பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Thursday, 9 June 2011

அவளுக்கு என்னாச்சு

அவளுக்கு என்னாச்சு


காலையிலே மலர்கின்றாள் மாலையிலே சுடுகின்றாள்

பாதையிலே நடக்கின்றாள் பதட்டத்தில் பேசுகின்றாள்

நித்தம் என்னைக்கானாது வெறி பிடித்து பித்தாகின்றாள்

கண்டுவிட்டால் காயப்படுத்தி விடுகின்றாள்இதயத்தை

ஏதோ போக்கில் போனவனை தனக்குள் அடக்கிகொண்டவள்

தயங்கிய போதெல்லாம் அணைத்துக்கதை பேசியவள்

இன்று அவளில் ஒரு தடுமாற்றம் இல்லை தனிமாற்றம்

என்னை சோதித்துப்பார்க்கின்றாளா ?துரத்த பார்க்கின்றாளா?

மனதில் ஒரு நெருடல் என்னையறியாது ஒரு ஏக்கம்

கற்பனை உலகில் என்கதை முடிந்துவிடுமோ?

ஏன் இந்தக்கலக்கம்நினைத்துப்பார்க்க முடியவில்லை

அவளின்றி என்பயணம்???

கவிஞர் இராஜேந்திரகுமார்

புதிரானவள்

புதிரானவள்


புயல் போல் தெரிவது அவள் சுபாபம்

பொன்னகை அணியாத புன்னகை தான் அவள் நகையே

கண்ணில் மை இல்லை களங்கமில்லா பார்வையானவள்

பொய் சொல்லத்தெரியாத புதுமையானவள்

புகழ்ச்சி என்றும் இவளை நெகிழ்ச்சிகொள்ள வைத்ததும் இல்லை

புகழாரம் கண்டு இவள் என்றும் மயங்கியதும் இல்லை

அநீதியை கண்டு கொதிப்பதில் பெண்களுக்கே நீதிபதி

வாழ்வை அனுபவித்துப்படித்தவள் இன்பமாக இன்றுவரைக்கும்

இயலாமை என்பதற்கு அர்த்தமே தெரியாத இறுமாப்பு இவளே

பல காலம் பழகியும் படிக்க முடியாத புதிரானவள்

என் இதயத்தில் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையும் இவளே!!!

கவிஞர் இராஜேந்திரகுமார்

கூண்டில் நின்றவள்

கூண்டில் நின்றவள்


குற்றம் செய்துவிட்ட உணர்வு அவளுக்கா இல்லை எனக்கா

பட்டுத்தெளிந்த பின்பும் பயம் கொண்ட போக்கு தொடருதே

நிச்சயம் சொச்சக்கனவும் பலிக்குமா துளிர்க்குமா

கரவு வார்த்தையில் கண்கட்டி தினம் தூசி பறக்கின்றதே

முளையில் கிள்ளிவிட முயல்கின்றேன், முடியவில்லை யார் தப்போ

நித்தம் நெளிகின்றேன் நிம்மதிக்காற்றுக்கூட திரும்பி போகின்றதே

வானத்து நிலவில் ஊஞ்சல் கட்ட நினைத்தது மனதில் வந்த கோளாறா

மயக்கத்தில் நான் கண்ட பேராசையின் பையித்திய வேஷமா

ஏதோ ஒரு தோல்வி மனதில் வந்து வலியாக குத்துகின்றதே

கண்களில் மட்டும் அசையாத ஒரு உருவம் அவள் வருகைக்காக

ஏக்கத்திலேயே சொர்க்கம் காண்கின்றேன் தூயவள் நீ என்பதால்.

கவிஞர் இராஜேந்திரகுமார்

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்



சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-3

பால் ப்ரண்டன் இந்தியாவில் கண்ட அபூர்வசக்திகள் படைத்தவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல. இங்கிலாந்தில் அவரிடம் அந்த இந்தியர் சொன்னபடி முறைப்படி ஏதாவதொரு விதத்தில் அந்த சக்திகளைப் பெற்றிருந்த, யோகிகள் வரிசையில் சேர்க்க முடியாத மனிதர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு பக்கிரியை அவர் பர்ஹாம்பூரில் பார்த்தார். பணம் கேட்டு வந்த அந்தப் பக்கிரி தன்னிடம் விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்ல பால் ப்ரண்டன் அதைக் காண்பிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கிரி பால் ப்ரண்டனின் முன்னிலையில் தன் வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். அதைக் காண சகிக்காத பால் ப்ரண்டன் திரும்பவும் வைத்துக் கொள்ளச் சொல்ல அந்தப் பக்கிரி அப்படியே அந்தக் கண்ணைத் திரும்பவும் சுலபமாகப் பொருத்திக் கொண்டார். கண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் சர்வ சகஜமாக அப்படி எடுக்கவும் திரும்ப பொருத்திக் கொள்ளவும் முடிந்த அந்தப் பக்கிரியிடம் "இது எப்படி சாத்தியமாகிறது?" என்று பால் ப்ரண்டன் கேட்க அந்தப் பக்கிரி அதை விளக்க மறுத்து விட்டார். "ஐயா, இது ஒரு குடும்ப ரகசியம். இந்த வித்தை தந்தை மகனுக்கு, மகன் தன் மகனுக்கு என பரம்பரை வழிகளில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது" என்றார்.

இது போன்ற வித்தைகளால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி பால் ப்ரண்டன் மனதில் எழுந்தது. அவர் தன்னிடமிருந்த பணம் சிறிது கொடுத்து அவரை அனுப்பி விட்டார். இது போன்ற காசு பணத்திற்காக வித்தை காட்டும் மனிதர்கள் இருக்கும் இந்த தேசத்தில் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகா சித்தர் இருந்திருக்கிறார் என்பதை அறிந்த பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான மஹாசாயா என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மஹாசாயாவிற்கு மிகவும் வயதாகியிருந்தது. மஹாசாயா கல்கத்தா கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட ஒரு உயர் கல்வியாளர் ராமகிருஷ்ணர் என்ற கல்வியறிவில்லாத ஞான சித்தரிடம் ஈர்க்கப்பட்டு சீடராக மாறியது பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ணரின் ஞான சக்தியின் மேன்மையை உணர்த்தியது. ராமகிருஷ்ணரைப் பற்றி அந்த நேரடி சீடரிடம் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மஹாசாயா தன் குருவைப் பற்றிப் பேசும் போது புதிய மனிதராகவே மாறி விட்டார். ".....ராமகிருஷ்ணர் பணம், பதவி, புகழ், கர்வம், சொத்துக்கள் எல்லாம் ஆத்ம ஞானத்தின் முன் தூசுகளே என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தார். அந்த நாட்கள் அருமையானவை. அந்த மகான் யோக நிலைக்குச் சென்று அமர்ந்திருப்பார். சுற்றியுள்ள நாங்கள் அவரைக் குருவாக அல்லாமல் இறைவனாகவே கண்டோம்....அப்படிப்பட்ட சக்தி அவர் இருக்கும் அந்த அறையெங்கும் பரவியிருக்கும். அவர் ஒருவரிடம் இறையுணர்வு ஏற்படுத்த, தானிருக்கும் யோக நிலைக்கு இழுத்துச் செல்ல பெரிதாக எதுவும் செய்யத் தேவையிருக்கவில்ல. அவர் லேசாகத் தொட்டால் போதும். அந்த தெய்வானுபவம் கிடைத்து விடும். அந்த அனுபவத்தின் பேரானந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை......"

ஜென்ம ஜென்மங்களாக தவமிருந்து பெறக் கிடைக்கும் அனுபவத்தை தன் தொடுதலாலேயே ஏற்படுத்த முடிவது ஒரு ஒப்பற்ற சக்தியல்லவா? விவேகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தி அல்லவா அவர் தன் வழிக்கு இழுத்தார். ஒரு நரேந்திரனை விவேகானந்தராக்கிய பெருமை அதனாலல்லவா கிடைத்தது.? ராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க முடிந்த காலத்தில் இந்தியா வராவிட்டாலும் மஹாசாயா போன்ற அவரது நேரடி சீடரைச் சந்திக்க முடிந்ததில் பால் ப்ரண்டன் மனம் நிறைவாக இருந்தது.

கல்கத்தாவில் மருத்துவராக இருந்த டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் பால் ப்ரண்டனுக்கு யோகிகள், யோக சக்திகள் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்து யோகி நரசிங்கஸ்வாமி பற்றி சொன்னார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா சொன்னார்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

(பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார். இயற்கைக்கு மாறாக மனிதனால் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்றாலும் அதில் அதிகக் கவனம் வேண்டும். கவனக் குறைவும், சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் அலட்சியமும் உயிரையும் குடித்து விடும் என்பதற்கு நரசிங்கஸ்வாமி ஒரு நல்ல உதாரணம்)

பால் ப்ரண்டன் சந்தித்த மற்ற சக்தியாளர்களையும் அவர் மனதில் இருந்த யோகிகளின் குணாதிசயங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் கண்ட மஹா யோகியையும் அடுத்த பதிவில் காணலாமா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:கோவை இமேஜஸ்

Wednesday, 8 June 2011

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

>
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?


”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

-என்.கணேசன்