட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்”

இப்படிப் பட்ட உத்தமனான இலக்குவனைப் பார்த்து அந்த கொடிய வார்த்தைகளைச் சொல்ல சீதைக்கு எப்படி மனம் வந்தது? உண்மையில் இலக்குவன் மனது அவளுக்குத் தெரியாதா? இலக்குவன் சென்று சிறிது நேரத்திலேயே முனிவர் வேடத்தில் வந்த இராவணன் அவளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவுடன் சொல்லும் போது கூட இலக்குவனைப் பற்றி இராவணனிடம் மிக உயர்வாகச் சொன்னவளாயிற்றே அவள். என்ன சொன்னால் கிளம்புவான் என்று தெரிந்து கிளப்புவதற்காகவே சொல்லி இருந்தாலும் அந்த வார்த்தைகள் அவனை எப்பாடு படுத்தி இருக்கும்.

அதைப் பற்றி யோசிக்க அசோகவனத்தில் சீதைக்கு நிறையவே நேரமிருந்தது. அப்படி யோசித்த போது தன் கணவன் தன்னை மீட்க வராததற்குக் கூட இலக்குவனிடம் அபாண்டமாகச் சொன்ன வார்த்தைகளாக இருக்குமோ என்று சீதை சந்தேகம் கொள்கிறாள். இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுமளவு அறிவில்லாதவளாக இருக்கிறாளே என்று அவளை இராமன் துறந்தே விட்டானோ என்று சீதை வருந்துகிறாள்.

என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?

ஆனால் அண்ணியின் வார்த்தைகளை அப்படியே சொல்லி அண்ணன் மனதில் அவள் மேல் வெறுப்பு ஏற்படக் காரணமாக இருப்பவன் அல்லன் இலக்குவன்.

இராமனுக்கும் தன் தம்பி இலக்குவன் மேல் இருந்த பாசம் அலாதியானது. இந்திரசித்துடன் போர் புரிய இலக்குவனை அனுப்பிய போது அவன் மனதில் ஏற்பட்ட வேதனை முன்பு விஸ்வாமித்திரனுடன் இராமனை அனுப்பும் போது தசரதன் மனதில் ஏற்பட்ட வேதனையை ஒத்திருந்தது என்கிறான் கம்பன்.

வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.

(மகன் பாதுகாப்பு குறித்து பயந்த தசரதன் மகனுக்குப் பதிலாகத் தானே வரட்டுமா என்று விஸ்வாமித்திரனைக் கெஞ்சியது தெரிந்திருக்கலாம்.)


இந்திரசித்தின் நாகாஸ்திரத்தால் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைப் பார்த்து வால்மீகியின் இராமன் புலம்புகிறான். “தேடிப் பார்த்தால் சீதையைப் போன்ற மனைவி கிடைக்கலாம். ஆனால் இலக்குவனைப் போன்ற மகாவீரனான சகோதரன் எப்படிக் கிடைப்பான்?”

கம்பனின் இராமனும் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைக் கண்டு உருக்கமாகப் புலம்புகிறான். “என்னை ஓய்வெடுக்க வைத்து எனக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து நீ ஓய்வில்லாமல் இருந்தாயே. வெயில் என்று பார்க்காமல் காவலுக்கு நின்று களைத்துப் போனாயே. அந்தக் களைப்புக்காகத் தான் இப்போது உறங்குகின்றாயா? இந்த உறக்கத்தைத் துறந்து எழ மாட்டாயா?”

பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானகத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தித்
துயில்கின்றாயோ? இன்றிவ்வுறக்கம் துறவாயோ?

”தந்தை இறந்த போதும் தைரியமாக இருந்தேன். அரசபதவியைத் துறந்த போதும் கவலையற்று இருந்தேன். நீ இருப்பதால் நான் தனியன் அல்லேன் என்று இருந்தேன். இப்போது நீயும் போய் விட்டாய். எனக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இனி நான் வாழ மாட்டேன். நானும் உன்னுடன் வருகிறேன்”

எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்
வந்தனென் ஐயா! வந்தனென் ஐயா! இனி வாழேன்

இலக்குவன் மூர்ச்சை தெளிந்து எழுந்த போது இராமன் தன் உயிரையே திரும்பப் பெற்றது போல உணர்ந்தான்.

போர் முடிந்து அயோத்தி திரும்பும் வரையில் தன் புதிய மண வாழ்க்கையையும், தன் அரண்மனை வாழ்க்கையின் சௌகரியங்களையும் தியாகம் செய்து அண்ணனின் காவலனாய், ஏவலனாய், நிழலாய் இருந்த இலக்குவன் இணையற்ற சகோதரனே அல்லவா?

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்