பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Monday, 27 June 2011

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்---(பகுதி நான்கு)---- முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்



(பகுதி நான்கு)




முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை



1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்த்து.



1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.


2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.






துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.



தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.



21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.

துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.




14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.







அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.



பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.



இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள் என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.



இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.



பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.



இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.



அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர்.



கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.



அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.



இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.



தொடரும்

தமிழரைத் தேடி - 5

தமிழரைத் தேடி - 5


1. மணவினைச் சடங்குகள் வட மரபு - தமிழ் மரபு ஒரு ஒப்பீடு

பண்பாடு கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு வளர்ச்சிய அடையும்போது குடும்பம் கீழான வடிவிலிருந்து மேலான வடிவிற்குப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். குடும்பத்தின் ஒவ்வொரு வடிவத்திலும் மணவினைச் சடங்குகள் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் மணவினைச் சடங்குகளைக் கொண்டு அச்சமூகத்தின் பண்பாட்டுப் படிநிலைகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

சங்க கால தமிழர் மற்றும் சம காலத்திய வட ஆரியச் சமூகங்களின் மணவினைச் சடங்குகளை ஒப்பீடு செய்து ஆராய்வதன் வாயிலாக இவற்றில் எது மூலப் பண்பாடு என்பதையும் எது திரிந்த பண்பாடு என்பதையும் அடையாளம் காண இங்கு முயற்சிக்கப்படுகிறது.

அ) மறையோர் தேயத்து மணவினை முறைகள் (கரணங்கள்)

கீழ்க்கண்ட எண்வகைக் கரணங்களை (மண முறைகளை) மனு தர்மம் கூறுகிறது.

1. பிரம்ம: வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது பிரம்ம விவாகம்.

2. தைவதம் (தெய்வ மணம்): யக்ஞத் தீயின் முன்னிருந்து யாகம் நடத்தி வைக்கும் புரோகிதனுக்கு அலங்காரத்துடன் தனது பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்.

3. ஆரிஷம்: தான் செய்யவேண்டிய யாகாதி தர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ரிஷபம், ஒரு பசு அல்லது இரண்டு ரிஷபம், இரண்டு பசு இவைகளைப் பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்து கொடுப்பதை ஆரிஷ விவாகமென்பர்.

4. பிரஜாபத்யம்: பிரம்மச்சாரியை அழைத்துப் பூசித்துப் பெண்ணைத் தரும்போது நீவிர் இருவருமாய் அறங்களைப் புரிந்து வாழ்வீராக என்று வாழ்த்திக் கொடுத்தல் பிரஜாபத்யம்.

5. ஆசுரம்: பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி மணப்பது ஆசுரம் எனப்படும்.

6. காந்தருவம்: ஆண்-பெண் இருவரும் தம்மில் மனம் கலந்து தாங்களாகவே கூடிச் சுகித்தல் காந்தருவம்.

7. இராக்ஷசம்: அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்ஷசம்.

8. பைசாசம்: தூக்கத்திலும், குடிபோதையிலும், பித்தங்கொண்டும் இருக்கும் பெண்ணைக் கலப்பது மிகவும் தாழ்ந்த பைசாச மணமாகும்.

மேலே விவரித்த மணமுறைகளில் பிராமணனுக்குப் பிரம்ம முதல் காந்தருவம் வரையான ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையான நான்கும், ஏனையோருக்கு ஆசுரம், காந்தருவம், பைசாசம் ஆகிய மூன்றும் ஏற்புடையது. எனினும், இவற்றில் பிராமணனுக்கு பிரம்ம முதல் பிரஜாபத்யம் வரையான நான்கும், க்ஷத்ரியனுக்கு இராக்ஷசமும், மற்ற இரு வருணத்தவர்க்கு ஆசுரமும் சிறந்த மணமுறை என மனு தர்மம் கூறுகிறது.

ஆ) தமிழர் மரபு

தமிழ் மரபு மணமுறைகளைக் கற்பியல், களவியல் என இரண்டாகப் பகுக்கிறது. கற்பு நெறியில் அமைந்த மணவினைகள் (கரணங்கள்) மட்டுமே மேலோர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்: பொருள்: கற்பியல் 140)

தமிழ் மரபுப் படி வேளாளர்க்குரிய மணமுறையில் இருபாலரின் பெற்றோர்களின் சம்மதம் தேவைப்படுவதை மேற்கண்ட தொல்காப்பியச் சூத்திரம் தெளிவாக்குகிறது. மறையோர் தேயத்து மணமுறைகளில் காந்தருவம் தவிர்த்த பிற ஏழும் கைக்கிளை, பெருந்திணைப் பாற்பட்டவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

“முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல்: கற்பியல் 102)

“பின்னர் நான்கும் பெருந்திணைப் பெறுமே” (தொல்: கற்பியல் 103)

இச்சூத்திரங்களுக்கு உரைகூறும் இளம்பூரணர், ‘எண் வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய ஆசுரம் முதல் மூன்றும் (ஆசுரம், இராக்ஷசம், பைசாசம்) கைக்கிளைப் பாற்படும் என்றும் பிரமம் முதலிய நான்கும் (பிரமம், தைவதம், ஆரிஷம், பிரஜாபத்யம்) பெருந்திணைப் பாற்படும்' என்கிறார். நச்சினார்க்கினியரும் இதை உறுதி செய்கிறார். ஒரு தலைக் காமத்தை கைக்கிளையாகவும் பொருந்தாக் காமத்தைப் பெருந்திணையாகவும் தமிழ் மரபு இலக்கணப்படுத்தியுள்ளது.

காந்தருவம் ஒன்றே கைக்கிளை, பெருந்திணைப் பாற்படாத வடஇந்திய மணமுறையாகும். இம்மணமுறையில் தலைவனும் தலைவியும் ஒத்த மனத்தினராகக் கரணத்திற்கு முன் புணர்வர். இதனைத் தமிழ் மரபு களவிற் புணர்ச்சி எனக் கூறும்.

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், காதற் பரத்தையர் களவிற்குரியர் எனக் குறிப்பிடுகிறது. அதாவது வடமரபு கூறும் காந்தருவத்தை களவு எனக் கூறி அதனைப் பரத்தையருக்கே உரியதாக வரையறுத்துள்ளது.

மேலும்,

“களவின் வழிவந்த கற்பும் பொற்பமை
களவின் வழிவராக் கற்புமென் றாங்கு
முற்படக் கிளர்ந்த கற்பிரு வகைத்தே”

எனக் களவின் வழிவந்த கற்பு உண்டெனவும் அகப்பொருள் விளக்கம் கூறுகிறது. களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சி எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதற்கு இந்நூல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மையான”

களவுப் புணர்ச்சிக்குப் பின், தலைமகன், தலைமகளை தன் ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சம்மதத்துடன் மண வாழ்க்கையை மேற்கொள்வது களவின் வழிவந்த கற்பு மணமாகும்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கும் வள்ளிக்கும் நடந்த திருமணம் களவின் வழிவந்த கற்புப் புணர்ச்சிக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். சோழ அரசனுக்கும் நாக கன்னியான பீலிவளைக்கும் இடையிலான களவுப் புணர்ச்சி கரணத்தில் முடியாததனால் களவாகவே நின்றுவிடுகிறது. இவர்களுக்குப் பிறந்த மகன் திரையன் என்று அழைக்கப்படாமல் இளந்திரையன் என்றே அழைக்கப்படுகிறான். பெரும்பாணாற்றுப்படை, இளந்திரையனை ‘முந்நீர் வண்ணன் பிறங்கடை' என்று குறிப்பிடுகிறது.

முந்நீர் வண்ணனாகியச் சோழனின் பிறங்கடை மரபில் இளந்திரையன் உதித்துள்ளான் என்பது இதன் பொருளாகும். தமிழ் மரபுப் படி கரணத்தில் முடியாத காந்தருவம், பெருந்திணையாகவே கருதப்படும். இதன் மூலம் மறையோர் தேயத்து மன்றல் (மணங்கள்) எட்டுமே தமிழ் மரபுப்படி கீழோருக்குரிய கைக்கிளைப் பெருந்திணையின் பாற்படுவதை அறியலாம்.

தமிழ் மரபைக் கீழானதாக வரையறுப்பதன் மூலம் வட இந்திய மரபு கீழானதாகிவிடாது. இதற்கு நேர்மாறாக வட இந்திய மரபு தமிழ் மரபைச் சித்தரிக்கலாம். எனினும் இவற்றில் வளர்ந்த உடைமைச் சமூகத்திற்கானக் கரணங்கள் எவை என்பதையும் ஆராயவேண்டும்.

தமிழ் மரபு அங்கீகரித்துள்ள கற்பு நெறியில் அமைந்த மேலோருக்குரிய மணமுறையில் இரு பாலரின் பெற்றோரின் இசைவும் வேண்டப்படுகிறது. இம்மணமுறை நன்கு பக்குவப்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கே உரியது. பண்டைக் காலத்தில் வலுவான அரசர்கள் தனக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களிடமும் நட்பு அரசர்களிடமும் மகற்கொடை பெற்று அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது வழக்கம். சுமேரியாவில் தோன்றிய இம்மரபு உலகம் முழுவதும் பரவியிருந்தது. மகற்கொடை மறுத்த (தலைவனின்) அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்வது ராக்க்ஷசம் என்றும், அரச வருணத்தினருக்கு இம்மணமுறையே சிறந்ததென்றும் வட இந்திய தர்மங்கள் கூறுகின்றன. வடஇந்திய புராணங்களிலும் வரலாற்றுக் காலத்திலும் பல மன்னர்கள் வேற்று அரசனின் மகளைக் கவர்ந்து சென்று மணம் முடித்ததைக் காணமுடிகிறது. உலகின் பெரும்பாலான (அனேகமாக அனைத்து) அரச குலத்தினரும் இத்தகைய ராக்க்ஷச மணத்தை அங்கீகரிக்கவே செய்கின்றனர். உண்மையில், பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்திற்கு இம்மணமுறை பொருந்தாத ஒன்றாகும்.

நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூகத்தில் பெண் குடும்பத்தின் உடமையாகிறாள். தன்னை, பெற்றோரின் (குடும்பத்தின்) உடமையாக நினைத்து வாழும் மகளை கவர்ந்து சென்று மனைவியாக்கிக் கொள்ளும் ராக்க்ஷச மணம் குடும்ப உறவுகளில் அராஜகத்தைத் தோற்றுவித்து விடுகின்றது. இம்மணமுறையை ஆதரிக்கும் வட இந்திய மற்றும் ஐரோப்பிய அரச குலத்தவரிடையே, அரசன் ராணிகளை நம்புவதில்லை.

ராணிகள் அடிக்கடியும் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு விடுகின்றனர். ராணிகளிடம், அரசன் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்த சாஸ்திரம் விரிவாகக் கூறுகின்றது.

"அரசிகளாலோ அல்லது அரசிகளின் அறையில் நிகழும் நிகழ்வுகளாலோ, அரசர்கள் கொல்லப்பட்டதற்கு உதாரணங்கள் உண்டு. பத்ரசேனன் என்கிற மன்னன் அரசியின் அறையில் மறைந்திருந்த தனது சொந்த சகோதரனால் சொல்லப்பட்டான். அதே போல் க்ருஷா என்பவன் அரசியின் படுக்கைக்கடியில் மறைந்திருந்த தனது மகனால் கொல்லப்பட்டான். சில அரசிகள் விஷம் கலந்த உணவுகள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களால் அரசனைக் கொல்வார்கள். எனவே அரசன் எப்போதும் கவனமாயிருந்து இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதான பணிப்பெண் மூலம் அரசியின் அறையில் எவ்வித அபாயமும் இல்லை என்று அறிந்த பிறகே அரசன் அங்கு செல்லலாம். தலையை மழித்தத் துறவிகள், கண்கட்டி வித்தைக்காரர்கள், மந்திரவாதிகள் அல்லது வெளியிலிருந்து வரும் பெண்களை அரசி சந்திப்பதைத் தடுக்கலாம்....... அரசியின் சேவகர்களை 80 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணோ சோதனை செய்யலாம்".

இவ்வாறு தன் மனைவிகளிடமே அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை வடஇந்திய அரச குலத்தவருக்கு இருந்துள்ளது. ஐரோப்பிய வரலாற்றிலும் கூட அரசனைக் கொன்ற ராணிகளையும், மகன்களால் கொல்லப்பட்ட அரசர்களையும், ராணிகளையும் பிள்ளைகளையும் கொன்ற அரசர்களையும் அதிகமாகவே காணலாம்.

தமிழக வேந்தர் குடியினருக்கோ இத்தகைய சிக்கல்கள் ஒருபோதும் தோன்றியதில்லை. வேந்தர்கள் மகற்கொடை மறுத்த தலைவர்களின் ஊரை அழித்து, அவர் மகளிரைக் கைப்பற்றி, ‘கொண்டி மகளிராக்கி' விடுவரேயன்றி, மணம் புரிவதில்லை. இக்கொண்டி மகளிர் மூலம் ஏவல் மரபினராகிய வேளாளரின் கீழ்ப் பிரிவு தோன்றிவிடுகின்றது. இம்மரபு, பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கான சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு போரிட்டு, கைக்கொண்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கி சிக்கல்களுக்கு உள்ளாவது பண்படாத சமூகங்களிலேயே நிகழும். ஐரோப்பிய அரசர்களும் இவ்வாறு கைக்கொள்ளப்பட்ட மகளிரைப் பட்டத்து ராணியாக்கும் மரபைக் கொண்டிருந்தனர். அங்கும் அரசனுக்கு எதிராக ராணிகள் நடத்திய சூழ்ச்சிகளுக்குப் பெரும் பட்டியலே உள்ளது. கொண்டி மகளிரை வெள்ளாட்டிகளாக்கும் (ஏவல் மரபினராக்கும்) மரபை தமிழ் வேந்தர் குடியினர் மிக உறுதியாகக் கடைப்பிடித்தனர். நிலபிரபுத்துவச் சமூக அமைப்பின் நீண்ட நெடிய வரலாற்றில் ஆரம்பக்கட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலமே இத்தகைய சிறப்பான மரபுகள் தமிழ் வேந்தர் குடியினரால் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை உய்த்துணர வேண்டும்.

மேலே விவாதித்தவற்றிலிருந்து வட இந்தியச் சமூகம் மணவினைச் சடங்குகளை எட்டு வகையாக வகைப்படுத்தியிருந்தாலும், உள்ளடக்கத்தில் அதிகம் வளர்ச்சியடையாத எளிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. தமிழ் வேந்தர்குடியினரோ, மகற்கொடைக்குரிய மரபினர் கொடுப்பக் கொள்வதே சிறந்தது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். இன்றைய சூழலில் இக்கொள்கை மிகவும் எளிமையான, இயல்பான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் மிகவும் பண்பட்டவைகளாகக் கருதப்படும் பண்டைய வடஇந்திய மற்றும் ஐரோப்பிய சமூகங்களால் இம்மரபை எளிதில் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

2. தமிழர் மரபில் கற்பு நெறி

கற்பில் சிறந்த மகளிரை தமிழர், பத்தினிப்பெண்டிர் எனக் கூறுவர். பத்தினிப்பெண்டிரின் பண்புகளை தமிழ் இலக்கியங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

“அச்சமும், நாணும், மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப” (தொல்: பொருள்: 86)

என தொல்காப்பியர், அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றையும் பெண்களின் அணிகலன்களாகக் கூறுகின்றார்.

“உயிரினும் சிறந்தன்று நாணே, நாணிணும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்த தன்றெனத்
தொல்லோர் கிளவிப்புள்ளிய நெஞ்சமொடு” (தொல்: பொருள்: 111)

நாணுதல், பெண்களுக்கு உயிரைவிடச் சிறந்தது எனக் கூறும் தொல்காப்பியர், அதனினும் சிறந்தது கற்பு எனக்கூறுகிறார். ஐரோப்பியப் பண்பாடுகள் அனைத்தும் திரிந்த பண்பாடுகளே. கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதற்காக அச்சமூகங்கள் பெண்களுக்கு அல்குல்பூட்டு போடுவது போன்ற கடுமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தன. இத்தகைய வழக்கத்தை திருக்குறள் தெளிவாக நிராகரிக்கிறது.

“சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை” (குறள்: 57)

மகளிரை சிறைவைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இதன் பொருளாகும். தமிழ்ப் பெண்களுக்கு கற்பு நெறியில் ஒழுகுவதற்கு ஐரோப்பியரைப் போன்று சிறைவைப்பு தேவைப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி” (மணிமேகலை: காதை 18: வரி 100-102)

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை. இத்தகைய மகளிர்க்குக் கணவனே உயிர் போன்றவன் என குறுந்தொகை கூறும்.

“வினையே ஆடவர்க் குயிரே
மனையுறை மகளிர்க்கு அவரே உயிர்” (குறுந்தொகை -135)

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொள்ளும் பத்தினிப் பெண்டிர் பெய்யென கூறினால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை” (குறள்: 5)

மணிமேகலையும், மழை பெய்விக்கும் கற்புடைப் பெண்டிர் பற்றி குறிப்பிடுகின்றது.

“வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையன்” (மணிமேகலை: காதை16: வரி 77-78)

கற்புடைய பெண்டிர் பற்றிய சிறப்புகளைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றிக்கூறும் அளவிற்கு பிற பண்டைய இலக்கியங்களில் காணமுடிவதில்லை. பண்டைய அரேபியர், பெண்களைச் சிறை வைத்து, முக்காடிட்டு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் கற்புநெறியில் ஒழுகச் செய்வர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய அரேபிய பெண்களின் நிலை பற்றி கவிஞர் பாப்ரியா கூறுவது கவனத்துக்குரியது.

‘தந்தையின் மறுதார மனைவி அவன் இறந்தபின் மகனுக்கு உரியவள். மகன் விருப்பமிருந்தால் அவளை மணம் செய்யலாம். அல்லது தனது விருப்பப்படி வேறு யாரையோ அவள் மணம் புரிய வற்புறுத்தலாம்' என்கிறார்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கணவன் இறந்த பின் பத்தினிப் பெண்டிர் செய்யும் செயல்களை மணிமேகலை பின்வருமாறு விவரிக்கின்றது.

“காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊது உலைக் குருவின் உயர்த்து அகத்து அடங்காது
இன் னுயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்,
நளிஎரி புகார் ஆயின், அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்” (மணிமேகலை: காதை 2: வரி 42 - 48)

இதன் பொருள், பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இறந்துவிடுவர்; சொல்லன் உலையிலே நெருப்பை மூட்ட ஊதுகின்ற துருத்தியைப் போல அனல் கக்கும் பெருமூச்சு விடுவர்; உயிர், உடம்பினுள் அடங்கி நிற்காது; அந்த முதல் மூச்சிலேயே தமது உயிரைத் துறப்பர்.

கணவர் இறந்ததைக் கேட்டவுடன் இவ்வாறு உயிர் விடாதவர்கள் தீ மூட்டுவர்; அந்தத் தீ நன்றாக எரியும் போது குளிர்ந்த பொய்கையில் குளிப்பதற்குப் புதுவதுபோல் அத்தீயிலே புகுந்து உயிர் விடுவர்.

இப்படித் தீக்குளித்து உயிர் துறக்காதவர்கள் கைம்மை நோன்பு கைக்கொள்ளுவார்கள்; இறந்தபின் கணவன் அடைந்திருக்கும் உலகிலே சென்று அவனுடன் உறையக் கருதியே அந்த நோன்பை மேற்கொண்டு உயிர் வாழ்வார்கள்.

பண்டைய தமிழ்ச் சமூகம், பத்தினிப் பெண்டிரை இவ்வாறு மூன்று தகுதி நிலைகளாகப் பிரித்துக் காட்டுகிறது. முதல் தகுதி நிலைக்கு உதாரணமாக, தவறு செய்யாத கோவலனுக்குத் தவறுதலாகத் தண்டனைக் கொடுத்ததை உணர்ந்து, தன் கணவன் உயிர் விட்டதை அறிந்த அந்நொடியிலேயே பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியின் உயிரும் பிரிந்து விடுவதைக் கூறலாம்.

பூதப்பாண்டியன் இறந்தபின் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வதை புறநாநூறு 246 ஆம் பாடல் விளக்குகின்றது. ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் தீப்பாய்ந்து மாண்டதை புறநாநூறு 240, 241 ஆகிய பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவை இரண்டாம் நிலை பத்தினிப் பெண்டிருக்கான வரலாற்று சான்றுகளாகும்.

தலைவன் இறந்தபின் அவனுடைய மனைவியர் கூந்தல் கொய்து (மொட்டையிட்டு) கைம்மை நோன்பு மேற்கொண்டதை புறநாநூறு 25வது பாடல் கூறுகின்றது.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கற்புநெறி என்பது கருத்தியல் தளத்தில், மக்களின் மனதிலேயே மிக ஆழப் பதிந்திருந்ததை நாம் அறியமுடிகிறது. மாறாக, சிறை வைத்து கற்பு நெறியைக் காக்க முயன்ற அரேபியரிடம், ஆணின் தனி உடமையை நிச்சயித்துக் கொள்வதற்கான பொருளியல் தளத்தில் வைத்தே கற்பு நெறி எண்ணப்பட்டது. கருத்தியல் தளத்திற்குள் அது செல்லாததால் கணவன் இறந்தபின் மறுமணம் அனுமதிக்கப்பட்டது. தென் ஈரான், தென் அரேபியா ஆகிய பகுதிகள் சங்ககால வேந்தர் குடியினரின் பூர்வீக பூமியாகும். பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த அரேபியர், அப்பகுதியில் பூர்விகமாக வாழ்ந்து வந்த தொல் தமிழரின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டினைத் தமதாக்கிக் கொண்டபொழுது கற்பு நெறியைத் திரிந்த வடிவில் மேற்கொள்ளத் தொடங்கினர். அரேபியப் பெண்களின் முக்காடிடும் வழக்கம், பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத்தான் காணாமலும் வாழ்ந்ந்த தமிழ்ச் சமூகப் பத்தினிப் பெண்டிர் பின்பற்றிய மூல மரபின் திரிந்த வடிவமாகும்.

சங்க இலக்கியங்களில் மடலூர்தல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் தன் காதலை வெளிப்படுத்த தலைவன் தலைவியினது உருவத்தைக் கிழியில் எழுதிப் பிடித்துக் கொண்டு, ஓரம் செதுக்காத பனை மடலால் (கருக்கு மட்டை) குதிரை வடிவம் செய்து, அதில் ஏறி, எருக்க மாலை முதலியவற்றை அணிந்து, ஊரார் பழி கூறும்படி தெருவில் செல்வது கூறப்படும். தலைவனின் இச்செயல், “புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறன் ஆகிய பெருந்திணைக்கும்” உரித்ததாயிற்று என்கிறது தொல்காப்பியம் (தொல் : பொருள் : 54). எனவே பொதுவாக, தலை மக்களுக்கு இது உகந்த செயல் அல்ல. மடலூர்தல் நாணங்கெட்ட செயலாகையால் பெண் பாலார்க்கு அனுமதி இல்லை என்பதை தொல்காப்பியம் தெளிவுபடுத்துகின்றது.

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான”.

இக்கருத்தை வலியுறுத்துகின்ற வள்ளுவர்

“கடலென்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்” (குறள்: 1137)

என்பதுடன் ஆண்கள் மடலேறுவதையே கூட நாணம் துறந்த செயலாகவே சித்திரிக்கின்றார்.

“நாணொடு நல்லான்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல்” (குறள்: 1133)

“காமக் கரும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை” (குறள்: 1134)

மடலூர்வது, ஆடவர்க்கேகூட நாணங்கெட்ட செயலாகத் தமிழ் மரபு போதிக்கிறது. மடலூர்தலை ஒத்த ஒரு வசியச் சடங்கு வட நெறியிலும் இருப்பதை பேரா. வையாபுரி பிள்ளை (இலக்கிய உதயம்-நான்காம் தொகுதி) விளக்குகிறார்.

ஒருவன், ஒரு பெண்ணினுடைய காதலைப் பெற வேண்டும் என்று இச்சித்தால், அவள் உருவத்தைக் களிமண்ணினால் செய்து, சணல் நாரினால் அமைத்த நாணோடு கூடிய வில்லைத் தாங்கி, அதன் அம்பின் நுணியில் முள்ளைச் செருகி, ஆந்தையின் சிறகை அம்புச் சிறகு ஆக்கி, கருங்காலினால் அம்பின் தண்டினை அமைத்துக் கொள்வான். உருவத்தின் இருதய ஸ்தானத்தை இவ்வம்பினால் குத்திக் குத்திக் குத்தித் துளையொன்று உண்டு பண்ணுவான். அது காதல் கடவுளாகிய காமனுடைய அம்பினால், தனது காதலியின் இதயத்தைத் துளைப்பதான பாவனையாகும். இங்ஙனம் துளைத்துக் கொண்டு அதர்வவேதத்தின் மூன்றாம் மண்டலம், 25வது சூக்தத்தை ஒதுவான்.

மேற்சொன்ன வசியச் சடங்கினை பெண்பாலரும் மேற்கொண்டுள்ளதை அதர்வ வேதத்தில் காணமுடிகின்றது. இச்சடங்கினை கையாளும் தலைவி, தலைவன் உருவத்தை கிழியில் எழுதி, அதன் இதயத்தின் மீது கொழுந்து விட்டெரியும் அம்பு நுணியை எறிந்து அதர்வ வேதம், ஆறாம் மண்டலம், 130, 138 வது சூக்தங்களை ஒதுவாள் என்று கூறப்படுகின்றது.

பெண்பாலருக்கும் அனுமதிக்கப்பட்ட இவ்வசிய நெறியையே வடநெறியிலமைந்த மடலூர்தலாகப் பெரிய திருமடல் குறிப்பிடுவதாக பேரா. வையுரிப்பிள்ளை கருதுவது ஏற்புடையதே.

“மன்னும் வழிமுறையே நிற்றும் நாம், மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாம் தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்.” (பெரிய திருமடல்: 38-40)

தன்னை, பெண்ணாகப் பாவித்துக் கொண்ட திருமங்கையாழ்வார், திருமால் மேல் தனக்குள்ள காதலை வெளிப்படுத்த மடலேறவும் தாம் தயாராக உள்ளதாகவும், தமிழ் மரபில் பெண் மடலூர்வது இல்லையென்பதால், வடநெறிப்படி ஒழுக இப்பாடலின் மூலம் அனுமதி வேண்டுகிறார். வட ஆரியச் சமூகத்தில் தலைமக்களில் பெண்பாலரும்கூட நாணுதல் குறைபாடுடையவராக விளங்கினர் போலும்.

சங்ககால வாழ்வியலில், அடியோரும், வினைவலரும் நாணுதல் குறைபாடுடையோராதலால் அகத்திணைக்குரியோர் அல்ல என்றும், அகப்புறத்திணைகளாகிய கைக்கிளை, பெருந்திணைக்குரியோர் என்பார் இளம்பூரணர். வட ஆரியச் சமூகத்துக்குரியதான மணவினைச் சடங்குகள் எட்டும் கைக்கிளைப் பெருந்திணை பாற்படுவது ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.

அச்சமும், நாணும், மடனும் பெண்களுக்குரிய செவ்வியல் பண்புகளாக நன்கு பண்பட்ட நிலபிரபுத்துவ சமூக அமைப்பிலேயே காணமுடியும். இப்பண்புகளில் சங்ககால தமிழ்ப் பெண்டிர் சிறப்புடன் விளங்கியதை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. வட ஆரிய சமூகத்திலோ என்றுமே இப்பண்புகள் சிறப்பாக வளர்ந்ததில்லை. அவர்கள் தொடர்பான புராணங்களில் கூட இப்பண்புக் குறைபாட்டினைக் காணமுடிகிறது.

மகாபாரதக் கதையில், சந்தனு மகாராஜா மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணை மணக்கின்றார். மச்சகந்தி திருமணத்திற்கு முன்பே பராசரர் என்ற முனிவருடன் களவில் கூடி வியாசரைப் பெற்றெடுக்கிறாள். சந்தனுவின் பேரன்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும் கூட தங்கள் தந்தைக்குப் பிறக்கவில்லை. பாட்டியாகிய மச்சகந்தியின் மகன் வியாசருக்கும், தங்கள் தாய்க்குமான ஒரு சடங்குப் புணர்ச்சியின் மூலம் பிறக்கின்றனர். பாண்டு புத்திரர்கள் கூட உண்மையில் குந்தி புத்திரர்களேயன்றி பாண்டு புத்திரர் அல்ல. திருமணத்திற்கு முன் களவுப் புணர்ச்சி மூலம் கர்ணனை குந்தி பெற்றெடுக்கிறாள். திருமணத்திற்குப் பின்பும், கணவன் அல்லாத பிறருடன் கூடி பஞ்ச பாண்டவர்களையும் பெற்றெடுக்கின்றாள். திருமணத்திற்கு பின் பிற ஆடவருடன் கூடுவதைத் தமிழ் நெறியில் களவுப் புணர்ச்சியாகக் கூட கூற முடியாது. வடமொழிச் சொல்லான சோரம் போகுதல் என்று இதனைக் குறிப்பிடலாம். தமிழ் நெறியோ, காந்தருவத்தையே களவாகக் கூறுகின்றது. வடநெறியில் காந்தருவம் சிறப்பான மணவினை முறையாகும். திருமணத்திற்குப் பின் பிற ஆடவருடன் கூடுவதைத்தான் களவு (சோரம்) என வடவர் கொள்கின்றனர். இவ்வகையில் வட ஆரியர் சமூகம் கற்பு நெறியில் தமிழரை விட குறைபாடு உள்ள சமூகமாகவே காட்சியளிக்கின்றது.

கடவுளர்களிடம் குந்தி சோரம் போனதைக் குறை கூறமுடியாது எனக் கூறவும் வழியில்லை. ஏனென்றால், தமிழ்ச் சமூகம், கணவனைத் தவிர பிற தெய்வங்களைப் பத்தினிப் பெண்டிர் தொழுவது கூட இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. எவ்வாறாகினும், இதிகாசங்கள் கூறும் மரபுகளைக் கொண்டு வடவர் பண்பாட்டை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது என்று சிலர் கூறமுற்படலாம். சங்க காலத்தின் சம காலத்தில் பாடப்பட்ட அகப்பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்று பிராகிருத மொழியில் ‘கதா சப்த சதி' என்ற பெயரில் உள்ளது. அதில் உள்ள பாடல்கள் தமிழ் அகப்பாடல் மரபை ஓரளவு ஒத்துள்ளதைக் காணலாம். தலைமக்கள், பிறன்மனை நோக்குதல் போன்ற நாணுதல் குறைபாடான செயல்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த விவரிப்புகள் அப்பாடல்களில் நிறைந்துள்ளதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து வடவர் சமூகம், எக்காலக் கட்டத்திலும் சங்க கால தமிழ்ச் சமூகத்தைப் போன்ற முதிர்ச்சியடைந்த நிலவுடைமைச் சமூகத்தின் பண்புகளைக் கொண்டிருந்ததில்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

முனைவர் கைலாசபதி, சங்க இலக்கியப் பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் தொடர்புபடுத்துவார். கிரேக்க வீரயுகப் பாடல்கள், உயர்குடி வீரர்கள் பிறன் மனைவி மீது கள்ளக் காதல் கொள்வதை விவரிப்பதை சிறப்பான அகப்பாடல் மரபாகக் கொண்டுள்ளன. அச்சமூகத்தின் உண்டாட்டுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மது அருந்திக் கூத்தாடுவர். தமிழ்ச் சமூகத்தில் சங்ககால உண்டாட்டுகளில் பெண்பாலர் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியருடைய பொதுப்பண்பே, பெண்கள் சுதந்திரமாக இருப்பதுதான்; எனவே இப்பண்பைக் கொண்டு அவர்களின் பண்பாட்டை கீழானதாக மதிப்பிட முடியாது என்று சிலர் வாதம் செய்யலாம். அவ்வாறாயின் மனித சமூகத்தின் பண்பாட்டு மானிடவியல் கோட்பாடுகள் ஐரோப்பியருக்குப் பொருந்தாது எனக் கொள்ளலாமா? வளர்ந்த அரசியல் பண்பாட்டு நிலையிலும், நாணுதல் குறைபாடுள்ள ஐரோப்பியரை, ஹோமோ சேபியன்களுக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு இனம் என வரையறை செய்தால்தான் இவ்வாறு இரு அளவு கோல்களைப் பயன்படுத்த முடியும். மனிதகுலம் முழுவதுமே ஹோமோ சேபியன் என்ற ஒரே இனம்தாம் என்பது தெளிவாக நிரூபணமான ஒன்று. எனவே, பண்பாட்டு வளர்ச்சியைப் பொருத்தமட்டில் தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஒரே அளவுகோலைத்தான் பயன்படுத்தவேண்டும்.

அச்சம், நாணம், மடம் இம்மூன்றும் ஒரு சமூகத்தின் பெண்களிடம் அமையும் பொழுது, கற்பு நெறி கருத்தியல் தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. ரிக்வேத ஆரியர் உட்பட்ட ஐரோப்பிய இனக்குழுக்கள் தொல் தமிழர் வாழ்ந்த மேற்காசியப் பகுதிகளுக்குள் குடியேறி அப்பூர்வ குடிமக்களின் வளர்ந்த பண்பாடுகளை தமதாக்கிக் கொண்டனர். இந்த இயக்கப்போக்கில் அங்கு திரிந்த பண்பாடுகள் தோன்றி விட்டன. கிரேக்கரும் இவ்வாறு திரிந்த பாட்டினர்தான். கடுமையான சட்டங்கள் இயற்றி, கெடுபிடிகளை மேற்கொண்ட போதிலும் அச்சமூகத்தினரிடையே கற்பு நெறி கருத்தியல் தளத்திற்குச் செல்லவில்லை. அதன் வெளிப்பாடாகவே அச்சமூகங்களின் இலக்கியங்களில் நாணுதல் குறைபாடுள்ள தலைமக்களைக் காணமுடிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க நம் ஆய்வாளர்கள், மூலச்சிறப்பு மிக்க தமிழ் இலக்கிய, இலக்கண, அரசியல் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ரிக்வேத ஆரியர், கிரேக்கர் போன்றோரின் இலக்கியங்களைத் துணைக் கொள்கின்றனர். இச்செயல், திரிந்த பாலைக் கொண்டு பாலின் தன்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு ஒப்பானது. திரிந்த பாலில், தூய பாலின் பண்புகள் சிலவற்றை அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணலாம். அதுபோலவே தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் அறக் கோட்பாடுகளில் சிலவற்றை கிரேக்க, ரிக்வேத ஆரியர் இலக்கியங்களில் காணமுடிகிறது.

Saturday, 25 June 2011

பிரிகேடியர் கடாபி/ ஆதவன்

பிரிகேடியர் கடாபி/ ஆதவன்



சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.


வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.



‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.



அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.



இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.



பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.



அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.



இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.



மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.



கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.



நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.






இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன்.



குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.



இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.

Friday, 24 June 2011

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை.

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!





1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.



'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்' என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.






யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.

'சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு' என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின் வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம் இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.



விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப் பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல் அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல் வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.

பார்வைக்கு சிங்கள அரசின் வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர் அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக் கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது. தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.



சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும் கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும் பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.



'காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது' என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும் அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.

எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.



இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல, இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால் சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத் தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.


வன்னித் தமிழனப் படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000 பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000 பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.



சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ 3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும் 2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில் கஸ்டம் இருக்க மாட்டாது.



சமாதான காலத்தில் கட்டுமானப்பணி, நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும் பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும் என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.

மேலும் படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம் சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின் பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும் அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப் படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.

சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின் வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன் வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத் தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள் கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.

இருப்பதில் இருந்துதான் அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம் நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில் இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது அவசியம்.





2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது


வன்னி மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு 'றிவரஷ' இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும் வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள் திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர். வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம் இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.

அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது. மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன் வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின் தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.



வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும், மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள் மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின. மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.

போராளிகளாய் பிள்ளைகள் யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில் பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.



தாங்க முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க் காணப்பட்டனர்.

முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும் வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர். வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.

இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம் பார்க்க வேண்டும்.

கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும், மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். 'புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது' என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.

எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில் சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி மண்ணின் பெரும் துயரை....!





3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.

யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின் செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன் கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.



இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக் கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) http://www.museology.org/japan.html. அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம் தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.



காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும் மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.

பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும், தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண் போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக் கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின் அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச் செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும், தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும் போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது வழக்கம்.

இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம் தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார். அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர் செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும் மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.



பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ் பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம் எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?



புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல் கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல் கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக.







சொல்லியழ எவருமின்றி!



யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.



அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. பின்னாளில் ஈழப் போரின் முழுச் சுமையையும் வன்னி மக்கள் முதுகில் சுமந்தனர். இலட்சியத்திற்காக உயிர், பொருள், உடமை, உழைப்பு, எண்ணம், உணர்வு, சிந்தை, செயல், பந்தம், பாசம், அனைத்தையும் அம்மக்கள் ஈழப்போரட்டத்திற்கு ஆகுதியாக்கினர்.



எதிரியோ தனது அனைத்து வளங்களையும் மஹிந்த சிந்தனையின் பெயரால் ஒருங்கு திரட்டி உலகை அரவணைத்தும், வன்னியை தனிக்கப்பிடித்தும் தனது கோரப் பற்களை வன்னியின் மீது கவ்வவிட்டார். தனது அறிவையும், ஆற்றலையும், சூழ்ச்சியையும், தந்திரத்தையும் கொண்டு, உலகை தன் கையில் கதாயுதமாய் ஏந்திய எதிரி, அப்பாரிய கதாயுதத்தால் வன்னி மண்ணை ஓங்கி உதைத்தார். மண்ணும் மக்களும், பயிர்களும் உயிர்களும், காடும் வயலும், பொன்னும் பொருளும், ஊரும் பெயரும் என அனைத்தையும் எதிரி தன் யுத்தத் தேர்க்காலுக்கு இரையாக்கினார். வன்னி மக்கள் தேர்க்காலில் சிதைந்து ஊர முடியாத அட்டைகளாய் நசியுண்டு இழுபட்டனர்.



சொந்தங்களை இழந்தனர். பந்தங்களையும் பாசங்களையும் இழந்தனர். சொத்துக்களையும் பத்துக்களையும் இழந்தனர். பத்து என்பதில் மானமும், மரியாதையும் தமிழர் ஏற்றிப் போற்றும் அனைத்து விழுமியங்களும் அடங்குகின்றன. எதிரி தன் கோரப் பற்களை பாலியல் பலாத்காரத்தில் தெளிவாக பதித்துக் கொண்டான்.



மேலங்கிக்காக போராடப் புறப்பட்டு, கோவணத்தையும் பறிகொடுத்த கதையாய் தமிழ் மக்களின் துயரம் உள்ளது. இதில் வன்னிமக்களின் துயரம் உச்சாணிக் கொம்பாய் காட்சியளிக்கிறது. வன்னி என்பது ஒரு நிலநூல் சொல்லாக மட்டுமன்றி, தமிழீழப் போராட்டத்தின் ஒரு குறியீட்டுப் பதமாகவும் மாறிய சொல் அது. தமிழீழம் எனும் இலட்சியத்தையும், உலகத் தமிழினத்தின் கனவையும் காவிநின்ற மண்ணாயும், மக்களாயும், பதமாயும் வன்னி அமைந்தது.



கடித்துக் குதறப்பட்ட அந்த மக்கள் இன்று எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடப்போராய், கைவிடப்பட்டோராய், அன்னியர்களின் தயவுக்கு கையேந்தி நிற்போராய் காட்சியளிக்கின்றனர். இந்த மக்களின் துயரத்தை வரலாறு சரிவரப் பதிவுசெய்ய வேண்டும். எல்லாத் துயரும் அவர்களுக்கே என்று எழுதி வைத்தாற் போல, துயரப்பட்ட அந்த மக்களை நோக்கி, எல்லாக் கவனமும் அந்த மக்களுக்கே என்று முதலில் நாம் எமது வளங்கள் அனைத்தையும் அங்கு திருப்ப வேண்டும்.



'சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்'. சிதைக்கப்பட்டிருக்கும் கிழக்கையும், வன்னியையும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முதலில் வகுப்பதே தமிழீழப் போராட்டத்தின் தலையாய பணியாய் தற்போது அமைய வேண்டும்.



வன்னிப் பெருந்துயரை எப்படிப் பதிவது. அது ஏடு தாங்காப் பெருந்துயரம். கடலாலும், காட்டாலும், இராணுவ வேலியாலும் சுற்றி மூடிக் கட்டப்பட்டிருந்தவர்கள் வன்னி மக்கள். இத்தகைய ஒரு கூட்டுக்குள் இருந்தும் அவர்கள் கூவத் தவறவில்லை. போரட்டத்திற்காக அனைத்துக் கடப்பாடுகளையும் அவர்கள் ஏற்றார்கள். எதிரியின் அனைத்துவகைத் திணிப்புகளையும் சுமந்தார்கள். எதிரியின் அனைத்து வகை பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமது பொருளாதாரத்தைப் போராட்டத்திற்கு ஈய்ந்தளிக்க அவர்கள் தயங்கவில்லை. தங்கள் தலைப் பிள்ளைகளை போராட்டத்திற்கு உரமாக்கினார்கள். விரும்பியும், விரும்பாமலும் போராட்டத்திற்கான ஆள்பற்றாக்குறைக்கு அவர்கள் தம் பிள்ளைகளை மேலும், மேலும் கொடுக்க நேர்ந்தது. எல்லாவற்றையும் இலட்சியத்துக்காகவே சுமந்தார்கள்.



பிள்ளைகள் மட்டும் களங்களில் நின்று போராடினார்கள் என்றில்லை. எல்லா வகையிலும் அவர்கள் போராட்டத்திற்கு முதுகு கொடுத்தார்கள். இயக்கம் அழைப்பு விடுத்த அத்தனை படைகளுக்கும் முது வயதிலும் அவர்கள் பங்காளியானார்கள். அதிகாலையில் முதியவர்கள் ஆண், பெண் வேறுபாடிறின்றி கொட்டனுடன் பயிற்சி எடுக்கும் காட்சிகளை மனித குல வரலாறு வன்னி மண்ணிற்தான் பதிவு செய்திருக்கிறது என்பதை எமது கண்கள் காணத் தவறக்கூடாது. பிள்ளை போர்க்களத்தில், தாயோ பயிற்சிக் களத்தில் என வரலாறு நகர்ந்தது.



இத்தனை தியாகங்களையும் செய்த இந்த மக்களின் முதுகெலும்பில் ஓடிய இந்தப் போராட்டம் ஏன் தோல்வி கண்டதென்பது ஒரு துயரமான கேள்வி. எங்கள் கண்களை நாங்களே துடைத்துக் கொண்டு, ஏன் தோல்வி கண்டோம்? ஏன் குற்றுயிராய்க் கிடக்கிறோம்? இனி எப்படி எழும்பி நடக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளை நாம் தவறாமல் கேட்டு, எம்மை நாம் சுதாகரிக்க வேண்டும்.



உதாரணத்திற்கு நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு கூறுகிறேன். புதுக்குடியிருப்பு நோக்கிப் போகும் A 32 வீதியது. ரெட்பானா கழிந்து, புதுக்குடியிருப்பு நோக்கி போகும் அந்த வீதியில் உள்ள தேராவில் குளம் வீதியை முற்றிலும் மேவிப் பாய்கிறது. போக்குவரத்து அவ்விடத்தில் முற்றிலும் தடைப்பட்டுப் போய்விட்டது. காட்டுக்குள்ளால் ஒரு புதிய பாதையை சில தினங்களுக்குள் அமைத்து முடித்தாயிற்று. ஆனால் பாதை சேறும் சகதியும், முள்ளும் தடியும் நிறைந்ததாய் உள்ளது. அப்போதும் இராணுவம் தமது எறிகணைகளை கண்துஞ்சாது வீசிக்கொண்டிருக்கிறது.



புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து காட்டுப் பாதையினால் எனது உறவினரைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப்பாதை கடந்து குளம் மூடியுள்ள விளிம்பு வீதியில் ஏறுகிறேன். அந்த வேளை வீதியைக் குளம் மூடியிருக்கும். அந்த விளிம்பில் குந்தியவாறு, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுத வண்ணம் இருக்கிறார். நான் அவரை அணுகுகிறேன். அவரது தோளில் கையை வைத்தவாறு அவரை வினவுகிறேன்.



அப்போது அவர் பெரிதாக அழத்தொடங்கினார். அழுது கொண்டு ஆற்றவியலாத் தன் கொடிய துயரை நைய்ந்த குரலில் சொல்லத் தொடங்குகிறார். ரெட்பானா பிரதேசத்ததின் முற்பகுதியில் அவர் குடியிருந்தார். எறிகணை வீச்சில் இருந்து தப்புவதற்காக அங்கு மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். அதில் இவரது குடும்பமும் ஒன்று. அவ்வாறு இவரது குடும்பம் ஓடி வந்து கொண்டிருந்த போது அகோர எறிகணைவீச்சு நிகழத் தொடங்கியதால், வீதியோரத்தில் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் வீடு இருந்தது. அந்த வீட்டுக்குள் ஒரு சிறிய பதுங்குகுழி இருந்தது. அப் பதுங்கு குழிக்குள் தாயும், தந்தையும், மூன்று பிள்ளைகளும் என இக்குடும்பம் பதுங்கிக் கொண்டது.



சிறிது நேரம் கழிந்ததும் பதுங்குழியில் இருந்த ஒரு பிள்ளை தண்ணீர் கேட்டது. தகப்பன் அவ்வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அவ்வேளை ஓர் எறிகணை அந்த சிறிய பதுங்கு குழியின் மீது வீழ்ந்து வெடித்தது. தந்தை ஓடி வந்தபோது தாயும், மூன்று பிள்ளைகளும் அச்சிறிய பதுங்கு குழியில் துடிதுடித்து இறந்தனர்.



தந்தை பின்வருமாறு சொன்னார். 'எனது கையால் எனது மூன்று பிள்ளைகளையும், எனது மனையையும் அந்த பங்கருக்குள் மூடிப்போட்டு வந்திருக்கிறேன். எப்படி ஐயா நான் தாங்குவேன். கொடிய கடவுள் என்னையேன் கொல்லவில்லை?'

மரணச்சடங்கு எதுவுமின்றி, கூட நிற்பார் யாருமின்றி, சொல்லியழ எவருமின்றி மூன்று பிள்ளைகளுக்கும், தாய்க்குமான புதைகுழி மூடப்பட்டது.



ஆனால், சில வாரங்களின் பின்பு, புதைப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணங்கள் அநாதரவாய் கிடந்த காட்சியைக் கண்ட போது புதைக்கப்பட்டோர் பாக்கியவான்களோ! என்று மனம் வியந்தது.





யாருக்காக யார் அழுவது?



'ஏமாந்துவிட்டோம் - எதிரி எம்மை ஏமாற்றிவிட்டான்' என்று காலத்துக்கு காலம் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் கூறிவருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து ஏமாறுகிறோம் என்றால் தவறு எதிரியிடம் அல்ல - எம்மிடந்தான் இருக்கிறது.



இலட்சிய வேட்கையுடன் எழுவதும், பின்பு எதிரியின் காலடியில் மூச்சையற்று வீழ்வதும் எமது வரலாறாய் உள்ளது. கானல் நீரை வானத்து தேவதைகளாக எண்ணி முன்பின் பாராது ஓடிப் போவதும், பின்பு கையறு நிலையில் வெட்கித் தலைகுனிவதும் எமது அரசியல் வாழ்வாய் தொடர்கிறது.

குறைவற்ற இலட்சியப் பற்றும், அளவற்ற தியாகமும், நிகரற்ற அர்ப்பணிப்பும் நிரம்பிய மக்கள் நாம். ஆனால் தோல்வியையும், வேதனைகளையும், தலை குனிவுகளையும் தவிர வரலாற்றில் இதுவரை வேறு எதனையும் அறுவடை செய்ததில்லை.

வீழ்ச்சிக்கும், தோல்விக்கும், துயருக்கும், இழப்புக்கும் பின்பு நாம் அதற்கான உண்மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக எதிரியை திட்டித் தீர்ப்பதிலும், விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று வரட்டு வியாக்கியானம் அளிப்பதிலும் அளப் பெரிய நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கின்றோம்.

நாங்கள் ஏன் காலம் காலமாய் தோற்கிறோம்?



ஏன் எதிரிகளின் காலடியில் கதியற்று வீழ்கிறோம்?



எங்கள் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் ஏன் வீண் போகின்றன?



ஏன் எந்த வெற்றியையும் அடையவோ அன்றி, அடைந்தவற்றைத் தக்க வைக்கவோ முடியாதவர்களாய் இருக்கிறோம்?



தோல்விகளுக்கான பொறுப்புக்களை எதிரியில் சுமத்துவதா?



அல்லது நாங்கள் ஏற்பதா?



யார் பொறுப்பு?



இத்தகைய கேள்விகளுக்கு நாம் நியாயபூர்வமாகவும், நாகரீகமாகவும் பதில் காணத் தவறுவோமேயானால் தோல்விகளை இன்னும் நூற்றாண்டுக் கணக்கில் காவிச்செல்ல நேரும். அதற்காக வரலாறு எம்மை எள்ளி நகையாடும்.

வன்னிப் படுதோல்வியும், வன்னி இனப்படுகொலைகளும் 21 ஆம் நூற்றாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தையும், ஒரு புதிய படிப்பினையையும் வரலாற்று அரங்கில் தோற்றுவித்துள்ளது.



ஈழத்தமிழ் மக்களின் நூற்றாண்டுக் கணக்கான சங்கிலித் தொடர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்று சர்வதேச அரசியல் பற்றிய பார்வையும், பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கை பற்றிய நோக்கு நிலையும் நூற்றாண்டுக் கணக்காய் தமிழ் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பது.



முள்ளிவாய்க்காலில் இனவாதமும், சர்வதேச சக்திகளும் ஒரு பரிசோதனையை நடாத்தி முடித்துள்ளன. இதனை ஓர் உள்நாட்டு பரிமாணத்தில் மட்டும் விளங்காது சர்வதேச அரசியல் ஒழுங்கிலும், 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற படச்சட்டக் கட்டுக்குள்ளும் வைத்து விளங்க வேண்டிய அவசியம் எம்முன் உண்டு.



எல்லாவற்றுக்கும் அப்பால் எம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் அடுத்த கட்ட வரலாற்றை காவிச் செல்லப் போகிறது. எனவே எஞ்சியிருப்பதைப் பற்றிய மதிப்பீடும், காவக்கூடிய சுமையும், செல்லக் கூடிய தூரமும், செல்வதற்கான வழிவகைகளும், செல்வதற்கேற்ற ஏதுக்களும் பற்றிய கணிப்பீடு மிகவும் சரியாக அமைய வேண்டும். இவற்றின் அடிப்படையில் யதார்த்தபூர்வ அடியெடுப்புடன் மட்டுமே நாம் பயணிக்க முடியும்.

வன்னிப் பெருநிலத்தில் எல்லாவகைப் பரிசோதனைக் களமாகவும் எங்கள் மக்கள் ஆக்கப்பட்டார்கள். அக்கினிக் குண்டுகளுக்கு எங்கள் மக்கள் இரையானார்கள்.



இறந்துபட்டோர் பற்றிய துயரம் ஒருபுறமும், அக்கினிக் குண்டுக்கு ஆகுதியாய் இறக்கப் போகின்ற இனியவர்கள் பற்றிய துயரம் இன்னொரு புறமுமாய் வன்னி வாழ் மக்கள் தங்கள் துன்ப துயரங்களை சுமந்தார்கள். என்நெஞ்சில் கனக்கும் துன்பங்களையும், துயரங்களையும் நான் எழுத்தில் வடிப்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டும் இருப்பதற்கல்ல. இத் துன்பத்துக்கு முடிவுகட்ட வேண்டிய தீர்வு காணும் பொறுப்பின் பொருட்டுமாகும்.



என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு குடும்பத்தின் காலம் ஓராண்டு மட்டுமே. ஆயினும் அக்குடும்பம் என் இதயத்தில் பதித்த தாக்கம் பெரிது. அவள் க.பொ.த. உயர்தர மாணவி. மிகவும் அழகாகவும் துடுக்காகவும் இருப்பாள். அவள் பிறந்த அன்று அவளின் தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காக்களும், இரண்டு அண்ணாக்களும் இருந்தனர். தந்தை அவளை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவளது ஓர் அக்கா யாழ் பல்கலைக்கழக பட்டதாரி. அவள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணிபுரிந்தாள். மற்றைய அக்கா மணமாகி விட்டார். ஓர் அண்ணன் கடற்புலிப் போராளி. மற்றைய அண்ணன் க.பொ.த. உயர்தரம் கல்வி கற்றுக்கொண்டிருந்தான்.

இவளது ஆசை தான் ஒரு மருத்துவராய் வரவேண்டும் என்பது. மிகவும் கெட்டிக்காரி. வெட்டொன்று துண்டிரண்டாய் பேசும் இயல்புள்ளவள். ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய அறிவிருந்தது. எல்லோருக்கும் இவளே வீட்டில் செல்லம். ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பில் குடும்பத்தில் இன்னொருவர் இணைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. தாயின்றி தாம் செல்லமாக வளர்த்த இவளை போராளியாக்க யாரும் தயாராய் இருக்கவில்லை. மற்றைய அண்ணன் தங்கையைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக போராளியாகினான்.



இப்போது குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகளும் போராளிகள் ஆகிவிட்டனர். ஆனால் அண்ணன் போராளியானது தங்கையையும், ஏனைய சகோதரிகளையும் பெரிதும் வாட்டியது. இப்போது இரு அண்ணன்களும் போராளிகள் என்ற போராளி அட்டை கையில் இருப்பதால் இவள் வெளியே நடமாடுவது சாத்தியப்பட்டது. இந்நிலையில் அவள் அவ்வப்போது என்னைப் பார்க்கவும், என்னுடன் ஏதாவது பேசி ஆறுதல் பெறவும் வருவாள். இவளது பட்டதாரி அக்கா என்னைக் கண்டதும் தன் போராளித் தம்பிமாரைப் பற்றி சொல்லிக் கண்கலங்கத் தொடங்குவாள்.



தற்போது தொடர்ச்சியான இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்களே ஓரிடத்தில் தங்கலாம் எனும் நிலை. இப்போது நாம் இடம் பெயர்ந்து சுதந்திரபுரத்தில் அரசாங்கம் அறிவித்த 'பாதுகாப்பு வலயத்தில்' இருக்கிறோம். உணவு, நீர், கழிப்பிட வசதியின்மை என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஓயாது கூவி விழும் எறிகணை வீச்சுக்கள்.



இந்த எறிகணையில் ஒன்று இவளது கூடார வீட்டின் மீது வீழ்ந்தது. தந்தையும் இவளும் காயமுற்றனர். காயமுற்ற தந்தையையும், தங்கையையும் நாடி பட்டதாரி அக்கா ஓடிப் போகிறாள். ஒரு எறிகணை அவளுக்கென்று ஏவினாற் போல அவளுயிரைப் பலிகொண்டது.



சுதந்திரபுரத்தில் வைத்தியசாலைக்கு அருகே குடியிருந்த எனக்கு இச் செய்தி கிடைத்ததும் நண்பர்கள் சிலருடன் இவர்களது வீட்டுக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் மணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகாத ஓர் ஆசிரியையின் துணைவன் சில நாட்களுக்கு முன் எறிகணை வீச்சில் இறந்து விட்டார் என்றும் அவரது வீடு அந்த வழியில் இருப்பதை அறிந்து அந்த வீட்டுக்குச் செல்கிறோம். அவள் தனது துணைவனின் கோர மரணத்தைச் சொல்லி கதறியழும் காட்சி எமது நெஞ்சைக் குடைந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாதவாறு தனது நீண்ட காலக் காதலையும், பெரும் போராட்டத்தின் பின்பான தனது திருமணத்தையும் சொல்லி, அது நிலைக்காது போன வேதனையை அவள் தன் கதறலால் வெளிப்படுத்திய போது இந்தப் பூமியே திரண்டழுவது போல் எனக்கிருந்தது.



எம் பயணம் எறிகணை வீழ்ந்த வீட்டை நோக்கி நகர்கிறது. அந்த துடுக்கான அழகி காயத்துடனும், துவண்ட உருவத்துடனும் தன் அக்காவின் இழப்பை எண்ணிக் கதறியழுகிறாள். அவளின் மனத்தில் அவளின் தந்தைக்குரிய ஸ்தானம் எனக்கிருந்தது. அவளின் திறமையைப் பாராட்டுவதிலும், அவளை ஊக்குவிப்பதிலும் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. இப்போது அந்த துயர்தோய்ந்த முகத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கேற்பட்டது.



என்னைக் கண்டதும் தன்னிடம் இருந்த சக்திகள் அனைத்தையும் வரவழைத்து ஓவென்று கதறியழுதாள். 'ஐயோ! அக்கா தானே எனக்கு அம்மா. உங்களுக்கு தெரியும் தானே - அக்கா என்மீது உயிரையே வைத்திருத்தாள் என்று. என்னைக் காப்பாற்ற வந்துதானே அக்கா சாகவேண்டி வந்தது. ஐயோ நானும் சாகப்போறன்' என்று என்முன் அவள் கதறிப் புழுவாய்த் துடித்த காட்சி என் கண்முன் இன்னும் படமாய் உள்ளது.



அங்கிருந்து நான் கூட வந்தவர்களுடன் வீடு திரும்புகிறேன். அப்போது வழியில் தெரிந்த இன்னொரு குடும்பத்தினர் என்னைக் கண்டு மறிக்கின்றனர். நான் அவர்களுடன் பேசிக்கொள்ள என்னுடன் வந்தவர்கள் வைத்தியசாலையில் காயப்பட்டோருக்கு உதவுவதற்காக முன்னே செல்கிறார்கள். சிறிது நேரம் கழிந்து விட்டது. எம்மைக் கடந்து சென்ற ஓர் எறிகணை சுமாராக 200 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்தது. நான் பேசுவதை நிறுத்திவிட்டு எறிகணை வீழ்ந்த இடம் நோக்கி நகர்கிறேன். எட்டு அல்லது ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். தாய் கதறியழுகிறாள்.



மீண்டும் ஓர் எறிகணை தலைக்கு மேலாய் கூவிச் செல்கிறது. மக்கள் அங்கிங்காய் ஓடுகின்றனர். ஐயோ! என்ர குஞ்சுகள் என்று கூறியவாறு தாய் ஏனைய இரண்டு பிள்ளைகளை கையில் பிடித்த வண்ணம் அவர்களை பாதுகாப்பதற்காக பதுங்குழி ஒன்றை நோக்கி ஓடுகிறாள். இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் பிள்ளையை அப்படியே விட்டுவிட்டு எந்தொரு தாயும் ஓடுவாள் என்று கற்பனை செய்ய முடியாது. ஆனால் இங்கு அவள் ஓடுகிறாள்.



தன்னுயிரைக் காப்பதற்காக அவள் ஓடுகிறாள் என்று நான் நினைக்கவில்லை. தனது ஏனைய இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக அவள் ஓடுகிறாள். அன்பும் பாசமும், பொறுப்பும் பண்பாடும், கடமையும் உணர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு இரத்தமும் தசையுமான யதார்த்தத்தால் நிறுத்துப் பார்க்கப்படும் ஒரு கொடிய அனுபவம் இது.



எந்தவொரு தாயாலும் இரத்த வெள்ளத்தில் இருக்கும் தனது பிள்ளையை விட்டுவிட்டு ஓடமுடியுமா? ஆனால் இங்கு அப்படித்தான் யதார்த்தம் எல்லோரையும் வழிநடத்தியது. இறந்து போன தமது பாசத்திற்குரியவர்களின் துயரம் ஒரு புறமும், உயிருடன் இருக்கும் தம் இனியவர்களை இழந்திடுவோமோ என்ற ஏக்கம் அதை விடப் பெரிதாகவும் அலைமோதிய ஒரு துயரத்தை என் மனத்தராசில் அளந்து பார்க்க முற்படுகிறேன். இவ்வாறு சொல்லும் போது, இதனை அளக்கக்கூடிய ஒரு பொருளென்று நான் கருதவில்லை. ஆனால் அப்படி ஒன்றுடன் ஒன்று மோதிய அந்த வினோதமான அனுபவத்தை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது.

யாருக்காக யார் அழுவது? எறிகணை துரத்த நானும் ஓடுகிறேன். இறந்துவிட்ட சிறுவன் அனாதரவாய் அப்படியே கிடக்க நாங்கள் எல்லோரும் கையறு நிலையில் ஓடுகிறோம். நாம் இருக்கும் வைத்தியசாலைச் சூழலை அண்மிக்கிறேன். வாசல் நிறைய காயப்பட்டோர் அடுக்கடுக்காய் கட்டாந்தரையில் கிடத்தப்படுகின்றனர். அழுகுரலும், அவலமும், கையாலாகாத்தனமும் எம்மைக் கயிறு திரித்தாற் போல் திரித்தெடுக்கிறது.

யாருக்காக யார் அழுவது?



கஞ்சிக் கொட்டில் படுகொலைகள்


ஆயுதப் போராட்டம் உருவாகி 30 ஆண்டுகள்தான். இதனைத்தான் சிங்கள அரசு 'பயங்கரவாதம்' என்று கூறுகிறது. ஆனால் இனப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. சமாதான வழியில் அப்பிரச்சினையை தீர்க்க தமிழ்த் தலைவர்கள் முயன்ற போது, சிங்கள அரசு அதனைத் தீர்த்திருந்தால் இலங்கைத் தீவில் இரத்தக் களரி ஏற்பட்டிருக்க முடியாது.



இதனைத்தான் திரு.இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறினார். அரசு கூறும் 'பயங்கரவாதப் பிரச்சினை' தோன்ற முன்பே இனப்பிரச்சினை இருந்தது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டு அதனை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக வர்ணிப்பது தவறு என்ற அர்த்தத்தில் அமைந்திருந்திருந்த அவரின் கருத்து இங்கு மிகவும் கவனத்திற்குரியது.



அரசுகள் தமது தேவைகளுக்கு ஏற்ப போராட்டங்களை 'பயங்கரவாதம்' என்றும், 'விடுதலைப் போராட்டம்' என்றும், 'புரட்சி' என்றும், 'கிளர்ச்சி' என்றும், 'குழப்பம்' என்றும், 'நாசகாரச் செயல்கள்' என்றும் வர்ணிப்பதே சர்வதேச அரசியலில் ஒரு வழக்கமாக உள்ளது. ஓர் அணி நாடுகள் ஒரு போராட்டத்தை 'விடுதலை' என்றழைத்தால், அதன் எதிரணி நாடுகள் அப்போராட்டத்தை 'பயங்கரவாதம்' என்று அழைக்கும். ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின்பு உலகில் உள்ள எல்லா ஆயுதப் போராட்டங்களையும் 'பயங்கரவாதம்' என்ற சர்வவியாபக பொருளுக்கு உலக அரசியல் கொண்டு வந்துவிட்டது.



இப்பின்னணியில் தமிழீழ மக்களின் மீதான இன ஒடுக்குதலை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ற அணிக்குள் போட்டு அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்துயரத்தை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை, பரிதாபகரமான இனப் படுகொலையை ஒரு கணம் இந்த உலகம் தம் கண்களைத் திறந்து பார்ப்பது அவசியம்.

புதுமாத்தளனில் இருந்து வெள்ள முள்ளிவாய்க்கால் வரையான ஒரு சிறு நிலத்துண்டில் இலட்சக்கணக்கான மக்கள் 'பாதுகாப்பு வலயம்' என்ற பெயரில் அடைக்கப்பட்டாயிற்று. அரசு கூறிய 'பாதுகாப்பு வலயத்தின்' மீது எறிகணைகளும், துப்பாக்கி ரவைகளும் பாய்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு மேலால் விமானக் குண்டு வீச்சுகளும் இன்னொருபுறம் உண்ண உணவின்மை, குடிக்க நீரின்மை, அடிப்படை மருத்துவத்திற்கான மருந்தின்மை, கழிப்பறை வசதியின்மை என ஒருபுறமும், இவற்றின் மத்தியில் இயக்கத் தடையை மீறி வெளியேறத் துடிக்கும் மக்கள் என இன்னொரு புறமுமாய் அங்கு நிலைமைகள் உள்ளன.



இப்பின்னணியில் ஒரு நேர உணவுக்கு வழியில்லாத சூழல் உருவாகிவிட்டது. எறிகணை துரத்தி மக்கள் ஓடும் போது கையில் இருக்கும் ஒரு பிடி அரிசியை எடுத்துக் கொண்டு ஓடத்தவறினால் உணவின்றிச் சாக வேண்டிய துயரம் மறுபுறம் இருந்தது. எறிகணை வீழ்ந்து ஓடும் போது ஒரு பிடி அரிசியைத் தூக்கத் தாமதிப்பவர், மறுகணம் எறிகணையில் சிக்குண்டு இறந்தோரின் பட்டியலில் வருவார். இதனைப் புரிந்து கொண்டாற்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்த கஞ்சிக் கொட்டில் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.



சுமாராக 500 மீற்றர் இடைவெளிக்கு ஒன்றாக கஞ்சிக் கொட்டில்கள் அமைக்கப்பட்டன. கஞ்சி காய்ச்சத் தேங்காய்ப் பால் இல்லை. ஆரம்பத்தில் பால்மாவைக் கஞ்சியில் கலந்து கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டு வந்தன. பின்பு பால் மாவும் இல்லாது போன நிலையில் அரிசியும், உப்பும் போட்டு கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டது. ஒவ்வொரு கஞ்சிக் கொட்டிலிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நிற்பர்.



இவ்வாறு பொக்கணையில் ஒரு கஞ்சிக் கொட்டிலில் காலை, மதியம் என இருநேரத்திற்கும் பொதுவாக பகல் 11 மணியளவில் ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமி நின்றனர். இக்கஞ்சிக் கொட்டில்களில் தாய்மார்களும், சிறுவர்களுமே கஞ்சிக்கு காத்திருப்பது வழக்கம். ஏனெனில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி வயது வந்தோர் மறைவிடங்களில் ஒதுங்கியிருப்பர். இதனால் இக்குழந்தைகளும், தாய்மார்களும் நிரம்பி வழிந்த இக்கஞ்சிக் கூடமே எதிரியின் எறிகணைக்கு இலக்காகப் போகிறது.



வானத்தில் ஒரு வேவு விமானம் இதனைப் படம் எடுத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. தெளிவாக அவர்களுக்கு இங்கு குழுமியிருப்பது குழந்தைகளும், தாய்மார்களும் தான் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அந்த அரக்கத்தனமான கண்கள் எவ்வித இரக்கமும் இன்றி இலக்குத் தவறாது முதலாவது எறிகணையை வீசியது. குழந்தைகளும், தாய்மாரும் உடல் சிதறி மாண்டனர்.



எறிகணை வீசுவதில் ஒரு தந்திரத்தை எதிரி பயன்படுத்தி வந்தான். அதாவது முதலாவது எறிகணை வீழ்ந்து சுமாராக 5 நிமிடங்களுக்கும், 10 நிமிடங்களுக்கும் இடையேயான இடைவெளியில் இரண்டாவது எறிகணை அவ்விடத்தில் வீழ்ந்து வெடிக்கும். ஏனெனில் முதலாவது எறிகணை வீழ்ந்ததும் காயப்பட்டோரைத் தூக்குவதற்கென சற்று நேரத்தில் மக்கள் கூடுவர். அந்த நேரம் அவ்வாறு காயப்பட்டோரைக் காப்பாற்ற வருவோரைக் குறிவைத்தே இரண்டாவது எறிகணை வீசப்படும்.



ஆனால் இங்கு எதிரி தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டான். அதிகம் மக்கள் குழுமியிருந்ததனால் மக்கள் கூட்டம் கலைய முன்பே அடுத்தடுத்து இரண்டு எறிகணைகளையும் கணப்பொழுது இடைவெளியில் எதிரி வீசினான். இதில் 50க்கு மேற்பட்டோர் அவ்விடத்திலேயே மாண்டனர். காயப்பட்டோர் தொகை இன்னும் அதிகம். இவ்வாறு குழந்தைகளும், தாய்மாரும் காந்திருந்து ஏந்திச் செல்லும் கஞ்சியில்தான் அந்தக் குடும்பங்கள் முழுவதினதும் உயிர் தங்கியிருப்பது உண்டு. ஆனால் இங்கு கஞ்சிச் சட்டியோடு உயிரும் போய்விட்டது. இப்படிக் கஞ்சிக் கொட்டிற் கதைகள் பல.



இவ்வாறே சில தினங்களின் பின்பு பொக்கணை ஆரம்ப சுகாதார மையத்தினரால் குழந்தைகளுக்கென பால்மா விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் நிகழ்ந்த இந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல் தாய்மார் கைக் குழந்தைகளுடன் பால்மாவுக்கு வரிசையில் காத்திருந்தனர். இதுவும் அந்த வேவு விமானத்தின் கண்களில் படமாய்ப் பதிய நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற இராட்சத நெஞ்சங்கள் இதன் மீதும் ஓர் எறிகணையை வீசியது. டசின் கணக்கில் குழந்தைகளும், தாய்மாரும் மாண்டனர். அந்த வீதி ஓரே இரத்தாறாய் காட்சியளித்தது. இதற்கு 'மனிதாபிமான இராணுவ நடவடிக்கை' என்று சிறிதும் வெட்கப்படாது பெயர் வைத்தார்கள்.



மனித நாகரிகத்திற்கு சிறிதும் பொருந்தாத இத்தகைய கொடும் செயல்களை அரங்கேற்றித்தான் தமது இராணுவ நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்தார்கள். இதனை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அவர்கள் கூறினாலும் இது புலிகளுக்கு எதிரானது அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான ஓர் இனப்படுகொலை தான் என்பதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் மட்டும் போதுமானது.



அதாவது இத்துணைப் படுகொலைக்குப் பின்பும் இலங்கை ஒரே நாடு, ஓரே இனம், ஒரே மக்கள், ஓர் ஒற்றை ஆட்சியரசு என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது 'சுதந்திரதின' உரையில் தமிழ்த் தேசிய இன உரிமையை நிராகரித்து முழு இலங்கையையும் ஒரே சிங்கள இனமயமாக்குவதே தனது கொள்கையென தீவிர சிங்கள இனவாதம் பேசியுள்ளார். அதாவது வேறு எந்த இனத்திற்கும் இங்கு உரிமையில்லை. காகம் கூட சிங்களத்திற்தான் கரையவேண்டும் என அவர் கட்டளையிடுவாரா? அப்படி காகத்திற்கு இருக்கும் தனித்துவம் கூட, தமிழருக்கு இல்லாது போகும் துயரத்தை எந்த இராணுவ நடவடிக்கையாலும் நியாயப்படுத்த முடியாது.

உலக ஜனநாயகமும், மனிதகுல நாகரிகமும் இதனை பார்த்து வாழாதிருக்குமா? இனியும் தான் சர்வதேச சமூகம் இன ஒடுக்கு முறைக்கு ஒத்துப் போவதற்கு நியாயம் கூற முடியுமா?



அனைத்துவகை நெருக்கடிகளின் மத்தியில் 'பாதுகாப்பு வலயம்' எனும் சிறுநிலக் கொலைக் களத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அடித்துப் போடப்பட்ட குற்றுயிர்ப் பாம்பென நெளிந்து துடித்த பெருந்துயரை ஜனநாயகத்தின் பெயரால் 21ஆம் நூற்றாண்டு மனித குல நாகரிகம் எப்படிப் பதிவு செய்யப் போகிறது?

ஒரு வேளை உலகளாவிய ரீதியில் தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு ஈழத்தமிழரை 'ஜினி பிக்' (Guinea pig) எனும் ஒரு மருத்துவ பரிசோதனைப் பிராணியாக உலகம் பயன்படுத்தியுள்ளதா எனும் துயர்மிகு கேள்விக்கு இந்த நாகரிக உலகம் பதில் சொல்லியாக வேண்டும்.





இனப்படுகொலையும் பண்பாட்டுப் படுகொலையும்

கொழும்பில் ஐ.நா. சபைக்கான பேச்சாளராய் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்ற கோர்டன் வைஸ் அளித்த தகவலின் படி, இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ள தகவல் உலகின் பார்வையை ஒருகணம் ஈழத்தமிழர் பக்கம் நோக்கித் திருப்பியுள்ளது.



ஒரு தகுதிவாய்ந்த, அங்கீகாரம் உள்ள ஒரு தலையாய சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு வெளிநாட்டவரது தகவல் என்ற வகையில் அவர் கூறியுள்ள இத்தகவல் சர்வதேச அரங்கில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதனுடன் கூடவே ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் திருமதி. நவநீதம்பிள்ளை, இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டுமென்று, ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பான தற்போதைய நிலையில் மீண்டும் வலியுறுத்தியிருப்பது அதிக கவனத்தை இலங்கைபாற் திருப்ப உதவியுள்ளது.

வெறுமனே ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்காது, இதனை ஓர் இனப்படுகொலை என்ற பரிமாணத்தில் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது சாதாரண மனித உரிமை மீறல் என்ற அளவுக்கோ அல்லது மேலெழுந்தவாரியாக ஒரு யுத்த மீறல் குற்றம் என்ற அளவுக்கோ இதனைப் பாராது, இது ஒரு திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை (Genocide) என்ற பரிமாணத்தில் பார்க்கப்படவேண்டிய அளவிற்கு இப்படுகொலை பற்றிய நிகழ்வுகள் உள்ளன.



படுகொலை செய்யப்பட்டோர் தொகை 40,000 என்று ஒரு தகுதி வாய்ந்த சர்வதேச அதிகாரியின் கூற்று வந்திருப்பது என்ற வகையில் இது ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஆகும். ஆனால் இத்தொகை இதனை விடவும் இரண்டு மடங்குக்கு மேல் என்ற உண்மையை சர்வதேச சமூகம் கண்டுகொள்ள இன்னும் அதிக தூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.



அரசாங்கத்தின் தகவலின்படி வெறும் 3,000 பேர் மட்டுமே யுத்தத்தில் சிக்குண்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் விஞ்ஞானபூர்வமான ஒரு கணக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக செய்ய முற்பட்டால் 80,000 திற்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டுகொள்வது சாத்தியம்.



கொல்லப்பட்டுள்ளவர்களின் மண்டை ஓடுகளை எண்ணி கணக்கெடுக்கலாம் என்ற நிலையில்லை. ஆனால் கொல்லப்பட்டுள்ளோரின் தொகையை கண்டறிய புள்ளிவிபர முறையில் இடமுண்டு.



நேரடியாக நான் வன்னியில் பணிபுரிந்த அரசாங்க அதியுயர் அதிகாரிகளுடன் வன்னியில் வைத்துப் பேசியுள்ளேன். அதில் அத்தகைய ஓர் உயர் அதிகாரியின் தகவலின்படி, யுத்தம் தொடங்கிய நாளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிப்பகுதியில் மொத்தம் 3,80,000 (மூன்று இலட்சத்து எண்பதாயிரம்) பேர் வாழ்ந்ததற்கான பதிவு தம்மிடம் உண்டு எனக் குறிப்பிட்டார்.



தமது நிர்வாக தேவைகளுக்கான உத்தியோகபூர்வ உள்ளுர் கணக்கெடுப்புக்களின் படி இத்தொகை கண்டுகொள்ளப்பட்டது என்றும், கொழும்பில் இருக்கும் அரசாங்கத்திடமும் இத்தொகை நிர்வாக தேவைக்காக கையளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிடார். மேலும் இத்தொகை வன்னியில் பணிபுரிந்த அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



இக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி சுமாராக 2,70,000 பேர் அகதி முகாங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றோர் தொகை வெறும் 3,000 பேர்தான். அத்துடன் போராளிகள் என்றதன் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொகை 11,000 பேர் என அரசு சொல்லுகிறது. இத்தொகை மேற்படி 2,70,000 அகதிகளின் தொகைக்கு உள்ளடங்கலானதா அல்லது புறநீங்கலானதா என்பதை அரசின் கணக்கு தெளிவுபடுத்தவில்லை.



மேலும் வன்னிக்கான பாதை மூடப்பட்ட காலத்தில் வன்னியிலிருந்து பாஸ் நடைமுறையின் மூலம் வெளியே சென்றிருக்கக் கூடிய மக்களின் தொகை ஆகக் கூடியது 10,000 பேரைத் தாண்டமாட்டாது. அதேவேளை வன்னிக்கான உள்வரவுத் தொகையும் இங்கு கணக்கில் எடுக்கப்படவேண்டும்.

இந்த 11,000 கைதிகளையும் புறநீங்கல் என்று எடுத்துக் கொண்டாலும் கூட உள்வரவுத் தொகையையும் குறைந்தது 3,000 பேர் எனக் கணக்கெடுக்கும் இடத்து, சுமாராக 90,000 பேரைக் காணவில்லை. இது வரை 7,000 பேர் வரையே கொல்லப்பட்டுள்ளதாக பக்க சார்பற்ற சர்வதேச பதிவுகள் உள்ளன. ஆனால் இந்த 40,000 என்ற தகவல் வந்தபோது மேற்படி 90,000 பேருக்கான நிகழ்தகவுகள் இங்கு கண்ணுக்குத் தெரிகின்றன.



இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், கடைசி மூன்று மாதங்களில் கொல்லப்பட்டோர் தொகைதான் 40,000 பேர் என கோல்டன் வைஸ் கூறியுள்ளார். அப்படியாயின் 2006 மத்தியில் யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து 2009 மே மாதம் யுத்தம் முடிந்த வரையான காலத்தில் மேற்படி 90,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்க முடியும் என்ற கணக்கு இலகுவில் நிரூபணமாகக் கூடியது.



சாதாரணமாக உயர் அரசாங்க அதிகாரிகளை பக்கசார்பற்ற முறையில் விசாரணை செய்தாலே அரசாங்கப் பதிவேடுகளின் அடிப்படையில் அல்லது வாய்முறைப்பாடுகளின் அடிப்படையில் இத் 90,000 பேர் பற்றிய விபரத்தை தெளிவுறக் கண்டுகொள்ள முடியும்.





வன்னி மண்ணில் உலகின் கதவுகளை மூடிவிட்டு, சர்வதேச நிறுனங்களையும் வெளியேற்றிவிட்டு, இப்பெரும் இனப்படுகொலை நடந்துள்ளமை 21 ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் இந்த உலக சமூகம் பதில் சொல்ல வேண்டிய ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே தற்போது 40,000 என்று வெளிவந்திருக்கும் தகவலும், பக்கசார்பற்ற விசாரணை வேண்டுமென்ற நவநீதம்பிள்ளையின் வலியுறுத்தலும் இக்கட்டத்தில் மேலும் உண்மைகளை கண்டறிவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளன.



இங்கு கண்கண்ட சாட்சிகளை வைத்துக் கொண்டு மட்டும் அரசின் இனப்படுகொலை பற்றிய எண்ணிக்கையை நாம் கண்டறிய வேண்டுமென்று இல்லை. அதற்கான சாட்சியங்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், அரசுக்கு அஞ்சி பலர் சாட்சியம் அளிக்க முன்வரப் போவதுமில்லை. களத்தில் கொல்லப்பட்டோரின் தொகையை ஒவ்வொன்றாய் எண்ணி கணக்கெடுத்தவருமில்லை. ஆதலால் மேற்படி பதிவேடுகளுக்கும், இப்பதிவுகள் பற்றிய வாய்முறைப்பாடுகளிலும் இருந்து எஞ்சியுள்ளோரின் கணக்கை வைத்துக் கொண்டு கொல்லப்பட்டோரின் கணக்கை கண்டறிவது இலகுவானது. அதன்படி அக்கணக்கு 90,000 பேர்வரை வருமென ஒரு குத்துமதிப்பீட்டுக்கு இப்போது வரலாம்.

மேற்படி இனப்படுகொலையையும் இதன் சூழலையும் நான் எனது பச்சைக் கண்களால் கண்டவன். குழந்தைகளும், பெண்களுமே இதில் அதிக தொகையில் மாண்டிருந்தனர் என்பதை தெருக்களிலும், வெளிகளிலும், குடியிருப்புகளிலும், கடற்கரை ஓரங்களிலும் நான் கண்டுள்ளேன்.



தாயைத் தேடிப் பிள்ளையும், பிள்ளையைத் தேடி தாயும் ஓடும் அவலத்தில் அவர்கள் எறிகணைகளுக்குள் இலகுவாக சிக்குண்டு விடுகிறார்கள். சிறுவர்களின் மனோநிலையில் அவர்கள் தொடர்ந்து அதிக நேரம் பதுங்கு குழிகளில் இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறிது நேரத்தில் பதுங்கு குழிகளுக்கு வெளியே வந்துவிடுவார்கள். தாய்மார் பிள்ளைகளுக்கான உணவு தேடலின் பொருட்டு அல்லது சமையலின் பொருட்டு பதுங்கு குழிகளுக்கு வெளியே அதிகநேரம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

இந்நிலையில் சிறுவர்களும், தாய்மாரும் பதுங்கு குழிகளுக்கு வெளியே நடமாடுவது அதிகம். எறிகணை வீச்சுச் சத்தம் கேட்கும்போது தாய்மார் பிள்ளைகளைத் தேடி ஓடுவதும், பிள்ளைகள் தாய்மாரை நோக்கி ஓடுவதுமான தருணங்களில் அவர்கள் இலகுவில் எறிகணைக்கு இலக்காகி விடுகிறார்கள்.


இந்நிலையிற்தான் கொல்லப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் தொகை அதிகம் என்ற கணக்கு சாத்தியமாகிறது.



இக்காலகட்டத்தில் இவ்வாறாக காயமுற்றோரின் தொகை அதிகமாகி வைத்தியசாலைகளில் நிரம்பும்போது வைத்தியசாலை இரத்தாறாக காட்சியளிக்கும். அதேவேளை அங்கு பணிபுரிந்த மருத்துவர்களின், பணியாளர்களினதும் தொண்டும், சமூகப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு அயராது பணிபுரிந்த வைத்தியர்களின் பெயர்களை என்னால் பட்டியலிட்டுச் சொல்லமுடியும். ஆனால் இங்கு நான் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.





அவர்களின் பெயர் சொல்லி அவர்களின் அரும்பெரும் பணிகளை பாராட்டும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன். நான் நேரில் அவர்களை கண்ணால் கண்டு வாயால் பாராட்டி கைகுலுக்கியுள்ளேன். நான் ஒரு குடிமகன். சாத்தியமான இடங்களுக்குச் சென்று நிலைமைகளை எனது கண்களால் காண்பதிலும், அவர்களின் துயரங்களில் பங்கெடுப்பதிலும் எனக்கு அக்கறையிருந்தது. அந்த அக்கறையினால் அவர்களை நான் நேரில் பாராட்டியுள்ளேன்.

வெளியுலக மக்களுக்கு பல தகவல்களை சொல்ல வேண்டிய ஒரு சமூகப் பொறுப்பு எனக்குண்டு. அந்த வகையில் வன்னி மக்களின் துயரங்களைப் பதிகின்ற ஒரு சிறு ஆரம்பத்தை மட்டுமே என்னால் செய்யமுடியும். இப்பொறுப்பை வேறு பலரும் தொடர்வதற்கான தொடக்கமாக மட்டும் கருதியே இதனை ஆரம்பித்துள்ளேன். இன்னும் ஓரிரு தொகுதிகளுடன் வன்னித் துயர் பற்றிய எனது பதிவுகளை நான் நிறுத்திவிடுவேன்.



இங்கு இத்துயரைப் பதியும்போது இதில் உன்னதமாகப் பணிபுரிந்த மாந்தர்களைப் பற்றிய பதிவும் அவசியம் என நான் கருதுகிறேன். பலரது அரும் பெரும் பணிகள் எதிர்கால சமூகத்திற்கும், உலகின் கண்களுக்கும் முன்மாதிரியாய் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.



குறிப்பாக மருத்துவம், சுகாதாரத்துறை சார்ந்தோரது பணிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களது பணிகளும், விரல் விட்டு எண்ணக் கூடிய அரசாங்க உயர் உத்தியோகத்தர்களது பணிகளும், பொறுப்பு வாய்ந்த தொண்டர் நிறுவனத்தோரது பணிகளும் அதிகம் கருத்தில் எடுக்கப்படத்தக்கவை.



சுதந்திரபுரத்தில் இரண்டு பெண்தாதிகள் எறிகணை வீச்சுக்கு கடமையின் போது பலியாயினர். அப்போது நான் வைத்தியசாலைப் பகுதியில் நின்றேன். தமது சக இரு பணியாளர்களும் கொல்லப்பட்ட அந்தப் பீதியையும் கடந்து அந்த வைத்தியசாலையில் மருத்துவர்களும், பணியாளர்களும் காயப்பட்டோர்களை கவனிப்பதிலேயே கண்ணாய் இருந்த காட்சி மிகவும் உருக்கமான சமூகவுணர்வு மிக்கதாக இருந்தது.



இந்த உலகம் கண்டு கொள்ளவேண்டிய முக்கியமான ஒரு விடயம் உண்டு. ஒரு சிறுநிலப் பரப்பில், அதுவும் போதிய உணவின்றி, வசதிகள் இன்றி மக்கள் இலட்சக்கணக்கில் அடைபட்டிருந்தபோது தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக அதிகமானது. ஆனால் தொற்று நோய் பற்றிய சிறுபதிவிற்கான வாய்ப்பும் அங்கு இருக்கமுடியாத அளவிற்கு சுகாதார, வைத்தியத் துறையினரது பணி மிகவும் பெரிதாக இருந்தது.



காடடர்ந்த மருத்துவ வசதி குறைந்த வன்னியில் மலேரியா, மூளை மலேரியா, டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பது இங்கு துலக்கமாகப் பெருமையுடன் பதியப்படவேண்டிய விடயம் ஆகும். உலகம் இதனை வன்னியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். எதிர்கால தமிழீழ அரசில் இவர்கள் சரிவர அடையாளம் காணப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களும் பரிசில்கள் வழங்கப்பட வேண்டியவர்களுமாவர்.




ஆங்காங்கே எங்கும் சிதறல்களாக பிரேதங்கள் காணப்படுவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உழவு இயந்திரப் பெட்டிகளில் 50 தொடக்கம் 60 வரையான பிரேதங்கள் குவியல் குவியல்களாக ஏற்றப்படுவதும், காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதும், இவ்வாறு அவர்கள் கொண்டு செல்லப்படும் போது மைதானத்தில் ஓட்டப் பந்தயத்திற்கு கோடுகள் வரைந்தாற்போல அந்தப் பாதைகளில் இரத்தக் கோடுகள் வழிநெடுங்கிலும் பதிந்திருப்பதும் மனத்தைவிட்டு அகல முடியாத துயர்நிறைந்த காட்சிகளாய் உள்ளன.



அப்பணியாளர்கள் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி அவசர கதியில் பிரேதங்களை ஏற்றிச் செல்கையில் பிரேதங்களின் கால், கை, தலை போன்ற பாகங்கள் உழவு இயந்திரப் பெட்டிகளில் தொங்குவதைப் பார்க்கும் போது, மிகப் பக்குவமாக பண்பாட்டுப் பரிமாணங்களுடன் நிகழும் வழக்கமான மரணக் கிரிகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு மனம் வெதும்பும்.



எனவே வெறுமனே இவற்றை மரணங்களாக மட்டும் பாராமல் பண்பாட்டுப் படுகொலைகளாகவும் பார்க்க வேண்டும்.

வன்னியில் இறுதிவரை நின்ற ஓர் அரசாங்க உயர் உத்தியோகத்தரின் பணிகளை நான் நேரில் கண்டேன். அவர் அதிக சமூகப் பொறுப்புடனும், சிறந்த நிர்வாகத் திறனுடனும் 24 மணிநேரமும் பணிபுரிந்தார். பலதடவைகள் நான் அவரைச் சந்தித்துள்ளேன். அவரது சமூக உணர்வும், அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வமும், அவரது நிர்வாகத் திறனும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. நான் அவரை மெய்மறந்து பாராட்டியுள்ளேன். நான் ஒரு சாதாரண குடிமகன்தான். அதில் நான் ஒரு குடிமகனாக நின்று அவரைப் பாராட்ட வேண்டிய அந்தப் பாத்திரத்தின் அளவில் நான் அவரைப் பாராட்டியுள்ளேன்.



ஆனால் எதிர்காலத்தில் அரச அதிகார அளவில் அல்லது நிறுவன அளவில் தமிழ் சமூகம் மேற்படி பணிபுரிந்த பல்வேறு துறையினரையும் அடையாளம் கண்டு எதிர்கால சமூகத்திற்கு முன்மாதிரிகளை உருவாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்குரிய முக்கியத்துவங்களை அளிக்கவேண்டும்.

துயரின் மத்தியில் மினுங்கும் விடயங்களையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மேற்படி தகுதிவாய்ந்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் உண்மையான தொகையை வெளியே கொண்டுவர உதவுவதுடன் தாம் கண்ட கேட்ட வன்னித் துயரங்களை அவர்கள் பதிவுசெய்ய வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

Thursday, 23 June 2011

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் /(மூன்றாம் பாகம்)

(மூன்றாம் பாகம்)


ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்



நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.



ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.



இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.

இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும் ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.

என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.







சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!



நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.



இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.



அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.



இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.



பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.

இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.




நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.



இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.



மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.



இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.







இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.



எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.



பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.



ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.

அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.



இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.



அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.



ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.

இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.



இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.



உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.















துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.

இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.



அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.

தொடரும்